Published : 02 Apr 2017 11:46 AM
Last Updated : 02 Apr 2017 11:46 AM

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்

ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் ஒரு குறைபாடே தவிர நோய் அல்ல. இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான பயிற்சிகளை அளித்தால், குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்கிறார் ஆட்டிச விழிப்புணர்வு பயிற்சியாளர் பாலபாரதி.

இதுகுறித்து மேலும் பேசும் அவர்,

வெளியில் இருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத குறைபாடு ஆட்டிசம். ஆட்டிச குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பர். ஆனால் சிந்திப்பதை சரியாக வெளிப்படுத்த தெரியாத/ முடியாத நிலை இருக்கும். அதனாலேயே சமூகம் அவர்களை அதிகம் கேலிக்குள்ளாக்குகிறது.

இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப் படாமலேயே இருக்கிறது. அமெரிக்காவில் 68 பேருக்கு ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார். உலகளவில் ஆண் குழந்தைகளுக்கே இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 5 ஆட்டிசக் குழந்தைகளில் நால்வர் ஆணாகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதுபற்றிய விவரம் எதுவும் இல்லை. இந்தியாவில் சுமார் 20 லட்சம் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. 1000 பேருக்கு 2 முதல் 6 பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்டிசத்துக்கான அறிகுறிகள் என்னென்ன?

* பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காமல் இருப்பது.

* கண்கள் வேறெங்காவது நிலைகுத்தி இருக்கும். எதிரில் இருப்பவருடன் நேராகப் பார்த்துப் பேச மாட்டார்கள்.

* பாவனை விளையாட்டுகளை விளையாட மாட்டார்கள். (immitation)

* தனக்கு வேண்டிய பொருளை விரல் நீட்டி சுட்டிக் காண்பிக்கத் தெரியாது.

* பொருட்களை நீளமாக, வரிசையாக அடுக்கி விளையாடுவதில் அதீத ஆர்வம் இருக்கும். (ரயில்)

* புலன்களின் உணர்வு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் இருக்கும். (குறிப்பிட்ட உணவைப் பார்த்தால் வாந்தி, இயல்பான சத்தத்தை தாங்க முடியாதது)

* ஒரு இடத்தில் நிலைகொள்ள முடியாத நிலை.

* பொதுவெளிகளில் அவர்களின் நடத்தை சிக்கலாக இருப்பது.

* மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

எப்போது கண்டுபிடிக்கலாம்?

குழந்தையின் 10-வது மாதத்திலேயே ஆட்டிசக் குறைபாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் உலக சுகாதார நிறுவனம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மீது அறிவுசார் முத்திரையைக் குத்தக்கூடாது என்று கூறியிருப்பதால் 5 வயது வரை ஆட்டிச அம்சம் இருக்கிறது என்று மட்டுமே மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்முறை பயிற்சி, பேச்சுப்பயிற்சி, அறிவுசார் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. அங்கே குழந்தைக்கு அளிக்கப்படும் பயிற்சியின்போது பெற்றோரும் உடனிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதை வீட்டுக்கு வந்த பிறகும் தொடர்ந்து செய்யப் பழக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் பயிற்சிகள் மிகவும் குறைந்த கட்டணத்துக்கு அளிக்கப் படுகின்றன. ஆனால் ஒரு பயிற்சிக்கு தனியார் மையங்கள் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றன.

பெற்றோரே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முதல் ஆசிரியர். 1 மணி நேர பயிற்சிக்குப் பிறகு 23 மணி நேரம் உடனிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி மையங்களின் விவரம்

சென்னை, முட்டுக்காட்டில் மத்திய அரசின் பல்வேறு குறைபாடுடைய நபர்களின் மேம்பாடு குறித்த நிறுவனம் (NIEPMD) இயங்கிவருகிறது. அங்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பயிற்சி அளிக்கலாம். அங்கு அனைத்து விதமான பயிற்சிகளுக்கும் ரூ.25 - 300 வரை மட்டுமே செலவாகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு அந்தக் கட்டணமும் இல்லை.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அண்ணா சாலை பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆட்டிசம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான தனியார் மையங்களே நம்பகத்தன்மையுடன் இயங்குகின்றன.

அரசின் பங்கு

* ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முறையான ஆய்வை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஆய்வு மூலம் அவர்களின் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

* ஆட்டிசம் குறித்த அரசின் நலத்திட்டங்களை சாமான்யர்களும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* மாவட்டம் தோறும் அரசு பொது மருத்துவமனைகளில் ஆட்டிசம் குறித்து பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ தாலுகாக்களுக்கும் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

* ஆட்டிச பிரச்சினை அதிகமாக இருப்பதால் போலி மருத்துவர்கள் பெருகி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய மாற்றுத் திறனாளிகளுக்கான வாரியம் (RCI) உரிய முறையில் செயல்பட வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை கல்வி இலவசம்.

அத்துடன் அவர்களின் பெற்றோருக்கு மாதமொரு முறை வீடு தேடி வந்து, வல்லுநர்கள் மன நல ஆலோசனை வழங்குகின்றனர். அத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலையை நினைத்து வேதனையே மிஞ்சுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

சமுதாயத்தின் பங்களிப்பு

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை இயல்பாக இருக்கவிட்டால் போதும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும். அவர்களைப் புரிந்துகொண்டு சமூகத்துடன் அவர்களைக் கலந்துபேச அனுமதிக்க வேண்டும். நிறுவனங்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும்'' என்கிறார் பாலபாரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x