Published : 02 Feb 2014 07:31 PM
Last Updated : 02 Feb 2014 07:31 PM
ராக்கெட் வேகத்தில் செல்லும் விலைவாசி, விளைநிலங்கள் விலைபோகும் நிலை, கால் வைக்கும் இடமெங்கும் கழிவுப் குப்பைகள் தேங்கும் அவலம் என நாளுக்கு நாள் ஏமாற்றம் காணும் நிலை இனி சீரடையும்.
காங்கிரீட் காடுகள் வரும் காலத்தில் பசுமைப் போர்வை போர்த்தக் கூடும். இது கனவல்ல, நிஜமாகி வருகிறது கோவையில்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் கழிவுகளை உரமாகப் பயன்படுத்தி, மாடி வீடுகளின் மேற்கூரையில் காய்கறிகளை வளர்த்து, பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி முன் மாதிரியாகத் திகழ்கிறது சூலூர் ஊராட்சி.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அக்.22 ம் தேதி துவங்கப்பட்ட இந்த திட்டம் மதுக்கரை, சூலூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 14 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பரிட்சார்த்த முறையில் ஆய்வு செய்ய சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் புதிய அலுவலகம் தேர்வு செய்யப்பட்டது. கட்டிடத்தின் மேற்கூரையில் 8 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கூரைத் தோட்டம் அமைக்க திட்டமிட்டு, இந்தியன் கிரீன் சர்வீஸ் திட்ட இயக்குநர் (பயிற்சி) சி.சீனிவாசன் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தார்.
புதிய முறையின் வெற்றி
அதன் பின் 2013, ஜூலை 29ம் தேதியன்று, முதல் கூரைத்தோட்டம் அமைக்கப்பட்டது. அதில் மூங்கில் கூடைகளில் பயிரிட்டு விவசாயம் செய்ய 7 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இத் தோட்டத்திற்கு சவுக்கு மரத்தாலான தாங்கி, மூங்கில் கூடையில் விதை போடுவது மற்றும் கயிறு மூலம் பந்தல் அமைக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கலங்கல், சின்னியம்பாளை யம், வானவில் மகளிர் சுய உதவிக்குழு, அரசூர் மற்றும் பதுவம்பள்ளி சரோஜினிநாயுடு மகளிர் சுய உதவிக்குழு போன்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 720 மூங்கில் கூடைகளில் பச்சை சாணி பூசி, வெயிலில் உலர்த்தி, எரு, தேங்காய் நார் பயன்படுத்தி, மண் போட்டு 3:1:1 என்ற விகிதத்தில் கலந்து கூடையில் நிரப்பி சரியான அளவில் விதைகள் போடப்பட்டது.
வெந்தயக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலாக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி, பொன்னாங்கன்னி, புதினா, சிவப்பு மற்று பச்சை தண்டு கீரை ஆகியவை பயிர் செய்யப்பட்டன. தினமும் 50 கட்டுகள் வீதம் 15 நாட்களுக்கு மேல் கீரை எடுக்கப்பட்டு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, அவரைக்காய், தட்டை, கொத்தவரை, முள்ளங்கி, நூல்கோஸ், பீட்ரூட், கேரட், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற காய்கறிகளும், பந்தல் கொடியில் பீக்கங்காய், புடலங்காய், பாவைக்காய், அவரைக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டன.
செயற்கையான முறையில் நாளுக்கு நாள், வேளாண் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேளையில், முழுவதும் இயற்கை சார்ந்த முறையில், தங்களால் இயன்ற அளவிற்கு பெண்களால் இந்த சத்தான காய்கறிகள் உருவாக்கப்படுகின்றன.
சாதாரண கழிவுகளாக நாம் தூக்கி எரியும் குப்பைகளையே உரமாகவும் பயன்படுத்தி காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டது கூடுதல் சிறப்பு.
அரசு கட்டிடங்களில் ஆரம்பித்து மக்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள இந்த திட்டம், வீட்டின் மேல்மாடிகளையும் இனி வரும் காலத்தில் பசுமைப் போர்வையாய் அலங்கரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT