Published : 01 Jan 2014 03:09 PM
Last Updated : 01 Jan 2014 03:09 PM

கோ-ஆப்டெக்ஸுக்கு 2 தேசிய விருது: 75 ஆண்டுகளில் முதல் முறையாக கிடைத்திருக்கிறது

கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக 2 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ்.

1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட, ஆசியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ். நாடு முழுக்க 200 இடங்களில் இதன் ஷோரூம்கள் செயல்படுகின்றன. 1999க்கு முன்பு வரை லாப நஷ்டமின்றி செயல்பட்ட கோ-ஆப்டெக்ஸ் அதற் குப் பிறகு நஷ்டப்பாதையில் நடைபோடத் தொடங்கியது. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக உ.சகாயம் பொறுப்பேற்ற பிறகு, கைத் தறி சேலை மற்றும் துணிகளை தயா ரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டிலிருந்து மீண்டும் லாபப்பாதைக்கு வந்தது கோ-ஆப்டெக்ஸ்.

நெசவாளர்களுக்கு ஒரு கோடி

கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் பார்த்திருக்கிறது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி! இதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி உற்சா கப்படுத்தினார் சகாயம். அடுத்த கட்டமாக, கைத் தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்திருக்கிறார். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

அதிக உற்பத்தி, சிறந்த பங்களிப்பு

இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் 2 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற கோ-ஆப்டெக்ஸ், உற்பத்திக்கான விருதை பெற்றது கடந்த 75 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் விருதுகளை வழங்கினார். விருது பெற்றதற்காக சகாயத்திற்கும், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் மாநில கைத்தறித்துறை அமைச்சர் சுந்தரராஜ் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தேசிய விருதுகள் பெற்றது குறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த சகாயம், “இந்த மகத்தான தேசிய விருதுகளை ஏழை, எளிய கைத்தறி நெசவாளிகளுக்கு அர்ப்பணிப்பதில் கோ-ஆப்டெக்ஸ் பெருமை கொள்கிறது. இந்த நிதி ஆண்டுக்கான விற்பனை இலக்கு ரூ.300 கோடி. ரூ.203 கோடி விற்பனையை எட்டிவிட்டோம். பொங்கல் திருநாளுக்குள் ரூ.70 கோடி விற்பனையை எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x