Published : 05 Jun 2017 04:46 PM
Last Updated : 05 Jun 2017 04:46 PM

அறம் பழகு 4: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் படிக்க உதவலாமே!

கூடைப்பந்து பயிற்சியாளராகப் பணிபுரிந்த போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் அருகிலுள்ள தனியார் பள்ளியில் காவலராகப் பணிபுரிந்து மகனுக்கும், மகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்கப் பாடுபடுகிறார் சென்னையைச் சேர்ந்த ராகவன்.

சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராகவனுக்கு 2015-ம் ஆண்டில் பக்கவாதம் வரும்வரை எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் குடும்பத்தின் பொருளாதார சூழலே மொத்தமாக மாறிவிட்டது.

இதுகுறித்து வேதனையுடன் பகிர்ந்துகொள்கிறார் ராகவன். ''சுமார் 15 வருடங்கள் கூடைப்பந்து பயிற்சியாளராக வெவ்வேறு பள்ளிகளில் தொடர்ந்து பணியாற்றினேன். பக்கவாதத்துக்குப் பின் என்னுடைய ஒரு கையும், காலும் செயலிழந்து விட்டன. அதனால் அருகில் உள்ள பள்ளியில் காவலராகப் பணியாற்றி எனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அடையாறு, பத்மநாபபுரம் சிஷியா மேல்நிலைப்பள்ளியில் எனக்கு வாட்ச்மேன் வேலை. மாதம் ரூ.8,000 சம்பளம். மனைவி வீட்டு வேலை செய்கிறார். 4 வீடுகளில் வேலை செய்து ரூ.6,000 பெறுகிறார். ஆனாலும் மகன், மகள் இருவரின் படிப்புச் செலவுக்கு எங்களின் வருமானம் போதவில்லை. கடந்த ஆண்டு எப்படியோ செலவை சமாளித்துவிட்டேன். இந்த முறை என்ன செய்வதென்று புரியவில்லை" என்று வானம் பார்க்கிறார்.

ராகவனின் மகன் கெளதம், அடையாறு காந்தி நகரில் உள்ள குமாரராஜா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு ரூ.15,000 பள்ளிக்கட்டணம் தேவைப்படுகிறது.

மகள் வாணி ஸ்ரீ, கொட்டிவாக்கம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு ரூ.28,600 பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

உதவ விரும்பும் உயர் உள்ளங்களுக்காகக் காத்து நிற்கிறார் ராகவன்.

ராகவனின் தொடர்பு எண்: 9551186302

அவரின் வங்கிக் கணக்கு எண்: RAGHAVAN,

Acc Number: 000201000025222,

INDIAN OVERSEAS BANK, IOBA0000002.

Adyar, Chennai.

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x