Published : 10 Nov 2014 05:34 PM
Last Updated : 10 Nov 2014 05:34 PM
நாள் முழுவதும் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிய 'தி இந்து'நாளிதழ், பத்திரமாக பாதுகாக்க வேண்டிய நாளிதழ் என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.
'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரையில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு விகாசா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் அவர் பேசியது: 'தி இந்து'நாளிதழில் வெளிவரும் செய்திகளின் தன்மை, தரம் சிறப்பாக உள்ளன. எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது கட்டுரைக்கு, கதைகளுக்கு தானே முன்னுரை எழுதுபவர். ஒரு நாவல் எப்படிப்பட்டது என்பதை அறிய, ஒரு புத்திசாலிக்கு முதல் 8 பக்கங்களே போதுமானது என்பதால்தான் நானே முன்னுரை எழுதுகிறேன் என்பார்.
அதுபோன்று பலதரப்பட்ட நபர்களையும், பலதரப்பட்ட செய்திகளையும் படிக்கச் செய்கிறது 'தி இந்து'தமிழ் நாளிதழ். எளியவரின் சேவைக்கு மதிப்பளித்து செய்தி வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன. எழுத்தாளர் ஜெயகாந்தனோடு 40 ஆண்டுகள் பழகியவரை அழைத்து, அவரைப் பற்றி கட்டுரை எழுத வைப்பது பாராட்டுக்குரியது. கேரளத்தில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களுக்கு எந்த பத்திரிகை, எந்த அரசியல் கட்சி சார்புடையது எனத் தெரியும்.
ஆனால், தமிழில் 'தி இந்து'மட்டுமே அரசியல் சார்பற்ற பொதுவான நாளிதழ் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்திரப்படுத்தி வைத்து நாள் முழுவதும் படிக்கத் தகுந்த நாளிதழாக இருக்கிறது 'தி இந்து'தமிழ் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT