Published : 20 Dec 2016 08:15 AM
Last Updated : 20 Dec 2016 08:15 AM
வீட்டு மின் இணைப்பு: பெயர் மாற்றுவதில் சிக்கல்
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கு பழைய உரிமையாளரின் கையொப்பம் பெற இயலாதபட்சத்தில் சொத்துவரி ரசீதில் செய்யப்பட்டுள்ள பெயர் மாற்றத்தின் அடிப்படையில் மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்து தர உத்தரவிட வேண்டும் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மயிலாப்பூரைச் சேர்ந்த சந்திரா என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரலில் தெரிவித்ததாவது:
வீட்டு மின் இணைப்பு பெயர்மாற்றுவதற்கு பழைய உரிமையாளரின் கையொப்பம் கேட்கிறார்கள். சிலர் வெளிநாடுகளில் வசித்து வருவது போன்ற சூழ்நிலைகள் உள்ளன. எனவே புதிதாக வீடுவாங்குபவர்கள் பெயர் மாற்ற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனடிப்படையில் மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்து தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘மின் இணைப்பு’ பெயர் மாற்றுவதற்கு பழைய வீட்டு உரிமையாளர்களின் கையொப்பம் அவசியம். ஆனால், அவர் வெளிநாடுகளில் வசிக்கும் போது அவரிடமிருந்து கையொப்பம் பெற முடியாது. எனவே அந்த சமயத்தில் நோட்டரி பப்ளிக்கிடமிருந்து சான்று வாங்கி சமர்ப்பித்தால் போதுமானது’ என்றார்.
10 ரூபாய் நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருப்பந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. இதனால் பல்வேறு வணிக நிறுவனங்களில் இந்த நாணயங்களை வாங்குவதில்லை. சில நேரங்களில் பேருந்துகளிலும் இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். வேறு சில்லறை இல்லாத பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வழியில் இறக்கி விடுகின் றனர். இதனால் பலர் அவதியுறு கின்றனர். இது தொடர்பாக நாங்கள் எவ்வளவோ எடுத்து கூறினாலும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும் என்று அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக சில வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, ரூ.10 நாணயங்கள் செல்லாது என்று வதந்தி வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நாங்கள் கொடுத்தால் வாங்குவதில்லை. நாங் கள் வாங்கி வைத்துக் கொண்டு அதனைப் புழக்கத்தில் விடமுடிய வில்லை. அதனால்தான் நாங்கள் வாங்க மறுக்கிறோம் என்றனர்.
இது குறித்து இந்தியன் வங்கி யின் மண்டல மேலாளர் சண்முக நாதனிடம் கேட்டபோது, ரூ.10 நாண யங்கள் செல்லாது என்று கூறுவது முற்றிலும் வதந்தி. இதுபோன்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து இந்தியன் வங்கியிலும் ரூ.10 நாணயங்கள் செல்லும் என்று விழிப்புணர்வு விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தியுள்ளேன். வங்கிகளில் கொடுத்தால் இந்த நாணயங்களை வாங்கிக் கொள் வார்கள். பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் இந்த நாணயங் களை வாங்கலாம். செல்லாது என்பது தவறான தகவல் என்றார்.
ஜிஎஸ்டி சாலை நடுவில் நடை மேம்பாலம் தேவை
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்துசெல்லும் வகையில் எஸ்க லேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் ஜி.மகாலிங்கம் கூறியதாவது:
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - கத்திப்பாரா பேருந்து நிலையம் இடையே உள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல முடியாதஅளவுக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் வாகனங்களும் எப்போதும் தொடர்ந்து அணிவகுத்து செல்வதால், சாலையை எளிதில் கடக்க முடியாது. மக்கள் அவசரத்துக்கு உடனடியாக மாறி செல்லவும் முடியாது. நீண்ட தூரம் நடந்து சென்று சுரங்கப்பாதை மூலம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே, ஜிஎஸ்டி சாலையில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மக்கள் கடந்து செல்லும் வகையில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்கள் பலரும் இதே கோரிக்கையை எங்களிடமும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் இருபுறமும் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன்பிறகு நிறுவனம் தேர்வு செய்து அதற் கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’’ என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT