Published : 07 Feb 2014 07:15 PM
Last Updated : 07 Feb 2014 07:15 PM

திண்டுக்கல்: 10 மாதங்களில் 80 மூத்தகுடிமக்கள் வாரிசுகளால் புறக்கணிப்பு: பராமரிக்க விரைவில் ஆதரவற்ற முதியோர் இல்லம் கட்டத் திட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாரிசுகளால் புறக்கணிக்கப்படும் மூத்தகுடிமக்கள் அதிகரித்து வருவதால், அவர்களைப் பராமரிக்க சமூக நலத் துறை சார்பில் விரைவில் 150 பேர் தங்கும் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் கட்டத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரையும், மூத்தகுடிமக் களையும் பராமரித்தல் தமிழக குடும்ப வாழ்வியல் பண்பாட்டில் ஓர் அங்கமாக தொன்று தொட்டு உள்ளது. கடந்த காலங்களில் வயதில் இளையவர்கள், மூத்த குடிமக்களை மதித்து, அவர்களுடைய அனுபவம், அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்வது கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தின் ஆணிவேராக இருந்தது.

தற்போது கலாச்சார மாற்றத்தால் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

புறக்கணிக்கும் அவலம்

மேலும், குடும்பத்தில், கனவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்வதாலும், வெவ்வெறு இடங்களில் பணிபுரிவதாலும் பெற்றோர் மற்றும் முதியோர்களை இன்றைய இளைய சமுதாயத்தினரால் பராமரிக்க முடியவில்லை. சில வாரிசுகள், சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு வாரிசுகள், பெற்றோர்களைப் புறக்கணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் புகார்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக வாரிசுகளால் பெற்றோர்கள் புறக்கணிப்படுவது அதிகரித்துள்ளது. அதனால், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டத்தின் கீழ் வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக நலத் துறையில் மூத்த குடிமக்களின் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த 2009-10-ம் ஆண்டு வாரிசுகள் புறக்கணிப்பதாக ஒரே ஒரு முதியவர் மட்டும் புகார் செய்துள்ளார். 2010-11-ம் ஆண்டு 10 பேர், 2011-12-ம் ஆண்டு 11 பேர், 2012-13-ம் ஆண்டு 11 பேர், 2013-14-ம் ஆண்டில் தற்போது வரை 10 மாதங்களில் 80 மூத்த குடிமக்கள், தங்களை வாரிசுகள் கைவிட்டதாகவும், அவர்களிடம் இருந்து நிவாரணம், தீர்வு கேட்டு சமூக நலத் துறையில் புகார் செய்துள்ளனர்.

இந்த 80 பேரில், 30 பேர் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 50 பேர் மனுக்கள் விசாரணையில் உள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், மூத்தகுடிமக்கள், இந்த சட்டத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் வீடுகளில் முடங்கி உடல்நலம் பாதிப்படைந்து, உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்குத் தேவைப்படும் பராமரிப்பு, உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க தமிழக அரசு 2007-ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் பெற்றோர், மூத்த குடிமக்கள், தங்களைப் பராமரிக்க போதிய பொருளாதார வசதி, சொத்து இல்லாத நிலையில் சமூக நலத் துறையில் புகார் செய்தால் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகளிடம் இருந்து பராமரிப்புத் தொகை கோர வாய்ப்புள்ளது.

வாரிசுகள் சொத்துகளை எழுதிவாங்கிக் கொண்டு பராமரிக்காமல்விட்டால் அவர்கள் மீது பெற்றோர் சமூகநலத் துறை அலுவலரிடம் புகார் செய்தால், கோட்டாட்சியர் மூலம் விசாரித்து வாரிசுகள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகள் மீட்டுக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், இதையும் மீறி வறுமை காரணமாக வாரிசுகளால் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அவர்களிடம் நிவாரணமும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதனால், இவ்வாறு வறுமை காரணமாக வாரிசுகளால் கைவிடப்படும் மூத்த குடிமக்களைப் பாதுகாத்து, பராமரிக்க ஆதரவற்றோர் முதியோர் இல்லம் கட்ட திட்டம் தயாரித்து ஆட்சியரிடம் அதற்கான இடம் கேட்கப்பட்டுள்ளது. ஆட்சியர், முதியோர் இல்லம் அமைக்க இடம் தேர்வு செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x