Published : 10 Mar 2017 11:07 AM
Last Updated : 10 Mar 2017 11:07 AM
சாதிதான் வரதட்சிணைக்குக் காரணம்
வரதட்சிணை கொடுத்தும் வாங்கியும் நடத்தப்படும் திருமணத்தை ‘திருமண வியாபாரம்’ (Marriage of Purchase) என்று அழைக்கிறார் காந்தி. வரதட்சிணைக்கு மூல காரணம் சாதியமைப்புதான் என்பதை உணர்ந்த காந்தி இந்த மூடப்பழக்கம் அடியோடு ஒழிய வேண்டுமென்கிறார். “பெற்றோர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரமாகத் திருமணம் இருப்பது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்த வழக்கம் சாதியோடு பின்னிப் பிணைந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சில நூறு இளைஞர்கள் அல்லது இளம்பெண்களுக்குள்ளேதான் இல்லற வாழ்வின் துணை தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் வரை வரதட்சிணைக்கு எதிராக என்னதான்பேசினாலும் அது ஒழியாது. இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டுமெனில் அந்தப் பெண்களோ இளைஞர்களோ பெற்றோர்களோ சாதியின் தளைகளை அறுத்தெறிந்து வேறு சாதிகளில் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936) என்கிறார். அதுமட்டுமில்லை, இன்னும் புரட்சிகரமாக “தகுந்த துணை கிடைக்கவில்லையெனில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கத் துணியவேண்டும்” (ஹரிஜன் பத்திரிகை, 23-5-1936)
பெண் சிசுக் கொலை
தேசத்தைப் பெண்ணாகவும் நதிகளைப் பெண்களாகவும் வழிபடும், அப்படி வழிபடுவதில் பெருமை கொள்ளும் இந்த தேசத்தில்தான் பெண்சிசுக்கொலை முன்னுதாரணமில்லாத அளவில் நடைபெறுகிறது. பெண்கல்வி, தொழில்நுட்பம், சட்டப் பாதுகாப்பு போன்றவை அதிகரித்திருக்கும் இந்தக் காலத்திலும் பெண்சிசுக்கொலை நூதன வடிவங்களில் நடந்துகொண்டுதானிருக்கிறது. 2011-ல் வெளியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-ல் இருந்ததைவிட 30 லட்சம் பெண் குழந்தைகள் குறைவாகவே இருந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் நமக்குத் தெரியவருகிறது. விழிப்புணர்வு மிகுந்திருக்கும் காலத்திலேயே இப்படி என்றால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்திருக்கும்?
சுதந்திரப் போராட்டத்தின் நெடிய பயணத்தில் காந்தி எந்த விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை. பெண்சிசுக்கொலையைப் பற்றிக் கடுமையாகப் பேசியும் எழுதியும் வந்தார். பெண்சிசுக்கொலைக்கு எதிராக ராஜஸ்தானில் செயல்பட்டுவரும் அமைப்பொன்று காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகைக்கு கடிதமொன்று எழுதியது. அதைப் பற்றி காந்தி இப்படி விவரிக்கிறார்: “இந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த நாட்டில் பெண்சிசுக்கொலை போன்ற கொடிய நடைமுறை இன்றும் நிலவுவதை நம்புவதற்குக் கடினமாகவே உள்ளது. ஆனால், என் முன்னே கிடக்கும் இந்தக் கடிதம் என்னை நம்பச் செய்யும்படி வலியுறுத்துகிறது… இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கமொன்றைத் தொடர்வதற்குச் சொல்லப்படும் எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொடிய வழக்கத்தை ஒழிக்கும் செயலுக்குப் பொதுமக்களிடையே ஆதரவைத் திரட்ட வேண்டும்…. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது ஆதாரங்களைத் திரட்டுவதுதான். கடந்த ஆண்டு எந்த இடங்களிலெல்லாம் பெண்சிசுக்கொலை நடைபெற்றது என்பதையும் எத்தனை பெண்சிசுக்கள் கொல்லப்பட்டனர் என்பதையும் தெளிவாக உணர்த்தும் வகையிலான வரைபடமொன்றை உருவாக்க வேண்டும்.” (ஹரிஜன் சேவக், 4-7-1936). காந்தி இப்படி எழுதி 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாம் இன்னமும் ஆண்டுதோறும் வரைபடங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை அவமானகரமான நிலை!
சாஸ்திரங்கள்
பெண்களின் தற்போதைய நிலைக்கு சாஸ்திரங்கள்தான் மிக முக்கியமான காரணம் என்று காந்தி நம்பினார். காலப்போக்கில் சாஸ்திரங்களில் ஏற்பட்ட இடைச்செருகல் காரணமாக பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டன என்று கருதினார். மனசாட்சிக்கும் நியாயத்துக்கும் பொருந்தும் விதத்தில் சாஸ்திரங்களில் இருப்பவற்றையே காந்தி ஏற்றுக்கொள்வார். சாஸ்திரம் என்பதற்காக அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி கூறியதை ஒருவர் காந்தியிடம் சுட்டிக்காட்டுகிறார். அப்படி மனுஸ்மிருதி கூறியதை “நான் புனிதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று காந்தி பதிலளிக்கிறார்.
பர்தா என்றொரு சிறை
இஸ்லாமியச் சமூகத்தில் மட்டுமல்லாமல் வட இந்தியச் சமூகங்கள் பலவற்றிலும் பர்தா என்றொரு பழக்கம் இருப்பதைக் கண்ட காந்தி அதற்கெதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். பெண்களை ஒடுக்குவதன் மூலம் பர்தாவும் சுயராஜ்ஜியத்தின் வழியில் தடைக்கல்லாக இருந்ததை காந்தி சுட்டிக்காட்டினார். “பர்தா என்ற சுவரை எழுப்பிக் கற்பு என்ற விஷயத்தைக் காக்க முடியாது” என்றார். “பெண்ணின் கற்பு பற்றி ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது? ஆண்களின் கற்பு என்ற விஷயத்தில் பெண்கள் தலையிட முடியுமா? பெண்ணின் தூய்மையே ஆணின் தூய்மையே வெளியிலிருந்து திணிக்க முடியாது. ஒருவரின் சுய முயற்சியினால் உள்ளுக்குள்ளிருந்து வருவதுதான் ஒழுக்கத் தூய்மை” என்று காந்தி பேசினார். அது அட்டுமல்லாமல் கடவுள் அளித்த கொடைகளுள் ஒன்றான காற்றோட்டத்தைப் பெண்கள் அனுபவிக்க முடியாமல் பர்தா தடுத்துவிடுகிறது என்று காந்தி கருதினார். ஒருமுறை காந்தியைச் சந்திக்க இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் பர்தா அணிந்தபடி வந்தார். “உங்கள் சகோதரனைச் சந்திக்க வரும்போது எதற்கு முகத்திரை” என்று அவரிடம் அன்புடன் கடிந்துகொண்டார் காந்தி. இந்து பர்தாவோ முஸ்லிம் பர்தாவோ ஒரு பெண்ணின் தூய்மையைப் பாதுகாத்துவிட முடியாது. சுயக் கட்டுப்பாடும், தூய்மையான மனமும்தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான காவல் என்று காந்தி கருதினார்.
பெண்கல்வி
பெண்கள் கல்வி கற்பது அவர்களின் விடுதலைக்கு மிகவும் அவசியம் என்று கருதிய காந்தி பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் சேர்வதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். சம்பாரணில் அவர் தொடங்கிய பள்ளிகளில் பெண் குழந்தைகள் நிறைய பேரைச் சேர்த்தார். தனது ஆசிரமங்களில் இருந்த பெண்களும் முறையான கல்வியைப் பெற வழிசெய்தார். வெறும் கல்வி மட்டும் ஒரு பெண்ணுக்குத் துணிவைத் தந்துவிடாது என்பதால் துணிவு, அறம் போன்றவற்றை ஊட்டும்விதத்தில் கல்வி முறை இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். காந்தி தொடங்கிய பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் காந்தியவாதிகள் பலரும் தொடங்கி, இன்னமும் நடந்துகொண்டிருக்கும் பள்ளிக்கூடங்கள் பல பெண் கல்வியில் காந்தியின் பங்களிப்பைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.
காந்தியை மறப்பது ஏன்?
இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்கு காந்தி பெரும் பங்காற்றியிருந்தாலும் பெண் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட ஆண்களைப் பற்றி நினைவுகூரும் பலரும் காந்தியை மறந்துவிடுவது விந்தையே. பெண்கள் குறித்த காந்தியின் சிந்தனைகளில் சில, புராண உதாரணங்களை ஒட்டியதாகவும், முற்போக்கானவை இல்லை என்றும் கருதப்பட்டாலும்கூட இந்தியப் பெண்களின் விடுதலைக்கு அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு யாருக்கும் குறைந்ததில்லை. இந்தியப் பெண்களைப் பெருந்திரளாக அரசியல்படுத்தியதிலிருந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் என்று பல முன்னேற்றங்களிலும் அவரது முன்னெடுப்போ, பங்களிப்போ, ஆதரவோ, முன்னோடித்தன்மையோ இருந்தது என்பது புதுக் கண்டுபிடிப்பு அல்ல. அசைக்க முடியாத ஆதாரங்கள் பல அவரது எழுத்துக்களாகவும் பிறரின் வரலாற்று நூல்களாகவும் சட்டங்களாகவும் இருக்கின்றன. மறுக்க விரும்புபவர்கள் இவற்றை முழுக்கப் படித்துவிட்டு மறுக்கலாம்.
காந்தியப் பெண்கள்:
பெண்களுக்காக காந்தி ஆற்றிய பணிகள் குறித்து மகளிர் தினத்திலிருந்து இந்தத் தொடரில் விவாதித்துவருகிறோம். ‘என்ன, காந்தி பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டிருக்கிறாரா?’ என்ற தொனியில் பலரும் கிண்டல் செய்வதை உணர முடிகிறது. திரும்பவும் சொல்கிறேன். உலக வரலாற்றிலேயே பெருந்திரளாய்ப் பெண்களை அரசியல்படுத்தியதில் காந்திக்கு இணையாக ஒருவரைக் காட்ட முடியாது. பிற நாடுகளிலும் பல தலைவர்கள் பெண்களை அரசியல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இந்த ஒப்பீட்டைச் செய்துபார்த்தால் என் கூற்றின் உண்மை புரியும். இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தும் காந்தி குறித்தும் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒருசில நூல்களைப் படித்தாலே போதும். கூகுளில் காந்தி படங்களைத் தேடிப்பார்த்தால் அவரது கூட்டங்களில் திரண்டு வந்த பெண்களின் எண்ணிக்கை நமக்கு உறுதியான ஆதாரமாக நம் கண் முன்னால் நிற்கும். ஆனால், இதையெல்லாம் விட வலுவான ஆதாரங்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையாற்றிய பெண்களும் சாதனையாளர்களும்தான். காந்தியின் வாழ்க்கை முழுவதுமே உடன் பயணித்த, பல்வேறு காலகட்டங்களில் உடன் இருந்த பெண்கள் பலர். கஸ்தூர்பா, மிலி போலக், மீரா பென், மனு காந்தி, சுசிலா நய்யார், பிரபாவதி நாராயண் என்று இந்த பட்டியல் நீண்டது. இவர்கள் தவிர காந்தியால் தூண்டுதல் பெற்றுப் பல போராட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கெடுத்த பெண்களும், தங்கள் போராட்டங்களிலும் சாதனைகளிலும் சேவைகளிலும் காந்தியத்தைத் துணைகொண்ட பெண்களும் எண்ணிலடங்காது. அந்தப் பெண்களின் சிறு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பற்றிய நூல்களையும் இணையப் பதிவுகளையும் படித்துப் பார்த்தாலே புரியும், பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியின் பங்களிப்பு என்ன என்பது!
காந்தியப் பெண்மணிகள், காந்தியால் ஈர்க்கப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், சேவையாற்றியவர்களின் பட்டியல்:
1. தில்லையாடி வள்ளியம்மை (1898-1914).
2. அனசூயா சாராபாய் (1885 -1972).
3. ராஜ்குமாரி அம்ரித் கவுர் (Rajkumari Amrit Kaur, 1889–1964).
4. அம்புஜம்மாள் (1899-?)
5. ஆஷா தேவி அரியநாயகம் (Asha Devi Aryanayakam, 1901-1972)
6. கமலாதேவி சட்டோபாத்யாய (Kamaladevi Chattopadhyay, 1903–1988)
7. மணிபென் படேல் (Maniben Patel, 1903-1990)
8. சுசீதா கிருபளானி (Sucheta Kriplani, 1908 – 1974)
9. மிருதுளா சாராபாய் (Mridula Sarabhai, 1911 – 1974)
10. அருணா ஆஸஃப் அலி (Aruna Asaf Ali, 1909–1996)
11. உஷா மேத்தா (Usha Mehta, 1920–2000)
12. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (1926-)
13. இலா பட் (Ela Bhatt, 1933-)
14. ஜர்ண தாரா சௌத்ரி (Jharna Dhara Chowdhury, 1936-)
15. மேதா பட்கர் (1954-)
16. இரோம் ஷர்மிளா (Irom Sharmila, 1972-)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்..)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT