Published : 16 Feb 2017 11:53 AM
Last Updated : 16 Feb 2017 11:53 AM
புரட்சி, போராட்டம் என்றால் ஒவ்வொரு சித்தாந்தம் கொண்டவரும் ஒவ்வொரு வரலாற்று முன்னுதாரணத்தை முன்வைப்பார். இந்திய வலதுசாரிகள் இன்னும் பெரிதும் மகாபாரதப் போரிலிருந்து மீளவில்லை. சிலர் சிவாஜியை உதாரணம் காட்டுவார்கள். இடதுசாரிகளென்றால் ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, க்யூபப் புரட்சி போன்றவற்றை உதாரணம் காட்டுவார்கள். ஆனால், உலகின் மாபெரும் புரட்சி இந்தியாவில் நடந்திருக்கிறது. அதைப் புரட்சி என்று ஏன் பலராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்பதுதான் புரியவில்லை. கலந்துகொண்ட மக்கள்தொகை எண்ணிக்கையிலும் சரி, நடந்த விதத்திலும் சரி இதுதான் இதுவரையிலான உலகப் புரட்சிகளில் மிகவும் பெரியது, மிகவும் சிறந்தது. இந்த அளவுக்குப் பெருந்திரள் மக்கள் அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எந்த ஒரு போராட்டத்துக்கும் திரட்டப்படவில்லை. அதிலும் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏழை, எளிய மக்கள்; தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோர்தான். எப்படி சாத்தியமாயிற்று இது?
வாய்மூடி, காதுகளைத் திறந்துகொண்டு…
காந்தி இந்தியாவுக்கு வந்தவுடன் காந்தி சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகக் குதித்துவிடவில்லை. அவருடைய ஆசான்களில் ஒருவரான கோகலே, ‘இந்தியாவை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் காதுகளைத் திறந்துவைத்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இந்தியாவை ஒரு வருஷம் நன்றாகச் சுற்றிப்பார்’ என்று அறிவுறுத்தினார். 1915-ல் இந்தியாவுக்கு காந்தி நிரந்தரமாகத் திரும்பி வந்தபோது அவருக்கு வயது 45. லண்டனில் நான்கு ஆண்டுகள், தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் என்று அதுவரையிலான தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியாவுக்கு வெளியிலேயே கழித்திருந்த காந்திக்கு இந்தியாவில் வந்து பெரியதாக ஏதாவது செய்வதற்கு முன்பு இந்தியாவை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். இந்தியா முழுக்க ரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழை மக்களோடு மக்களாகப் பயணம் செய்தார். இந்தியாவெங்கும் வறுமை, பசி, பஞ்சத்தையே அவர் கண்டார். அழுக்கு படிந்த, கிழிந்த உடைகளையே பெரும்பாலான இந்தியர்கள் உடுத்தியிருக்கக் கண்டார். அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் சுகாதாரமின்மையிலும் இந்தியர்கள் பெரும்பாலானோர் தோய்ந்திருப்பதை காந்தி கண்டார். தன் இலக்கும் வாழ்வும் இவர்களே என்று அவர் மனதில் ஆழமான உணர்வு தோன்றியது.
இந்தியாவில் அதுவரையிலான சுதந்திரப் போராட்டம் என்பது சமஸ்தான ராஜாக்கள், செல்வச் சீமான்கள், பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள், இந்தியத் தொழிலதிபர்கள் போன்றவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கூட்டங்கள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப்பட்டன. காந்தி இவை எல்லாவற்றையும் வெறுத்தார். 99 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களாக இருக்கும் ஏழை எளிய மக்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் சீமான்கள் தங்கள் நலன்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இதே நிலையில் தொடர்ந்தால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவே கிடைக்காது என்று உறுதியாக நம்பினார்.
நடமாடும் நகைக்கூடங்களே…
1916-ல் காசியில் உள்ள இந்துப் பள்ளிக்கூடம், ‘இந்து பல்கலைக்கழக மத்தியக் கல்லூரி’யாக விரிவுபடுத்தப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள காந்தியும் சென்றிருந்தார். விழா நடந்துகொண்டிருந்த மூன்று நாட்களும் அங்கே காணப்பட்ட ஆடம்பரம் கொஞ்சநஞ்சமல்ல. நடமாடும் நகைக்களஞ்சியம் போன்ற மகாராஜாக்கள், மகாராணிகள், உயர் அதிகாரிகள், செல்வச் சீமான்கள் எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் செல்வச் செழிப்பின் கண்காட்சியை நடத்திக்கொண்டிருந்தார்கள். காந்திக்கு ஏற்பட்ட அருவருப்புக்கு அளவே இல்லை. நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் முறை வந்தபோது எல்லோரையும் விட்டு விளாசினார். “நேற்று இங்கே தலைமை வகித்தாரே ஒரு மகாராஜா, அவர் இந்தியாவின் வறுமையைப் பற்றிச் சொன்னார்… மகாராஜா பேசியதைப் பெரிதும் உறுதிப்படுத்தியே மற்றவர்களும் பேசினார்கள். ஆனால், வைஸிராய் நடத்திவைத்த இந்த அடிக்கல் நாட்டு விழாவின் பந்தலில் நாம் என்ன கண்டோம்? மகா படாடோபமான காட்சியையே கண்டோம். பாரிஸ் நகரிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கும் மாபெரும் நகையலங்கார நிபுணரின் கண்களுக்கு அற்புத விருந்தாக அமைந்த நகைகளின் கண்காட்சியை அல்லவா கண்டோம்! விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் இந்தச் சீமான்களுடன் கோடிக்கணக்கான ஏழை மக்களை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இந்த சீமான்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்த அணிகலன்களையெல்லாம் கழற்றிவிட வேண்டும். இவற்றை உங்கள் இந்திய நாட்டின் மக்களுக்கான தர்மச் சொத்தாகக் கருதி பரிபாலிக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் இந்தியாவுக்கு மீட்சியே இல்லை.”
காந்தி இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜாக்கள் வெளியேறினார்கள். மாணவர்கள் உற்சாகமாக காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நம்மை அடிமையாக வைத்திருப்பது ஆங்கிலேயர்தான் என்ற எண்ணத்தில் இருந்த இந்தியர்களிடத்தில் ‘ஆங்கிலேயர் மட்டுமல்ல, இந்தியாவின் ராஜாக்களும் செல்வச் சீமான்களும் சேர்ந்துதான் நம்மை அடிமைகளாகவும் ஏழைகளாகவும் வைத்திருந்தார்கள்’ என்று உணர்த்தினார் காந்தி. இந்த உணர்வு, ‘ஆஹா, நமக்காகப் பேச ஒருவர் வந்திருக்கிறார். நம்மையும் முக்கியமாகக் கருதும் ஒருவர் வந்திருக்கிறார்’ என்ற நம்பிக்கையை ஏழை எளிய இந்தியர்களிடத்தில் ஏற்படுத்தியது.
தங்களை ஒப்புக்கொடுத்த மக்கள்…
தென்னாப்பிரிக்காவிலும் காந்தியின் போராட்டங்களில் உறுதுணையாக இருந்தவர்களில் 99 சதவீதத்தினர் அங்குள்ள ஏழை இந்தியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுமே. குஜராத்திலிருந்து வந்து தென்னாப்பிரிக்காவில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்களைக் கடுமையாக வசைபாடுகிறார் காந்தி. தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்று குஜராத்திகளுக்குச் சொல்கிறார். ஒரு போராட்டத்துக்குத் தேவையான தார்மிக நியாயம் ஏழை எளியோரிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அறிந்தவர் காந்தி. அதனால்தான் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஏழை எளியோரைத் தனது போராட்டத் தளபதிகளாக ஆக்கினார். காந்தியின் கைதுக்குப் பின்னாலும் அந்தப் போராட்டங்களில் பலவும் தடையின்றித் தொடர்ந்தன. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், காந்திக்கு ஆதரவளித்த படித்தவர்கள், பணக்காரர்கள் பலரும் அவ்வப்போது காந்தியை சந்தேகித்திருக்கிறார்கள். ‘துரோகி’ பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காந்தி பின்னால் நின்ற மக்கள் அவரை கிட்டத்தட்ட ‘கடவுள் பக்தி’க்குச் சமமான மதிப்பு கொடுத்து நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை அப்படியே ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். அவர் ஏதோ செய்கிறார், அது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள். எந்த ஒரு நல்ல நோக்கத்தையும் ஒருவர் செய்ய ஆரம்பிக்கும்போது அவர் மீதும் அவரது செயல்மீதும் நன்னம்பிக்கை (Good-faith) வைப்பது மிகவும் முக்கியம். அவர் மோசமான திசையில் பிறகு செல்லலாம்; ஆயினும், ஒரு செயலைத் தொடங்குவதற்கான குறைந்த பட்ச நியாயத்தை அவருக்கு நாம் வழங்கியாக வேண்டும். ஏழை எளியோரிடமிருந்து காந்திக்கு இயல்பாகக் கிடைத்த இந்த நன்னம்பிக்கை தொடர்ச்சியான செயல்பாடுகளுக்குப் பிறகே பணக்கார, படித்த இந்தியர்களிடமிருந்து காந்திக்கு உறுதியாகக் கிடைத்தது.
மூன்றாம் வகுப்பு மனிதர்
இதற்குக் காரணம் என்ன? அவருக்கு முந்தையை காங்கிரஸ் தலைவர்களைப் போல மிடுக்கான உடல்மொழி, ஆடம்பர உடையுடன், சொகுசு காரிலோ, குதிரை வண்டியிலோ, ரயிலில் முதல் வகுப்பிலோ பயணித்து வந்து இறங்கியவர் அல்ல காந்தி. மூன்றாம் வகுப்பில் பயணித்து, கூடியவரை கார், குதிரை வண்டி போன்றவற்றைத் தவிர்த்து நடந்தே வந்து மக்களைச் சந்திப்பவர். இன்றைக்கு ஒரு கவுன்சிலரை நாம் அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது. ஆனால், காந்தி உயிரோடு இருந்தபோது (இப்போதும்கூடத்தான்) உலகிலேயே மிக வலிமையான மனிதர் அவர். அதிகாரபூர்வமான அதிகாரங்கள் ஏதும் இல்லையென்றாலும் மக்கள் மீதான முழுக் கட்டுப்பாடு அவரிடம் இருந்தது. அவரைச் சந்திப்பது என்பது நம் பக்கத்து வீட்டுக்காரரை சந்திப்பது போல் அவ்வளவு எளிது. நேரத்தைப் பின்பற்றுவதில் மிகவும் கண்டிப்பானவராக இருப்பார் என்பதால் குறுகிய சந்திப்புகளையே விரும்புவார் என்றாலும் அவரைச் சந்திப்பதென்பது அவ்வளவு எளிது.
உலகத் தொழிலாளர்களே!
காந்தி ஏதோ இந்தியாவின் ஏழை எளியோரை மட்டுமல்ல, இவ்வுலகின் கடைக்கோடி ஏழை எளிய மக்கள் அனைவரையும் தன் நேசத்தின் வட்டத்துக்குள் காந்தி கொண்டிருந்தார். இந்தியாவில் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு நடந்தபோது அதனால் இங்கிலாந்தில் உள்ள ஆலைகளில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்தார்கள். 19312-ல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்ற காந்தி தனது போராட்டத்தால் வேலை இழப்புக்குள்ளான ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்து வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் இந்தியாவின் நிலையையும் அவர்களிடம் எடுத்துக்கூறினார். அவர்கள் தங்கள் இழப்பையும் பொருட்படுத்தாமல் முழுமனதோடு காந்தியின் செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்கள்.
பிர்லா மாளிகை விருந்தினரா காந்தி?
டெல்லி சென்றாலும் வேறெங்கு சென்றாலும் அங்குள்ள ஏழை எளிய மக்களின் சேரிகளிலேயே, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளிலேயே தங்கினார். பிரிவினைக் கலவரங்களின்போது பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள், தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் வந்து குவிந்ததாலும், தவிர்க்க முடியாத சமயங்களிலும் மட்டுமே பிர்லா மாளிகையில் காந்தி தங்கினார். காந்தி பிர்லா மாளிகையில் மட்டுமே தங்கினார் என்று அவதூறு செய்யும் பலரும் அவர் சேரிகளிலும் குப்பங்களிலும் அந்த மக்களோடு மக்களாகத் தங்கிய தருணங்களை வசதியாக மறைத்தோ மறந்தோவிடுவார்கள்.
பிர்லா மாளிகையில் காந்திக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு காந்தி வரப்போகிறார் என்று தெரிந்ததுமே அந்த அறையில் உள்ள எல்லா சாமான்களும் அறைக்கலன்களும் அகற்றப்பட்டுவிடும். காந்தியைச் சந்திக்க வருபவர்கள் வெறும் தரையில்தான் அமர்ந்துகொள்ள வேண்டும். பிர்லா மாளிகையில் காந்தி தங்க நேர்ந்த தருணங்களிலும் ஒருமுறைகூட அந்த மாளிகையை ஏறெடுத்தோ, சுற்றியோ பார்த்ததில்லை.
சாம்ராஜ்யத்தை வீழ்த்திய பேராயுதம்
அவரது எளிமையான தோற்றம், எளிமையான வாழ்க்கை, அவரது தியாகம் போன்றவையே எளியோரை உடனடியாக ஈர்த்தது. இவர் நம்மில் ஒருவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவர் பின்னால் திரளச் செய்தது; போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடாமலும் தம் மீது ஏவப்படும் வன்முறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டும் போராடச் செய்தது; ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ ஒன்றை எந்த அதிகாரமும் ஆயுதமும் இல்லாத ஏழைகளைக் கொண்டே வீழ்த்தச் செய்தது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நள்ளிரவில் இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய ‘விதியுடனான ஒரு சந்திப்பு’ என்ற புகழ்பெற்ற உரையில் நேரு இப்படிச் சொல்கிறார்: ‘ நம் காலத்தின் மாபெரும் மனிதரின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கண்ணீர்த் துளிகளைத் துடைப்பதுதான்.’ நேரு குறிப்பிட்ட அந்த மாபெரும் மனிதர் தன் வாழ்நாள் முழுவதும் கணக்கற்றோரின் கண்ணீரைத் துடைத்துவிட்டிருக்கிறார். வறுமை, ஏற்றத்தாழ்வு, சாதிக் கொடுமை போன்ற தீமைகளிலிருந்து காந்தி ஏழை எளியோரை விடுவிக்காமல் சென்றிருக்கலாம்; ஆனால், அவர்கள் எல்லோரின் அச்சத்தையும் அகற்றி, இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடத் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதுதான் இந்தியர்களுக்கு காந்தி விட்டுச் சென்ற மாபெரும் சொத்து.
மந்திரத் தாயத்து!
காந்தி தரும் மந்திரத் தாயத்தைப் படித்துப் பார்த்தால் அவரது இதயத்தில் ஏழை எளியோருக்கு அவர் அளித்திருந்த இடம் என்ன என்பது நமக்குப் புரியும். "நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவை பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.''
இந்த மந்திரத் தாயத்தைக் கொண்டு இன்றைய அரசுகளையும், ஆட்சியாளர்களையும், அவர்கள் கொண்டுவரும் திட்டங்களையும், அரசியல்வாதிகளையும், தொழில் முதலாளிகளையும், அரசு-தனியார் அதிகாரிகளையும், அலுவலர்களையும் மதிப்பிட்டுப் பார்த்தால் ஏழைகளுக்கு இவர்கள் வழங்கும் இடம் எது என்பது புரிந்துவிடும். வீடுகளில், அலுவலங்களில், காவல் நிலையங்களில், சட்டமன்றங்களில், நாடாளுமன்றத்தில் அர்த்தமில்லாமல் தொங்க விடப்படும் காந்திப் படம் போலில்லாமல் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கட்டிக்கொள்ள வேண்டிய தாயத்து இது.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(நாளை…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT