Last Updated : 07 Mar, 2017 11:31 AM

 

Published : 07 Mar 2017 11:31 AM
Last Updated : 07 Mar 2017 11:31 AM

என்றும் காந்தி!- 23: ஆன்ம-அரசியல் விடுதலை

ஒருநாள் பேருந்து விட்டு இறங்கி வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு பூங்காவுக்கு முன்னால் சில இளைஞர்கள் தற்காலிக நிழற்குடை அமைத்துக்கொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். என்ன புத்தகங்கள் என்று ஆவலில் போய்ப் பார்த்தேன். ஒரு ஆன்மிகச் சிந்தனையாளரின் புத்தகங்களும் பகவத் கீதைக்கு அவர் எழுதிய உரையும் அங்கே விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. விற்பனை மட்டுமல்லாமல் அந்த வழியில் வருபவர்களிடம் பகவத் கீதையின் சிறப்பையும் தங்கள் குருவின் சிறப்பையும் (கிருஷ்ணரின் வாரிசாக அவரைக் கருதினார்கள்) எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். எப்போதுமே இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடும் இளைஞர்களிடம், அவர்கள் எந்த மதத்தின் பிரச்சாரகர்களாக இருந்தாலும், பேசிப்பார்க்கும் பழக்கமுண்டு எனக்கு. (சம்பந்தப்பட்டவர்களின் மதநம்பிக்கையில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் அவர்களின் நம்பிக்கையை ஏளனமாகப் பார்க்க மாட்டேன்.) அந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியாக, அங்குள்ள ஒரு இளைஞரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தேன். அவர் கிருஷ்ணரைப் பற்றிப் பேசினார். தங்கள் குருவைப் பற்றிப் பேசினார். ஆன்ம விடுதலையைப் பற்றிப் பேசினார். நான் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிப் பேச்செடுத்தேன். அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக காந்தியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். ஒரு கணம் தயங்கிவிட்டுப் பிறகு பேச ஆரம்பித்தார் அந்த இளைஞர், "ஒன்று சொல்லவா? ஒருத்தன் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைக் காப்பாற்றுவதற்காக ஓடிவருகிறீர்கள். தண்ணீரில் இறங்கி அவனைக் காப்பாற்றுவீர்களா, இல்லை அவனது சட்டையைக் காப்பாற்றுவீர்களா? காந்தி செய்ய முயன்றது சட்டையைக் காப்பாற்றுவதுதான்" என்றார். அவரது பிரச்சாரத்தில் குறுக்கிடும் விதத்தில் வாக்குவாதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது எனும் நோக்கத்தில், அவருடன் நான் உடன்படவில்லை என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

அவ்விடம் விட்டு அகன்று வந்த பிறகு என் மனதில் அந்த இளைஞருக்கான பதிலைத் தேடிக்கொண்டிருந்தேன். "மூழ்கிக்கொண்டிருப்பவனின் சட்டையையோ முடியையோ பிடித்து இழுத்தாலே அவனைக் காப்பாற்ற முடியுமல்லவா? காந்தி அதைத்தான் செய்தாரேயொழிய, தனியாக மிதந்துகொண்டிருந்த சட்டையைக் கரைசேர்க்க முயலவில்லை" என்பது உடனேயே எனக்குத் தோன்றிய பதிலாக இருந்தது. மேலும், இந்த வாதத்தை என் மனதில் நீட்டித்துக்கொண்டே போய்ப் பார்த்தேன். பசி பட்டினி, வறுமையால் கோடிக்கணக்கானோர் வாடிக்கொண்டிருக்கும்போது, லட்சக்கணக்கானோர் செத்துமடிந்துகொண்டிருக்கும்போது தியானத்தின் மூலமும் மதத்தின் மூலமும் இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஆன்மிகத்தின் மூலமும் விடுதலை பெறுவதென்பது எவ்வகையில் சாத்தியம்? பசியால் சுருண்டுவிழுந்துகொண்டிருப்பவனிடம் போய் “நீ யோகா செய். உனது பசி போய்விடும்” என்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும்!

எனினும், காந்தியின் இலக்கென்பது வெறுமனே அரசியல் விடுதலையோ அல்லது வெறுமனே ஆன்மிக ரீதியான மாற்றமோ அல்ல; ஆன்மிக-அரசியல் விடுதலைதான் அவரது இலக்கு. அதாவது இரண்டும் கலந்த விடுதலை. அவரைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது தனியே எங்கோ ஒரு மலைக்குப் போய் தியானம் செய்து முக்தி அடைவதில் இல்லை. அன்றாட வாழ்விலேயே ஆன்மிக ஈடேற்றம் காண வேண்டும்; காண முடியும் என்று நம்பினார் காந்தி. அதே போல் அவருக்கு அரசியல் வேறு ஆன்மிகம் வேறல்ல. ஆன்மிகத்தின் தார்மிக வலிமை கொண்டதாக அரசியல் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால்தான் தனது அரசியல் பிரச்சாரங்களின்போது வெவ்வேறு மத நூல்கள் கூறும் கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

காந்தி இந்தியாவுக்குத் திரும்பி வருவதற்கு முன்பே, தென்னாப்பிரிக்காவிலேயே இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் ஒரு விஷயத்தைக் கண்டுணர்ந்தார். இந்தியர்களை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயரின் தனித்திறனோ வலிமையோ மட்டுமல்ல, அடிமைகளாவதற்கான அனைத்து இயல்புகளையும் இந்தியர்கள் கொண்டிருந்தார்கள். ’விபத்து நிகழும் பகுதி’ என்பதுபோல் இந்தியா ‘அடிமைகள் நிகழும் பகுதி’ என்பதை ஆங்கிலேயர்கள் வெகு எளிதாகக் கண்டுகொண்டார்கள். தங்களை விட இந்தியர்கள் தாழ்வானவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நம்பியது மட்டுமல்லாமல் வெற்றிகரமாக இந்தியர்களையும் நம்ப வைத்தார்கள். ‘வெள்ளைக்காரத் துரை’ இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக ஆரம்பித்தார். மிக எளிதாக இந்தியர்கள் ‘வெள்ளைக்காரத் துரை’யிடம் வீழ்ந்துபோனார்கள். ஒருசிறிதும் துணிவு இல்லாமல் நடுக்கத்துடனே வாழ்ந்தனர். ‘அஞ்சி அஞ்சி சாவார்/ இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’என்ற பாரதியாரின் வரிகள் இந்தியரின் நிலையைத் துல்லியமாகப் படம்பிடிப்பவை. காவல் நிலையத்தில் முதல் நாள் இரவில் போலீஸ்காரரால் அடித்து நொறுக்கப்பட்ட கைதி, அடுத்த நாளில் லாக்கப் கதவு திறக்கும்போது எந்த விதமான நடுக்கத்துக்கு உள்ளாவாரோ அதே போன்றதொரு நடுக்கத்தைத் தங்கள் மனதின் அன்றாட இயல்பாகக் கொண்டிருந்தனர் இந்தியர்கள்.

இந்தியாவுக்கு வந்த காந்தி செய்ய நினைத்தது இந்த அச்சத்தை முதலும் முடிவுமாக அடித்து விரட்டுவதைத்தான். ஏனெனில் இந்தியர்கள் ஆன்ம விடுதலையோ, அரசியல் விடுதலையோ எதைப் பெறுவது என்றாலும் இந்த அச்சத்தை அகற்றாமல் பெற முடியாது என்பதை அவர் உணர்ந்தார். அச்சத்தை ஆயுதங்கள் மூலம் அகற்ற முடியாது. ஒருவர் கையில் இருக்கும் ஆயுதமே அவரின் தன்னம்பிக்கையின்மையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது; தன்னை நம்பும் ஒருவருக்கு, அசாத்திய உளத்துணிவு இருக்கும் ஒருவருக்கு ஆயுதமே தேவையில்லை என்று காந்தி நம்பினார்.

சம்பாரண் போராட்டத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே நிறைய பார்த்திருக்கிறோம். அதன் அழகு என்னவென்றால் போராட்டமே நடத்தாத போராட்டம் அது; போராட்டமே நடத்தாமல் கிடைத்த வெற்றி அது. மாறாக, சம்பாரண் மக்களை ஆயுதம் ஏந்திப் போராடுமாறு காந்தி தூண்டியிருந்தால் அவர்களை மிக எளிதாக ஆங்கிலேயர்கள் அழித்தொழித்து முன்பைவிட மோசமான நிலையில் அந்த மக்களைத் தள்ளியிருப்பார்கள். சம்பாரண் மக்களிடையே உள்ள அச்சத்தை அகற்றி அவர்களைத் தன்னிடம் பேச வைத்ததே காந்தியின் முதல் வெற்றி! நீதிமன்றத்திடமும் அதிகாரிகளுடனும் அதிகபட்ச பணிவின் மூலமாகத் தன் அதிகபட்ச எதிர்ப்பை காந்தி காட்டியபோது மக்களுக்குப் புதுப் போராட்ட வடிவம் ஒன்று உருவாகியிருப்பது தெரிந்தது. அதில் உடனடி வெற்றி கிடைப்பதற்கான அறிகுறி பிறந்ததும் நம்பிக்கை பிறந்து அவர்கள் மனதில் உள்ள அச்சம் அகன்றது. சம்பாரண் போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல போராட்டங்கள் நடத்தி இந்தியர்கள் மனதிலுள்ள அச்சத்தை விரட்டித் துணிவை விதைப்பதில் காந்தி கணிசமான வெற்றியைப் பெற்றார்.

அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் வட-மேற்கு எல்லையில் இருந்த பதானியர்கள் மிகுந்த போர்க்குணம் கொண்டவர்கள்; அவர்கள் பழங்குடிகள் வேறு. 1938-ல் அந்தப் பிராந்தியத்துக்கு வந்து அவர்களுடன் உரையாற்றுகிறார் காந்தி. காந்தியின் அகிம்சையை அவர்களிடத்தில் வேரூன்றச் செய்தவர் எல்லை காந்தி என்றழைக்கப்படும் அப்துல் கஃபார் கான் என்ற மாமனிதர். அவர் தலைமையின் கீழ் , ஆயுதங்களை விடுத்து அறவழியில் பதானியர்கள் போராட ஆரம்பித்தனர். இது காந்தியின் மகத்தான சாதனைகளுள் ஒன்று (எல்லை காந்தியின் சாதனையும்தான்). ஆயுதங்களை விடுத்து அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அந்த மக்கள் அச்சமின்மையைத் தங்கள் மனதில் உணர்ந்தார்கள். உண்மையில் ஆயுதத்தை விடுத்து நிராயுதபாணியாக எதிராளியை எதிர்த்துப் போராடுவதற்குதான் அதிக வீரம் வேண்டும். எதிராளியைத் திருப்பி அடிப்பதைவிட, எதிராளி அடிக்க வரும்போது தனது நெஞ்சைத் திறந்துகாட்டியபடி அந்த அடியை ஏற்பதற்குத்தான் அதிகத் துணிவும் வீரமும் வேண்டும். ஆயுதத்தையும், அடியையும் பொருட்படுத்தாமல் நெஞ்சைத் திறந்துகாட்டியபடி வருபவரிடம் நிச்சயம் நம்மை விட அதிகத் துணிவு இருக்கிறது என்ற எண்ணம் இதன்மூலம் எதிராளியின் மனதில் விதைக்கப்படுகிறது.

இப்படி அச்சத்தை அகற்றினால் மட்டுமே போதாது என்பதையும் காந்தி உணர்ந்தார். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் முதலான கீழ்மைகளைக் கொண்டிருக்கும் இந்திய மனதுக்கு ஆன்ம விடுதலையோ அரசியல் விடுதலையோ தேடுவதற்கான தகுதி இல்லை என்பதை காந்தி உணர்ந்தார். கறைபட்ட ஆன்மாவைக் கொண்ட ஒருவர் ஆன்ம விடுதலையை எப்படி அடைய முடியும்? தங்கள் ஆன்மா மீது உள்ள களங்கத்தைப் பெருவாரியான இந்தியர்களுக்கு உணர வைத்தவர் காந்தி! அதுவரை ஆங்காங்கே ஒருசில தலைவர்கள் மட்டுமே அக்கறை செலுத்திவந்த தீண்டாமைப் பிரச்சினையைக் குறித்து தேச அளவிலான விழிப்புணர்வை இவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்படுத்தியது காந்திதான் என்பதை யாரால் மறுக்க முடியும். பூனா ஒப்பந்தத்துக்கு முன்பு அவர் இருந்த உண்ணாவிரதத்தின் காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த கோயில்கள், கிணறுகள் பலவும் திறந்துவிடப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரமும் முடுக்கிவிடப்பட்டது.

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக காந்தி நடத்திய போரும் அப்படிப்பட்டதே. போகிற இடங்களிலெல்லாம் பெண்களைத் தனது போராட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தார். உலக வரலாற்றில் ஒரு தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பெருமளவு நிகழ்ந்தது இந்திய சுதந்திரப் போராட்டத்தில்தான் என்ற சாதனையை நிகழ்த்தியது காந்திதான்.

அது மட்டுமல்லாமல், இந்தியர்கள் ஆன்ம-அரசியல் விடுதலை பெறுவதற்கு என்னவெல்லாம் தடைகளாக இருந்தனவோ (சுயசார்பின்மை, சுகாதாரமின்மை என்று பற்பல தடைகள்) அவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் தகர்க்க முயன்றார் காந்தி. இவற்றில் முழுமையாக இல்லையெனினும் கணிசமான வெற்றியை காந்தி பெற்றார். இந்த அளவுக்கு வெற்றிபெறுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்தியாவுக்கு ஆகியிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது காந்தியின் பங்களிப்பைப் பற்றி நமக்குப் புரியும்.

ஆன்ம விடுதலையோ அரசியல் விடுதலையோ எதுவாக இருந்தாலும் இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. தன் வீட்டுக் கழிப்பறையை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை விட்டு சுத்தம் செய்பவர் ஒருபோதும் ஆன்மிக-அரசியல் விடுதலை அடைய முடியாது. ஆகவே, யோசித்துப் பார்க்கும்போது காந்தி சட்டையையும் உயிரையும் சேர்த்தே காப்பாற்ற முயன்றார்; என்ன, சட்டை ரொம்பவும் கிழிந்துபோய்விட்டிருந்தது; ஆளும் அரைகுறை உயிரோடுதான் இருந்தார். எனினும் அங்கிருந்து புத்துயிர்ப்பு பெற முடியும். அதுதான் காந்தி தேடித்தந்த ஆன்மிக-அரசியல் விடுதலை!

ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

(நாளை…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x