Published : 27 Jan 2014 01:22 PM
Last Updated : 27 Jan 2014 01:22 PM
ஏற்காடு மலைகிராமத்தில் சொந்த செலவில் ஹார்மோனியம், கீ-போர்டுகளை வாங்கி, இசையுடன் கூடிய கல்வியை கற்பித்து வரும் காக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் பாராட்டினார்.
தனியார் பள்ளி மோகம் கொண்டு, ஆங்கில ஆசையில் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களைக் காட்டிலும், அரசு பள்ளியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகம். ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் வந்துபள்ளி வேலையில் ஈடுபட்டு கஷ்டப்படுகின்றனர். அரசு பள்ளியில் மெத்த படித்த ஆசிரியர்கள் கூட கல்வி கற்பிப்பதில் மெத்தனம் காட்டுவதால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிகளை நாடிச்செல்கின்றனர்.
அரசுப் பள்ளியில் மாற்றம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்காடு தாலுகா காக்கம்பாடி எனும் மிகச் சிறிய மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 27 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளித்தலைமை ஆசிரியராக பால்ராஜ் உள்ளார். இந்தப் பள்ளியின் சுவர் முழுவதும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் வாசகங்களும், திருக்குறள் வாசகம், தமிழ் இலக்கணம், சமூக சிந்தனை கருத்துக்கள் என மாணவர்கள் படித்து நல்ல கருத்தை புரிந்து கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் பல வண்ணங்களில் வரையப்பட்டுள்ளது. கழிப்பறையில் கூட மனித உடலின் செரிமானம், உறுப்புகள் படம் வரையப்பட்டுள்ளது. பள்ளி மிகவும் தூய்மையாகவும், மரங்கள் நிறைந்தும் அதிக காற்றோட்டத்துடன் இயற்கை எழில் கொஞ்ச மன மகிழ்வுடன் மாணவ, மாணவியர் பயிலக் கூடிய வகையில் உள்ளது.
மாணவர்கள் ஆர்வம்
தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அரசுப் பள்ளியை தலைமையாசிரியர் பால்ராஜ் மாற்றியுள்ளார். பாடத்திலுள்ள செய்யுள் மற்றும் ஆங்கில கவிதைகளை பாடல் வடிவில் கற்பிக்கிறார். இதற்கென தனது சொந்த செலவில் ஹார்மோனியம், கீபோர்டு வாங்கி இசையுடன் கூடிய கல்வியை தலைமை ஆசிரியர் பால்ராஜ் கற்பித்து வருகிறார்.
இதன்மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பாக உள்ளது. மின் தடை ஏற்பட்டால், தங்கு தடையின்றி மாணவர்கள் பயில ஏதுவாக யூ.பி.எஸ். வசதியும் ஏற்படுத்தியுள்ளார். தனியார் பள்ளிக்கு நிகராக உள்ள இந்த பள்ளியில் தன் மகனையும் படிக்க வைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நவீன முறையில் புதுமையை புகுத்தி, கற்றலில் இனிமை சேர்த்துள்ள பள்ளி தலைமை ஆசிரியரின் பணியை அறிந்த, சேலம் டி.ஆர்.ஓ., செல்வராஜ், நேரில் சென்று அவரை பாராட்டி ஊக்கப்படுத்தினார். இதேபோல, மற்ற அரசு பள்ளிகளும் மாறினால், தனியார் பள்ளி மோகத்தில் இருந்து விரைவில் பெற்றோர்கள் விடுபடுவார்கள் என்பது நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT