Last Updated : 12 Feb, 2014 07:36 PM

 

Published : 12 Feb 2014 07:36 PM
Last Updated : 12 Feb 2014 07:36 PM

ஈரோட்டில் ரூ. 450 கோடியில் ஜவுளிச் சந்தை: முன்பதிவு செய்வதில் வியாபாரிகள் ஆர்வம்

ஈரோட்டில் எதிர்கால ஜவுளி வர்த்தகத்தை தீர்மானிக்கும் இடமாக, 16 லட்சம் சதுர அடியில், டெக்ஸ்வேலி ஒருங்கிணைந்த ஜவுளி வர்த்தக வளாகம் உருவாகிறது. ரூ. 450 கோடியில் அமைக்கப்படும் இந்த சந்தையில், வாரச்சந்தையில் வணிகம் செய்வதற்காக முதலிரண்டு நாட்களில் ஐந்தாயிரம் வியாபாரிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டில், கனி மார்க்கெட், செண்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் ஆகிய மூன்று இடங்களில் பிரிந்து இயங்கும் ஜவுளிச்சந்தையை ஒருமுகப்படுத்தும் வகையில், ஈரோடு, சித்தோடு அருகில், கங்காபுரம் பகுதியில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டெக்ஸ்வேலி ஜவுளி வர்த்தக வளாகம் உருவாக்கப்பட்ட்டுள்ளது. மத்திய அரசின் மானியத்துடன், 18 ஏக்கர் பரப்பளவில், 16 லட்சம் சதுர அடி கொண்ட மூன்று கட்டிடங்களில் வர்த்தக வளாகத்துடன் இந்த நவீன ஜவுளிச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு கடைகள்

இதில், தினசரி ஜவுளிசந்தை வியாபாரிகளுக்கு 11.5 லட்சம் சதுர அடியில், ஆறு தளங்கள் கொண்ட விற்பனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வியாபாரி

களின் தேவைக்கேற்ப பலவிதமான அளவுகளில், 1650 கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இங்கு, கர்சீப்பில் துவங்கி ஆயத்த ஆடைகள் வரை 14 வகையான ஜவுளி வகைகளை மொத்தமாக விற்பனை செய்ய கடைகள் வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.

அடுத்ததாக, சிறு வியாபாரிகள் பலன் பெறும் வகையில், நான்கு தளங்களில், நான்கு லட்சம் சதுர அடி கொண்ட வாரச்சந்தை வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 2,500 வியாபாரிகள் என்ற அடிப்படையில் இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். மார்ச் மாதம் கட்டிடப்பணிகள் முழுமையடையும் நிலையில், தற்போது விருப்பமுள்ள வியாபாரிகளிடம் முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

மிகப்பிரம்மாண்டமாக அமைய வுள்ள ஜவுளிச்சந்தையில், தங்களு க்கு ஒரு இடம் வேண்டும் என்ற அடிப்படையில், முதல் 2 நாட்களில், ஐந்தாயிரம் பேர் பதிவு செய்துள்ளது,வியாபாரிகளிடம் உள்ளவரவேற்பை வெளிப்படுத்தியுள்ளது. சிறு வியாபாரிகளுக்கு 6 அடி அகலமும், எட்டு அடி நீளமும் கொண்ட இடத்திற்கு, ஒரு நாளைக்கு (24 மணி நேரம்) வியாபாரம் செய்ய கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது. வியாபாரிகள் பதிவுகள் ஒரு முகப்படுத்தப்பட்டு, நேர்முகத்தேர்வு மூலம் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ஜவுளி வர்த்தக வளாகத்தில், பொருட்களை பாதுகாக்க கிடங்கு, கூரிய மற்றும் பார்சல் சர்வீஸ் வசதி, தனிப்பட்ட பேருந்து வசதி, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.மையம், வாகன நிறுத்துமிடம், தங்கும் அறைகள், டார்மெண்டரி படுக்கைகள், உணவகம் போன்றவை அமைகின்றன. மேலும், பிரமாண்டமான திறந்தவெளி அரங்குகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஜவுளிக்கண்காட்சிகளை நடத்த ஒரு லட்சம் சதுர அடியில், சர்வதேச கண்காட்சி மையம் என பல்வேறு வசதிகள் இந்த மையத்தில் அமைந்துள்ளனர்.

முன்பதிவுக்கு ஆர்வம்

இது குறித்து டெக்ஸ்வேலி ஜவுளிச்சந்தையை உருவாக்கும், ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடேட் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது:

கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில், ஈரோட்டில் மத்திய அரசின் மானியத்துடன் ஜவுளிசந்தை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. 2009ல் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், 2011ல் பணிகள் துவங்கப்பட்டன. திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.450 கோடியாகும். இதில், மத்திய அரசு ரூ. 40 கோடி மானியம் வழங்குகிறது.

ரூ. 110 கோடி வங்கி கடன் வாயிலாகவும், வர்த்தகர்களிடம் முன்பணமாக ரூ. 200 கோடியும் பெறப்பட்டுள்ளது. இது தவிர லோட்டஸ் நிறுவனம் மற்றும் யு.ஆர்.சி., கட்டுமான நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ. 50 கோடியை முதலீடாக அளித்துள்ளன. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ள வாராந்திர ஜவுளி சந்தையில், 6500 கடைகளுக்கு முன்பதிவு இரு நாட்களாக நடந்தது. இதில், 5000 கடைகளை வியாபாரிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கடைகளை பெறுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். மொத்தம் 1650 தினசரி கடைகள் கொண்ட வளாகத்தை வரும் செப்டம்பரிலும், சர்வதேச கண்காட்சி அரங்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி மற்றும் வாரச்சந்தை கடைகள் வாயிலாக, ஆண்டுக்கு ரூ. 2800 கோடி வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த சந்தை வாயிலாக, 6000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பும், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுக மான வேலை வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x