Published : 22 Jan 2014 07:53 PM
Last Updated : 22 Jan 2014 07:53 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்படும் சுவரொட்டிகளும், விளம்பரப் பதாகைகளும், சாதி மோதல்களுக்கு வித்திட்டு வருவதும், அரசு சுவர்களே கூட இதற்கு இடமளிப்பதும் குறித்து, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிளக்ஸ் கலாச்சாரம்
சமீப காலமாக, குழந்தைக்கு பெயர் சூட்டுவது முதல் திருமணம் வரையிலான அத்தனை விசேஷங்களுக்கும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான மோதல்களுக்கு, பிளக்ஸ் போர்டு விளம்பரங்களே காரணமாக இருப்பதை, சமீபகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சாதி தலைவர்கள்
பெரும்பாலான போர்டுகளில், சாதித் தலைவர்களின் படங்கள் பெரிய அளவில் மின்னுகின்றன. இதை எதிர் தரப்பினர் சேதப்படுத்துவதும், இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதும் தொடர்கிறது. இந்த பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் அரசுத்துறைகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன.
இதுபோல், சுவரொட்டிகளும் மோதலைத் தூண்டும் வகையில், சாதி தலைவர்களின் புகைப்படங்களுடன் ஒட்டப்படு கின்றன. அதுவும் அரசுச் சுவர்கள், மேம்பாலங்களை இத்தகைய போஸ்டர்கள் அதிகம் ஆக்கிரமித்துள்ளன.
அரசு சுவரில் விதிமீறல்
திருநெல்வேலி கொக்கிரகுளத்தி லுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அரசைக் கண்டித்து எதிர்க் கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டி ஒட்டும் அதே நேரத்தில், ஆளுங்கட்சியினர் வாழ்த்துச் சொல்லி ஒட்டுகிறார்கள். திரைப்பட சுவரொட்டிகளும் சுவர்களை ஆக்கிரமிக்கின்றன. பல நேரங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலான வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன.
அரசு சுவர்கள், பாலங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்ற விதி இருக்கிறது. அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவற்றை கிழித்து உண்ணும் மாடுகளால், போக்குவரத்து குளறுபடிகளும் நேரிடுகிறது.
பல இடங்களில் ஆளுங்கட்சியினரின் விளம்பரங்கள் அரசு சுவர்களை நிரப்பியிருக்கின்றன. பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலக சுவரில் நிரந்தரமாகவே அ.தி.மு.க. நிர்வாகிகள் சுவர் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர். ஆண்டு முழுக்க விளம்பரங்கள் எழுத அ.தி.மு.க.வினருக்கு அரசு சுவர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவே இதை கருத முடிகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும், தற்போதே சுவர்களில் இடம்பிடிக்க தொடங்கிவிட்டனர்.
முற்றுப்புள்ளி எப்போது?
இதுபோல் மின்கம்பங்கள், பி.எஸ்.என்.எல். கம்பங்கள், பஸ் நிலையங்கள், பயணிகள் நிழற்குடைகள், பாழடைந்த கட்டிடங்கள், புதிய கட்டுமானங்கள் நடைபெறும் இடங்கள் என்று எந்த இடங்களையும் விட்டுவைக்காமல் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
அரசுத் திட்டங்கள், அரசுத்துறைகளில் வழங்கப்படும் சலுகைகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வு வாசங்களை அரசுச் சுவர்களில் எழுதி வைத்திருந்தாலும், அவற்றை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இத்தகைய போஸ்டர் கலாச்சாரமே சாதி மோதலுக்கு வித்திடுகிறது. பொங்கல் விழாவின்போது, திருநெல்வேலி அருகே சிவத்திப்பட்டியில் விளம்பரப் பலகை எரிக்கப்பட்ட விவகாரம், இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர போர்டுகளை அகற்ற, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் நடவடிக்கை எடுத்தார். இதுபோல் அரசுச் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டி அசிங்கப்படுத்தும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT