Published : 08 Feb 2014 02:55 PM
Last Updated : 08 Feb 2014 02:55 PM

மானாமதுரை அருகே குடிநீர் இன்றி 20 கிராம மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை ஊராட்சி ஒன்றியம், சின்னக்கண்ணனூர் உள்பட 20 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் 15 தினங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை அடுத்த வேதியரேந்தல் அருகே வைகை ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேதியரேந்தல் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்கள் பயன்பெறுகின்றன.

இத்திட்டம் ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேதியரேந்தல் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் சின்னக்கண்ணணூர் ,சோமாத்தூர், புளிக்குளம், மானாங்காத்தான் உள்பட 20 கிராமங்கள் பயன்பெறுகின்றன.

இந்த கிராமங்களில் கடந்த 15 தினங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகிறார்கள். இது குறித்து சின்னக் கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் கூறியதாவது:

கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் 10 லிட்டர் குடிநீர் கேனை ரூ.30-க்கு வாங்குகிறோம். மற்ற அனைத்துக்கும் உப்பு நீரைத் தான் பயன்படுத்துகிறோம் என்றார். சின்னக்கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படிக்கிறோம். தற்போது குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வருகிறோம். தற்போது பள்ளியில் சத்துணவு சமையல் உப்புத் தண்ணீரில்தான் நடைபெறுகிறது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கபூபதி கூறியதாவது:

சின்னக்கண்ணணூர் கிராமம் சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அடுத்து விருதுநகர் மாவட்டம் தொடங்குகிறது. இக்கிராமத்தில் ஏற்கனவே வறட்சியால் விவசாயம் பொய்த்துவிட்டது. பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் கடந்த 15 தினங்களாக குடிநீர் விநியோகம் இல்லாத நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மாரிமுத்து கூறியதாவது:

வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், மேலும் இரண்டு கிணறுகளை அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். சில தினங்களில் அந்தப் பணி முடிவடைந்தால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x