Published : 24 Jun 2017 11:29 AM
Last Updated : 24 Jun 2017 11:29 AM
முதுமலை வனச் சரணாலயத்தை ஒட்டி உள்ளது மாயாறு. இங்குள்ள வனப் பள்ளத்தாக்கில் 25 எருமை மாடுகள் அழுகிய நிலையில் இறந்து கிடக்கும் விவகாரம் வில்லங்கமாகிக் கொண்டிருக்கிறது.
முதுமலை சரணாலயம் அருகே உள்ளது மசினகுடி. இதைச் சுற்றியுள்ள வாழைத்தோட்டம், ஆனைகட்டி, மாவனல்லா, மாயாறு, பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தான் பிரதான தொழில். இப்பகுதிகளின் கால்நடைகளுக்கு, அருகிலுள்ள வனங்கள்தான் ஒருகாலத்தில் மேய்ச்சல் கேந்திரம். இந்த நிலையில், வனவிலங்குகளுக்கு தொற்று நோய்கள் பரவுவதாகச் சொல்லி கால்நடைகள் வனங்களுக்குள் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.
மறுக்கும் வனத்துறை
இதனால் கொதிப்படைந்த மக்கள், வனங்களுக்குள் மேய்ந்த மாடுகளை வனத்துறையினர்தான் விரட்டிச் சென்று பள்ளத்தில் விழவைத்திருக்கிறார்கள் என்று போலீஸில் புகார் செய்தனர். ஆனால் வனத்துறையோ, ‘மேய்ச்சல் நிலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலையில் இருக்கிறது அந்தப் பள்ளத்தாக்கு அவ்வளவு தூரம் மாடுகளை ஓட்டிச் சென்று பள்ளத் தில் விழவைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ என்று மறுத்து வருகிறது. இதை ஏற்காத மக்கள், “இந்தப் பிரச்சினைக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை எனில் போராட்டத்தில் குதிப்போம்’’ என்கிறார்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கால்நடை மருத்துவர் ஒருவர், “எருமைகள் காணாமல்போன நாளில் வனத்துக்குள் எருமை மேய்த்தவருக்கும் வனவர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளை வன ஊழியர்கள் விரட்டி இருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்ட மாடுகள் வனத்தின் வேறு பகுதிகளுக்குள் சென்று விடாமல் இருக்க ‘புல்டோசர்’ கொண்டு மறித்து அவைகளை பள்ளத்தில் விழவைத்திருக்கிறார்கள். இதை நேரில் பார்த்தவர்களே இருக்கிறார்கள்’’ என்று சொன்னார்.
அப்பவும் இதுபோல நடந்தது
மசினகுடியை சேர்ந்த விவசாயி வர்கீஸ், “இரண்டு காட்டாறுகள் வந்து விழும் இந்த பகுதியை ‘கூட்டறப்பற’ (ஆறுகள் கூடும் பள்ளம்) என்று சொல்லுவோம். இதே பள்ளத்தில்தான் ரெண்டு வருசத்துக்கு முந்தி, என்னோட 9 மாடுகள் இறந்து கிடந்துச்சு. யாரோ தான் துரத்தி விழ வெச்சிருக்காங்கன்னு அப்பவும் நாங்க சொன்னத அதிகாரிகள் கேட்கல. ஆத்து வெள்ளத்துல சிக்கி விழுந்துருக்குன்னு சொன்னாங்க. இப்ப ஆத்துல தண்ணியே இல்ல. இப்பவும் 25 எருமைகள் விழுந்து செத்துருக்குன்னா இதுக்கு என்ன அர்த்தம்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்.
“வனங்களுக்குள் நுழையும் கால்நடைகளை பிடித்து வைத்து அபராதம் போடுவதுதான் வழக்கம். சமீபத்தில்கூட 40 எருமைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டார்கள். அப்படி அபராதம் விதிச்சுட்டுப் போகவேண்டியதுதானே. அதைவிடுத்து, வாயில்லா ஜீவன்களை இப்படி பள்ளத்தில் தள்ளி வதைச்சா கொல்றது? இதுக்கு உரிய நீதி கிடைக்க விலங்குகள் நலவாரியம் தாமாக முன்வந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் சிலர் குமுறுகிறார்கள்.
இந்த நிலையில், இந்த 25 மாடுகள் தவிர எஞ்சிய மாடுகளின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அதன் உரிமையாளர்கள் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டங்கள் வெடித்தன
1996-லிருந்தே இந்தக் கெடுபிடிகள் தொடங்கிவிட்ட நிலையில், 2007-ல் இப்பகுதியானது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு கெடுபிடிகள் இன்னும் அதிகமானது. வனத்துக்குள் நுழையும் கால்நடைகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் கொண்டு வந்தது வனத்துறை. இதனால், வனத் துறைக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டதுடன் போராட்டங்களும் வெடித்தன. இதனால், இப்பகுதி மக்களில் பலர் கால்நடை வளர்ப்பையே கைகழுவினர்.
இந்த நிலையில், மசினகுடியை சேர்ந்த எண்பதிற்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்குப் போய் மூன்று வாரங்கள் ஆகியும் வீடுதிரும்ப வில்லை. இவற்றை வனங்களுக்குள் தேடியபோது தான் மாயாறை ஒட்டிய வனப்பகுதியில் 500 அடி பள்ளத்தாக்கில் 25 எருமை மாடுகள், மரங்களிலும், பாறை இடுக்குகளிலும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படியும் செய்கிறார்கள்
வனத்துறையினர் மீது ஒரேமுகமாக குற்றச்சாட்டுகள் பாய்ந்தாலும், இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது. வனத்துக்குள் நுழையும் எருமை மாடுகளை சில நேரங்களில் புலிகள் வேட்டையாடி விடுகின்றன. மான்களைவிட வலுவான தீனி என்பதால் எருமை மாடுகளை விரும்பி வேட்டையாடும் புலிகள், அதன் மாமிசத்தை நாள் கணக்கில் மரங்களில் வைத்து உண்ணுகின்றன.
வனத்துக்குள் எருமை மாடுகள் சிக்காதபோது, கிராமங்களுக்குள்ளேயே வந்து அவைகளை அடிக்கின்றன புலிகள். இதனால் பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்போர், மாமிசத்தில் நஞ்சைக் கலந்து புலிகளின் வழித்தடத்தில் வைத்துவிடுகிறார்கள். நஞ்சு கலந்த மாமிசத்தைத் தின்றுவிட்டு புலிகள் செத்துப் போவதும் உண்டு. இதையெல்லாம் தடுப்பதற்காகவே வனத்துறை கடுமை காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.
இழப்பீட்டுத் தொகைக்காக திசைதிருப்புகிறார்கள்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொன்ன மசினகுடி வனச்சரகர் சடையப்பன், “புலிகள் காப்பக பகுதியில் கால்நடைகள் மேயக்கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. அதையும் மீறி கால்நடைகளை விவசாயிகள் வனத்துக்குள் அவிழ்த்து விடுகிறார்கள். தற்போது நிலவும் வறட்சி காரணமாக கால்நடைகள் போதிய தீவனம் இல்லாமல் மெலிந்துபோய் உள்ளன. இவை வனங்களுக்குள் வந்து அதுவாகவே இறந்து போவதும் உண்டு. அப்படித்தான் இந்த சம்பவமும் நடந்திருக்க வேண்டும். இறந்து கிடக்கும் எருமைகளை ஆய்வுசெய்து துறையின் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிவிட்டோம். ஆனால், உண்மை என்னவென்று தெரிந்திருந்தும் அரசிடம் இழப்பீட்டுத் தொகை வாங்கலாம் என்பதற்காக சிலர் இதை திசைதிருப்புகிறார்கள்’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT