Published : 18 Mar 2014 08:25 PM
Last Updated : 18 Mar 2014 08:25 PM

பெரம்பலூர்: வசதிகள் இருந்தும் மக்களின் வரவேற்பின்றிக் கிடக்கும் விளையாட்டு மைதானம்

இல்லை இல்லை என்று அரசை கைநீட்டி குற்றம் சொல்லும் பொதுமக்கள் இன்னொரு புறம் இருக்கிற வசதிகளை திரும்பி பார்க்காததால் அரசின் பெரும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் விளையாட்டு மைதானமும் அதையொட்டிய ஆரோக்கியத்திற்கும் பொழுது போக்கிற்குமான வசதிகளையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம்.

குளு குளு நீச்சல் குளம்...

மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 9 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கிறது மாவட்ட விளையாட்டு மைதானம். கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து விளையாட்டுக்கென மைதானத்தை ஒட்டி தனி வசதிகள் உண்டு. கூடுதல் சிறப்பாய் வெம்மை மிகுந்த பெரம்பலூருக்கான குளுகுளு நீச்சல் குளமும் உண்டு.

இத்தனை வசதிகள் இருந்தும் பொதுமக்கள் வரவேற்பின்றி மைதானம் காற்றாடுவதுதான் வேதனை. இறகுபந்து விளையாடுவதற்கென ஒரு குழு விடியற்காலையில் ஆஜராவதும், விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு பயிற்சிகளுக்கு வந்து செல்வதும், நடை பயிற்சியாளர்கள் சில சுற்றுகள் நடப்பதுமாய் காலையோடு மைதானமும் அதையொட்டிய பெரும் செலவிலான வசதிகளும் களையிழந்து போகின்றன.

முக்கியமாய் நீச்சல் குளம் ரூ.1 கோடியே 1 லட்சம் தொகையை விழுங்கிவிட்டு வீணே கிடக்கிறது. நீச்சலுக்கு என நீர் நிலைகள் இல்லாத ஊரில் தினமும் நீரை மாற்றி சுத்தம் செய்து பராமரிப்பு செய்தும், பயிற்சிக்கென ஆட்கள் வசதிகள் செய்யப்பட்டிருந்தும் ஞாயிறுகளில் ஒரு சிலர் எட்டிப்பார்ப்பது தவிர்த்து நீச்சல் குளம் கவனிப்பாரின்றிக் கிடக்கிறது. அனைத்திற்கும் முன்மாதிரியாக இருக்கும் ஆட்சியர் தரேஷ் அகமது மட்டும் அவ்வப்போது நீச்சலாட வருகிறாராம்.

போக்குவரத்து வசதியில்லை...

சகல வசதிகள் இருந்தும் மக்கள் அதிகம் வராததன் பின்னணியில் உகந்த போக்குவரத்து வசதி இல்லையென்பதை காரணமாக சொல்கிறார்கள் பொதுமக்கள். ஊருக்குள் இருந்து ஒருவர் இங்கே வந்து செல்ல வேண்டுமென்றால் ஷேர் ஆட்டோவிற்கு தலைக்கு ரூ.20 தரவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. மேலும், ஒதுக்குப்புறத்தில் போதிய காவல் வசதிகள் இன்றி இருப்பதையும் ஒரு காரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். மாலையோ அதற்கு பின்னரோ, நடைபழகவோ நடமாடவோ உரிய வசதிகள் இல்லை.

இப்படி மக்கள் சொல்லும் காரணங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சைமன்ராஜிடம் முன்வைத்தபோது அவர் பெரம்பலூர் மக்களுக்கு உற்சாகம் தரும் புதிய தகவல்களை தந்தார்.

இனி முக்கிய இடமாகும்...

“பொதுமக்கள் அதிக புழக்கமற்ற இடமாக இருந்த மைதான வளாகம் இனி ஊரின் முக்கிய இடமாக மாறப்போகிறது. மைதானத்தை ஒட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி, பாரத வங்கி, முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் என பல கட்டிடங்கள் வரப்போகின்றன. அதே போல ஒட்டியிருக்கும் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நெடுஞ்சாலையிலிருந்து ஆட்சியரகம் வழியாக ஊருக்குள் வரும் வாகனங்களுக்கான சாலை வசதி நூறடியாக மாற்றம் பெற்று வருகிறது. இதனால் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு ஆட்சியரக வாயிலிலேயே பொதுமக்களுக்கான நகர பேருந்துகள் அதிகம் கிடைக்கும். ஆகவே, விளையாட்டு மைதானத்துக்கு வந்து செல்வது என்பது மலைப்பை ஏற்படுத்தும் ஒன்றாக பொதுமக்களுக்கு இருக்காது.

விளையாட்டு மைதானமும் நவீனமாகி வருகிறது. நடைபயிற்சிக்கு என தனியாக பாதை அமைக்கப்பட்டதோடு அதில் சுமார் 33 விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதலாக மெல்லிய இசை கசியும் வகையில் விளக்கு கம்பம் தோறும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இது தவிர மைதானம் முழுக்க இரவிலும் ஒளிவெள்ளம் பாய்ச்ச உயர கம்பத்தில் பொருத்தப்படும் ஹைமாஸ் விளக்குகள் தயாராகி உள்ளன. இதனால் அந்தியிலும், கருக்கலிலும் கூட நடைபயிற்சியில் ஈடுபடுவோர் அச்சமின்றி வந்து செல்லலாம்.

பாதுகாப்பு அச்சம் வேண்டாம்...

அருகிலேயே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இருப்பதால் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை.

நீச்சல் குளத்தைப் பொறுத்தவரை இந்த கோடையில் பல புதிய அம்சங்களைப் புகுத்தி நிரந்தர வாடிக்கையாளர்களை அதிகரிக்க உள்ளோம். இதற்காக சலுகைக் கட்டணத்தில் சுமார் 1,500 குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிந்து அவர்களை தொடர்ந்து வரச் செய்வதன் மூலம் குளத்தின் பயன்பாட்டை அதிகரிக்க உள்ளோம். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளார்.

மைதானத்தை ஒட்டியே விளையாட்டு மாணவியருக்கான விடுதியும் தயாராகி இருப்பதால் காலை மாலை அவர்களுக்கான பயிற்சி இனி தொடர்ந்து நடக்கும். இவர்களோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ மாணவியர் 60 பேர் தினசரி பால், முட்டையோடு பிரத்யேக விளையாட்டு பயிற்சிகளை இந்த மைதானத்தில் பெற இருக்கிறார்கள்.

ரூ.67 லட்சத்தில் திட்டமிடப்பட்ட ஸ்கேட்டிங் மைதானம் கூடுதல் செலவினத்திற்காக சிறிய இடைவெளி விட்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதில் தற்போது மும்முரமாக வேலைகள நடந்து வருகின்றன. மைதானத்தின் உள்ளேயே டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணிகள் துவங்க இருக்கின்றன.

இப்படி சகலத்திலும் கூடுதல் வசதிகள் பெறும் விளையாட்டு மைதானம் மற்றும் அதையொட்டிய வசதிகளைக் கண்டு விளையாட்டு மைதானத்துக்கு வருவதற்கு மக்கள் இனி ஆர்வம் பெறுவார்கள் என்பது உறுதி” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x