Published : 17 Jan 2014 06:14 PM
Last Updated : 17 Jan 2014 06:14 PM
தங்களது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பிய கள்ளப்பாளையம் கிராம மக்கள், கடந்த உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டு பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு திருஞானசம்பந்தம் என்ற ஒருவரை மட்டும் நிறுத்தினர். ஓர் ஆண்டிற்குள் தங்களது கிராமத்தின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றும் நம்பினர். அவர்களது நம்பிக்கை நனவானதா?
சாமளாபுரம் பேரூராட்சியின் 15 வது வார்டு, கள்ளப்பாளையம் மற்றும் செந்தேவிபாளையம் ஆகிய இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது. இந்த இரண்டு கிராமங்களிலும் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த இரண்டு கிராமங்களும் சேர்ந்து ஊர் சார்பாக பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு நிறுத்தப்பட்டவர்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருஞானசம்பந்தம்.
ஆனால், 3 ஆண்டுகள் முடிந்த பின்னும் இன்னும் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படவில்லை என குமுறுகின்றனர் மக்கள். குப்பை அள்ளுவதிலும் ஒழுங்கில்லாததால் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. கள்ளப்பாளையம் விநாயகா நகர் பகுதியில், குடியிருக்கும் இடத்திற்கு அப்ரூவல் கிடைக்காததால் கடைகளுக்கு செலுத்தும் மின் கட்டணத்தையே வீடுகளுக்கும் செலுத்தி வருகின்றனர். இந்த இடத்திற்கு உடனடியாக அப்ரூவல்
பெற்றுத்தர வேண்டும். இதனால், குழந்தைகள் படிப்பதற்கு கல்விக்கடன் வங்கியில் பெறமுடியவில்லை. இப்படி பல அவதிகளுக்கு ஆளாகிறோம் என்கின்றனர் மக்கள். விநாயகர் நகர் பகுதியில் குடியிருப்பவர்கள் மாதம் ஆயிரத்திலிருந்து 2 ஆயிரம் வரை தண்ணீருக்குச் செலவு செய்கின்றனர். அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
தூங்கும் குடிநீர் டெண்டர்
ஊருக்குள் உப்புத் தண்ணீர், குடிநீர் இரண்டும் ஒரே பைப் லைனில் தான் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக ஏழரை லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் படுத்துறங்கி பல மாதங்களாகிவிட்டன. யாரும் எவ்வித முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. பணிகள் நின்று போனதற்கான காரணங்களும் தெரியவில்லை என்கின்றனர் மக்கள்.
விளக்கில்லாத மின்கம்பங்கள்
கள்ளப்பாளையம், செந்தேவிபாளையம் கிராமத்தில் பல இடங்களில் மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வருவோர் விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால், பொழுதுசாயும் நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு வெளியூர் சென்ற பெண்கள் இரவு நேரத்தில் இருட்டில் நடந்து வருவதற்கு மிகுந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
சாமளாபுரத்திலிருந்து கள்ளப்பாளையம் சாலையில் வாய்க்காலில் இரவு நேரம் மதுப்பிரியர்களின் கூடாரமாக இருக்கிறது. இதனால், வேறு ஏதேனும் அசாம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்கிற அச்சமும் எப்போதும் நிலவுகிறது.
கால்நடையாக..
கள்ளப்பாளையம் செந்தேவிபாளையத்திற்கு சாமளாபுரத்திலிருந்து பேருந்து வசதி இல்லை. காலை மாலை இரண்டு நேரங்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், மக்கள் எப்போதும் நடந்தே செல்ல வேண்டிய பரிதாபத்திற்கும் ஆளாகியுள்ளோம். இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்துப்பார்த்தோம். ஆனால், நாங்கள் கால்நடைகளாகத்தான் இருக்கிறோம் என்கிறார் அக் கிராமத்தை சேர்ந்த குடும்பத் தலைவி ராஜேஸ்வரி.
வாய்க்காலுக்குள் மயானப் பாதை
கள்ளப்பாளையம் பாரதி நகரில் வாழும் தலித் மக்கள் கோயிலுக்குச் செல்வதென்றாலும், மயானத்திற்கு செல்வதென்றாலும் ராஜவாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டி இருக்கிறது. மழைக் காலத்தில் சடலத்தோடு ஆற்றுக்குள் இறங்கித்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொடுமையை பல தலைமுறைகளாக அனுபவித்து வருகிறோம். திருப்பூர் ஆட்சியரிடம் மனுகொடுத்தும் இதுவரை பாலம் கட்டப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த துரைசாமி.
குப்பைத்தொட்டி கழிப்பிடம்
மேலும், இங்குள்ள கழிப்பிடமும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதால் அன்றாடம் அவதிப்படுகிறோம். சுற்றிலும் குப்பை தேங்கி ஊரின் குப்பைத்தொட்டியாகவே காட்சியளிக்கிறது கழிப்பிடம்.
சுயநலம் இல்லை
அனைத்துக் குற்றச்சாட்டையும் மறுக்கிறார் பேரூராட்சி உறுப்பினர் கே.எஸ். திருஞானசம்பந்தம். நான் எதற்கு சுயநலமாகச் செயல்படணும்? நான் இதுவரை பொதுச்சொத்தை பயன்படுத்தியது கிடையாது. குற்றம் சுமத்துவர்கள் செய்வது தான் சுயநலம். ஒரு சிலரின் தூண்டுதல் பேரில்தான் இதைப் பிரச்சினை ஆக்கி இருக்காங்க.
நீங்க சொல்ற அனைத்தையும் சாமளாபுரம் பேரூராட்சியிடம் கேட்டிருக்கோம். அவங்க எதுவும் செய்து தரலை. பாலம் கட்டுவது தொடர்பாக சொந்த முயற்சி எடுத்துருக்கேன். ஊரில் உள்ள ஒரு 10 பேர் தான் குற்றம் சுமத்துகின்றனர். அவர்கள் தான் சுயநலத்தோடு செயல்படுகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT