Published : 18 Mar 2014 07:56 PM
Last Updated : 18 Mar 2014 07:56 PM
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும் அவரது ஆதரவாளர்களும் படுகர்களின் பாரம்பரிய நடனம் ஆடி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
நீலகிரியில் திமுக-வும் அதிமுக-வும் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, நேருக்கு நேராய் மோதுகின்றன. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை மலை பிரதேசத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளில் மூன்று சட்டமன்ற தொகுதிகளும் வருகின்றன.
சமவெளி பகுதியில் அதிமுக-வுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் மலை பிரதேசத்திலும் மலை பிரதேசம் திமுக-வுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் சமவெளி பகுதியிலும் அதிக கவனம் எடுத்து பிரச்சாரம் செய்கின்றனர்.
திமுக வேட்பாளர் ஆ.ராசாவை இம்முறை எப்படியும் வீழ்த்திவிட துடிக்கும் அதிமுக, அமைப்புச்செயலாளர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், உள்ளிட்டவர்களை தொகுதிப் பொறுப்பாளர்களாக அறிவித்துள்ளது.
கோஷ்டிகளை இணைந்து செயலாற்றவேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கண்டிப்பு காட்டியதால் அதிமுக-வினர் கோஷ்டிகளை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், படுகர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் வாக்குச் சேகரிக்கச் செல்லும் அதிமுக-வினர், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
கட்சியினர் மாத்திரமில்லாமல், வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும் படுகர் நடனத்தில் சும்மா கலக்கி எடுக்கிறார். இதற்கு படுகர் இன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதிமுக-வினர் ஆட்டமும் பாட்டுமாய் அலுப்புத் தெரியாமல் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT