Published : 04 Feb 2014 09:14 PM
Last Updated : 04 Feb 2014 09:14 PM
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ், கேப்பைக் கூழ் விற்பனை அதிகரித்துள்ளது.
பாரம்பரிய உணவு
கம்பு, கேள்வரகு, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும், கம்மஞ்சோறு, கேப்பைக்களி போன்றவை தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்தன. இத்தகைய உணவுகளை உண்டதால், தமிழர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தனர்.
அரிசி உணவு, மக்களை தொற்றிக் கொண்ட பின், கம்மங்கூழ், கேப்பைக் கூழ் சாப்பிடுவதை கௌரவ குறைச்சலாக கருதத் தொடங்கினர். சமீப காலமாக, கிராமங்கள் வரை வெளிநாட்டு குளிர்பானங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
மீண்டும் இயற்கை உணவு
இந்நிலையில், ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் இயற்கை உணவு பக்கம், மக்கள் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இதன் விளைவு, நகர்ப்புறங்களில் கூட கோடை காலங்களில் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் கம்பங்கூழ், கேப்பைக் கூழ் விற்பனை செய்வதை காண முடிகிறது.
வியாபாரம் அதிகரிப்பு
இந்த ஆண்டு, கோடை காலம் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே கம்பங்கூழ், கேப்பைக் கூழ், மோர் போன்ற இயற்கை பானங்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் பாளையங் கோட்டை சாலை, திருச்செந்தூர் சாலை, மதுரை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் பல இடங்களில், கூழ் வியாபாரம் நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்து வருகின்றனர்.
உடலுக்கு குளிர்ச்சி
திருச்செந்தூர் சாலையில் கம்பங்கூழ் விற்பனை செய்யும் ஆர்.முத்துராமன் கூறுகையில், “ஆண்டுதோறும் கோடை காலங்களில் கூழ், மோர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறேன். கம்பு, கேள்வரகு போன்றவற்றை கடைகளில் வாங்கி, அரைத்து, வீட்டில் கூழ் தயாரித்து மண் பானைகளில் வைத்து விற்பனை செய்கிறேன்.
இவற்றைக் குடிப்பதால் உடல் சூடு தணியும். குடல் நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். மோர் ஒரு டம்ளர் ரூ.5-க்கும், கம்பங்கூழ் மற்றும் கேப்பைக் கூழ் ஆகியவை ரூ.10-க்கும் விற்பனை செய்து வருகிறேன்,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT