Last Updated : 17 Feb, 2017 11:00 AM

 

Published : 17 Feb 2017 11:00 AM
Last Updated : 17 Feb 2017 11:00 AM

என்றும் காந்தி!- 12: எதிராளியின் இதயத்தை வெற்றிகொள்ளுதல்

காந்தியின் சிறப்பியல்புகளுள் இதுவும் ஒன்று. அவர் யாரையும் தன் எதிரியாகக் கருதியதே இல்லை. எதிர்த் தரப்பு என்பது நம் எதிரித் தரப்பல்ல; நமக்கு மாறுபாடான கருத்தைக் கொண்டவர்களே எதிர்த் தரப்பினர். அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தல்ல, அவர்களின் மனசாட்சியை உலுக்கி, நம் மீது பரிவு ஏற்படச் செய்து நமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றார் காந்தி.

நம் போராட்டங்களின் வெற்றி என்பது உண்மையில் நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் மட்டும் அல்ல, எதிர்த் தரப்பின் இதயங்களை வெல்வதிலும் இருக்கிறது. உலக வரலாற்றில் நடந்த புரட்சிகளையும் போராட்டங்களையும் கணக்கெடுத்துப் பாருங்கள். இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான உறவு என்பது வெறுப்பாகவும் எதிர்ப்பாகவும்தான் பெரும்பாலும் இருக்கும். கூடவே, நியாயம் என்பது தம் பக்கம் மட்டும்தான் இருக்கிறது என்றுதான் ஒவ்வொரு தரப்பும் எண்ணிக்கொள்ளும். இதன் விளைவாக, விட்டுக்கொடுக்க முடியாத நிலைதான் ஏற்படும். இரண்டு தரப்புகளும் முட்டிக்கொண்டு, இரண்டு தரப்புகளுக்கும், அல்லது ஒரு தரப்புக்குப் பேரழிவு ஏற்படும். அந்தப் பேரழிவால் ஒரு தரப்புக்கு வெற்றி கிடைத்தாலும் தோற்கடிக்கப்பட்ட மறுதரப்புக்குள் மனதளவில் எதிர்ப்பும் வெறுப்பும் பழிவாங்கும் உணர்வும் மேலோங்கவே செய்யும். மாறாக, காந்திய வழிப் போராட்டம், அதாவது சத்தியாகிரகம், எதிர்த் தரப்பினர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை நண்பர்களாக்கி, இறுதியில் வெற்றி பெறுவது. இதனால் பழிவாங்கும் உணர்வோ வன்மமோ எதிர்த் தரப்பினர் மனதில் எஞ்சியிருக்காது என்பதால், பெற்ற வெற்றிக்கு ஒரு நீடித்த பாதுகாப்பும் ஏற்படுகிறது. வெற்றி பெற்ற ஆயுதப் புரட்சிகள் அதற்குப் பிறகு என்னவாயின என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவற்றுக்கும் காந்தியப் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் நமக்குத் துலக்கமாகும்.

அவர் ஒரு நண்பராகவே இருப்பார்!

காந்தியை எதிரியாகவும் துரோகியாகவும் கருதிய பலரையும் அவர் மனமாற்றம் ஏற்படச் செய்திருக்கிறார். எதிரியை வெல்வதை ஒரு கலையாகவே வைத்திருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்க வாழ்க்கையிலேயே நிறைய சம்பவங்கள் உண்டு. காந்தியின் மிக முக்கியமான நண்பர்களில் ஒருவரான ஹென்றி போலக்கின் மனைவி மிலி போலக், காந்தியைப் பற்றி ‘காந்தி எனும் மனிதர்’ (தமிழில்: க. கார்த்திகேயன், சர்வோதய இலக்கியப் பண்ணை) என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.

ஒரு நாள் மாலை தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பெர்கில் உள்ள ஒரு அரங்கில் இந்தியர்களும் இந்திய ஆதரவாளர்களும் கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டமொன்று நடைபெற்றது. அரங்கமே நிரம்பி வழியும் கூட்டம். கூட்டம் முடிந்து காந்தியும் மிலி போலக்கும் வெளியேறுகிறார்கள். அப்போது வெளிக் கதவின் மறைவில் ஒரு இந்தியர் நிற்பதை மிலி போலக் காண்கிறார். காந்தி நேராக அந்த மனிதரிடம் சென்று, அவருடன் கைகோத்துக்கொண்டு, தீவிரமான தொனியில் ஏதோ பேசுகிறார். பிறகு, தயங்கித் தயங்கி காந்தியுடன் நடந்துசெல்கிறார். மிலியும் அவர்களைப் பின்தொடர்கிறார். தாழ்வான குரலில் இருவரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். தெருவின் முடிவில் அந்த நபர் காந்தியிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது என்ன என்று மிலி போலக் காந்தியிடம் கேட்க ‘கத்தி’ என்கிறார் காந்தி. அந்த நபர் காந்தியைக் கொல்வதற்காக வந்திருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், அரசாங்கத்தின் கையாளாக இருந்துகொண்டு இந்தியர்களிடம் நண்பராக, தலைவராக காந்தி நடிப்பதாகவும் அந்த நபர் கருதியிருக்கிறார்.

அதிர்ந்துபோன மிலி ‘இப்படிப்பட்ட மனிதர்கள் ஆபத்தானவர்கள், அவரைக் கைது செய்திருக்க வேண்டும், நீங்கள் ஏன் அவரை அப்படியே போக விட்டீர்கள்? அவர் ஒரு பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிறார்.

"அவர் பைத்தியமல்ல, தவறாகப் புரிந்துகொண்டிருந்தார். நான் அவருடன் பேசி முடித்ததும் என்னைக் கொலை செய்ய தான் கொண்டுவந்திருந்த கத்தியையும் அவர் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றதைப் பார்த்தாயே," என்று காந்தி பதிலளிக்கிறார். ‘இருட்டில் அவர் உங்களை குத்தியிருப்பார், நான்... ’ என்று பேச ஆரம்பித்த மிலியை காந்தி மேற்கொண்டு பேசவிடவில்லை.

"இதை நினைத்து நீ அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், உண்மையில் அவருக்கு அந்தத் துணிச்சல் கிடையாது. நான் அவர் நினைத்த அளவுக்கு உண்மையில் மோசமானவனாக இருந்தால் அப்போது நான் சாக வேண்டியவன்தானே? இனி நாம் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது முடிந்துவிட்டது. அவர் இனிமேல் என்னை கொலை செய்ய முயற்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரை கைது செய்ய வைத்திருந்தால், அவர் எனக்கு ஒரு எதிரியாக மாறியிருப்பார். இனி அவர் ஒரு நண்பராகவே இருப்பார்."

காந்தியை ஏசு கிறிஸ்து போன்றவர்களுடன் ஒப்பிட்டு எத்தனையோ அன்பர்கள் துதிபாடுவதைப் பார்க்கும்போதும் படிக்கும்போதும் எனக்கு எரிச்சலாக வந்திருக்கிறது. ஆனால், இதுபோல் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்ட சம்பவங்களைப் படிக்கும்போது உண்மையிலேயே சிலிர்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை. ஐன்ஸ்டைன் சொன்னதுபோல், ‘இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த பூமியில் நடந்தார் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு நம்புவது கடினமாக இருக்கலாம்.’

எது லாபம்?

காந்தி ஒரு தேர்ந்த, நியாயமான வணிகர் போல. ஒரு தெருவில் கடை வைத்திருப்பவர் அந்தத் தெருவில் யாரையும் எதிரியாக்கிக்கொள்ள மாட்டார். அப்படி எதிரியாக்கிக்கொண்டால் அவர் கடைக்குத்தான் நஷ்டம். எந்த அளவுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு வியாபாரத்தில் லாபம். சத்தியாகிரகத்திலும் எந்த அளவுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்கிறோமோ, எந்த அளவுக்கு எதிர்த் தரப்பினரை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு லாபம், அதாவது வெற்றி.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தின்போது காந்தி அரசின் கையாளாகச் செயல்படுகிறார் என்று கருதிய மற்றுமொரு நபர் மீர் ஆலம் கான் என்ற அந்நாள் இந்திய பதானியர். ஜெனரல் ஸ்மட்ஸின் பேச்சை நம்பி காந்தி குடிவரவுத் துறையில் தனது தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்யப் போகிறார். அங்கே அவரை மீர் ஆலம் கான் உள்ளிட்ட பதானியர்கள் மோசமாகத் தாக்கி வீழ்த்துகின்றனர். மயங்கி விழுந்த காந்தி, மயக்கம் தெளிந்ததும் தன் நண்பரும் பாதிரியாருமான டோக்கிடம் கேட்கிறார், ‘மீர் ஆலம் எங்கே?’. ‘அவரையும் மற்ற பதானியர்களையும் கைதுசெய்துவிட்டார்கள்’ என்கிறார் டோக். அதற்கு காந்தி, ‘அவர்களை விடுதலை செய்ய வேண்டும். தாங்கள் செய்வதே சரி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு தொடர எனக்கு விருப்பமில்லை’ என்கிறார்.

பின்னாளில் மீர் ஆலம் கான் காந்தியைப் புரிந்துகொண்டு சத்தியாகிரகத்தில் இணைந்துகொள்கிறார். போராட்டத்தின்போது இன்னும் பல சத்தியாகிரகிகளுடன் கைது செய்யப்பட்ட மீர் ஆலம் கான் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்தியாவுக்கு வந்த மீர் ஆலம் கான் காந்திக்கு இப்படிக் கடிதம் எழுதுகிறார்:

” நான் பம்பாய் வந்து சேர்ந்துவிட்டேன். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். டிரான்ஸ்வாலின் செயல்பாடுகள் பற்றி எல்லா செய்திகளையும் பம்பாய் குஜராத்தி செய்தித்தாள்களில் வெளியிட்டிருக்கிறேன்; மேலும் பஞ்சாபிலும் அங்கு போகும்போது வெளியிடுவேன். அரசாங்கத்தின் சட்ட உடன்பாடு பற்றி எனக்குத் தெரியப்படுத்தவும்; வழக்கு பற்றிய எல்லா செய்திகளையும் எனக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். மேலும் நான் லாகூரில் அன்ஞ்சுமனி இஸ்லாம் கூட்டத்துக்குச் செல்லவிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் முன்குறிப்பிட்ட டிரான்ஸ்வால் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவேன். அத்துடன் லாகூரில் லாலா லஜபதி ராயைச் சந்தித்து, இந்த விஷயம் குறித்து அவரது கருத்துகளைக் கேட்டு அவற்றை இந்தியவில் எல்லா ஆங்கில செய்தித்தாள்களிலும் வெளியிடுவேன். நான் எல்லையை அடையும்போது அங்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும் வெளியிடுவேன்; என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்; நீங்கள் அச்சமடையத் தேவையில்லை என்று துணிந்து கூறுவேன்; இந்த விஷயத்தில் மிகுந்த முயற்சி எடுப்பேன்; அஞ்ச வேண்டாம்; மேலும் நான் ஆஃப்கானிஸ்தான் சென்று எல்லோரிடமும் தெரியப்படுத்துவேன்.” (தென்னாப்பிரிக்காவில் காந்தி, ராமச்சந்திர குஹா, தமிழில்: சிவசக்தி சரவணன், கிழக்கு பதிப்பகம்)

இப்போது தெரிகிறதா, எதிராளியின் இதயத்தை வெல்வது எவ்வளவு லாபகரமானது என்று? எதிராளியின் இதயத்தை வெல்வது அவ்வளவு எளிதில்லை. எத்தனையோ தியாகங்களுக்குப் பிறகுதான் சாத்தியமாகும்; சமயத்தில் உயிர்த் தியாகமும் செய்ய நேரிடும். ஆனால், வெல்வதில் வெற்றிகண்டோமென்றால் நம் நண்பர்களை விட மிகவும் பயனுள்ளவர்களாகவும் நம் செயல்பாடுகளின் தளபதிகளாகவும் இந்தப் புதிய நண்பர்கள் மாறிவிடுவார்கள். எதிராளியின் இதயத்தை வெல்வதில் தன்னிகரற்றவராக காந்தி திகழ்ந்தார். இந்தியத் தரப்பில் இருந்த ‘எதிராளி’களை வென்றதை இந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ‘ஆங்கிலேய இதய’ங்களை காந்தி வென்றது அடுத்த அத்தியாயத்தில்!

ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

(திங்கள்கிழமை சந்திக்கலாம்…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x