Published : 26 Feb 2017 11:28 AM
Last Updated : 26 Feb 2017 11:28 AM
கடந்த பத்தாண்டுகளாக தேர்தல் தொடர்பாக நாம் என்ன எழுதியும் படித்தும் வந்தோமோ அதைவிட கணிசமாக வேறுபடுகிற செய்தியை உத்தரப் பிரதேசத்து சுவர் தெரிவிக்கிறது. தரமான, அமைதியான வாழ்க்கைக்கான வேட்கை பிஹாரிலும் பிற மாநிலங்களிலும் அதிகம் தெரிவதாகப் படித்திருக்கிறோம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை, நல்ல வாழ்வுக்கான தேடல், அவற்றைப் பெற வேண்டும் என்ற திட சித்தம் ஆகியவற்றை இந்திய இளைஞர்களிடம் பார்த்தோம்.
இப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை - அதிலும் நல்லவிதமாக அல்ல, மோசமாக உத்தரப் பிரதேசத்தில் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை 2009-ல் மீண்டும் பதவிக்குக் கொண்டு வந்த அதே உந்துதல்தான், அகிலேஷ் யாதவ் அரசுக்கும் பெரும்பான்மை இடங்களைக் கொடுத்தது.
அதுவே நரேந்திர மோடிக்கு 2014-ல் மக்களவைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வலுவைத் தந்தது. அதே எதிர்பார்ப்புதான் சில முதல்வர்களை மாநிலங்களில் மூன்றாவது முறையாகவும் பதவியில் நீடிக்க அனுமதித்தது. அந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை, உற்சாகம் இப்போது வற்றிவிடவில்லை என்றாலும் அளவு குறைந்து மகிழ்ச்சியற்ற விரக்தி நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.. ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்று பல்லாண்டுகளாகக் கேலி செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதம் மீண்டும் திரும்பியிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக வளர்ந்து வந்த ஜி.டி.பி. இப்போது 6% அளவுக்கு இறங்கிவிட்டது. இந்தத் தேக்க நிலையை நீக்க முயற்சி செய்யும் ஒரே தலைவர் நரேந்திர மோடிதான்.
இந்த மாற்றம் எதனால் என்று அறிய தொடர்ந்து 4 நாள்களாக டெல்லியிலிருந்து ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் புந்தேல்கண்ட், யாதவர்களின் கோட்டையான எடாவா, கான்பூர், லக்னோ வழியாக பயணம் செய்தேன். பாராபங்கி என்ற ஊருக்கு அருகில் சைதாபூர் என்ற இடத்தில் அதற்கான துப்பு கிடைத்தது. அதாவுர் ரெஹ்மான் அன்சாரி (23) என்ற இளைஞர் பல வண்ணம் கொண்ட பளபளப்பான விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார்.. அவருடைய கடையில் ஷெல்ஃபுகளோ, பொருள்களோ இல்லை. ‘ஸ்டார் ஆன்-லைன் சென்டர்’ ‘ஜன சேவா கேந்திரம்’ என்ற அந்த நிறுவனத்தை அவர் தொடங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. மளிகைக் கடையிலோ, ஃபேன்சி ஸ்டோரிலோ கிடைக்காததெல்லாம் கிடைக்கும் என்று கார்டு தெரிவிக்கிறது. பான் கார்டு, ஆதார் கார்டு, பிறப்பு இறப்புச் சான்றிதழ், நிலப் பட்டா, வருவாய் சான்றிதழ், ஆயுள் இன்சூரன்ஸ், பாஸ்போர்ட்டுகள், பல்கலைக்கழகத் தேர்வு விண்ணப்பங்கள், செல்போனை ரீ-சார்ஜ் செய்யும் வசதி, இ-வாலெட் வசதி என்று இணைய தளம் மூலம் பெறக்கூடிய அத்தனை வசதிகளும் அவரிடம் கிடைக்கிறது.
அன்சாரிகள் நெசவாளர்கள். பருத்தி, விஸ்கோஸ், பட்டு நெசவும் ஏற்றுமதியும் அவர்களுடைய தொழில்கள். பணமதிப்பு நீக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்க முடியாமல் வியாபாரம் இப்போது படுத்துவிட்டது. இந்த நெருக்கடியையே வாய்ப்பாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் அதாவுர் ரெஹ்மான். அதன் விளைவுதான் ஸ்டார் ஆன்-லைன் சென்டர்.
மெத்தனமான அரசு, பொருளாதார வளர்ச்சி இல்லாத நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், இவற்றிலிருந்து விடுபட நினைக்கும் இளைஞர்கள் சமீபத்தில் தோன்றிய நம்பிக்கையை இழந்துவிட்ட சோகம், இதுதான் உத்தரப் பிரதேசம்.
எழுதப் படிக்கத் தெரியாத உத்தரப் பிரதேசம் என்ற அடையாளத்தை மாற்ற விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒரு பகுதியை விற்றுக்கூட தனியார் பள்ளி, கல்லூரிகளில் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். அப்படிப் படித்த இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். படிக்க வைத்த பெற்றோர் இன்னமும் கடனிலிருந்து மீள முடியாததால் கோபத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ராம் சரண் என்ற பாசி வகுப்பைச் சேர்ந்த பட்டியல் சாதி இளைஞர் பி.எஸ்சி., பட்டம் பெற்றுள்ளார். வேலை கிடைக்காததால் சொந்த நிலத்தில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்கிறார். ஷசாத்பூர் தொகுதியில் வசிக்கும் இவர், என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், நரேந்திர மோடியை விரும்புவது ஏன் என்று கூறியது நாடு முழுக்க பரவியது. பள்ளிக்கூட ஆசிரியராகத்தான் தன்னால் பணியாற்ற முடியும் என்று கருதுகிறார். இன்னும் ஓராண்டு படித்து பி.எட். பட்டம் பெற அவருக்குப் பொறுமை இல்லை. டீன்-ஏஜ் பெண்கள் 7 பேர் பள்ளிக்குப் போய்விட்டு வீடு திரும்பியதும், இவருடைய நிலத்தில் உருளைக்கிழங்கு பறிக்கும் வேலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது இல்லை. அப்படி வரும்போது யாருக்குப் போடுவீர்கள் என்று கேட்டால், கண்ணில் உற்சாகம் பொங்க, ‘மோடி’ என்று கூவுகின்றனர்.
தாக்கூர் என்ற ராஜபுத்திர வகுப்பைச் சேர்ந்த ஜனக் சிங், முதுகலைப் பட்டம் பெற்றவர். வேலை இல்லாததால் நிலங்களைப் பார்த்துக் கொள்வதோடு சிறிய ரேஷன் கடையையும் நடத்துகிறார். தரைப்படையில் சேர அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
மாநிலத் தலைநகர் லக்னோவில் ராஜபுத்திரக் குடும்பத்தைச் சேர்ந்த பியூட்டி சிங் என்ற பெண் கால்-சென்டரில் வேலை செய்கிறார். மாதம் ரூ.11,000 சம்பளம். வேலை தாற்காலிகம் என்பது முதுகலைப் பட்டதாரியான அவருக்கும் தெரியும்.
குடிசைத் தொழில்களாக இருந்த வெண்கல வார்ப்பு, வளையல் தயாரிப்பு, தோல் தொழில்கள், பூட்டு தயாரிப்பு, பட்டு நெசவு, ஜரிகை வேலை, நெசவு, மட்பாண்டத் தயாரிப்பு என்று எல்லாமும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் முடங்கிவிட்டன. இன்னமும் அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்புகின்றனர்.
இந்தத் தேர்தலில் 3 அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாவதாக, யாருக்கும் எவர் மீதும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. இரண்டாவதாக, சாதி அடிப்படையில் வாக்களிப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உறுதி மக்களிடம் ஏற்படவில்லை. மூன்றாவதாக, வேறு மாற்று வழி இருக்குமா என்று தேடுபவர்கள் அகிலேஷ் ராகுல் என்ற இளைஞர்களைவிட, மாயாவதியைவிட, மோடியை ஆதரித்தால் என்ன என்ற பரிசீலனையில் இருக்கின்றனர். நமக்கு இன்னமும் தெரியாதது எதுவென்றால் இந்தத் தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு அவர்களுடைய எண்ணிக்கை அதிகமா என்பதுதான். உருளைக்கிழங்கு பறிக்க வந்த அந்த 7 சிறுமிகள் 2019-ல் வாக்களிக்கும் வயதை எட்டும்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கக்கூடும்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT