Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM
இந்திய துணைtத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை வாபஸ் பெறக் கோரி வெள்ளை மாளிகை இணையதளத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் புகார் மனுவை பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைனில் மனுக்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தை அதிபர் ஒபாமா 2011-ல் அறிமுகம் செய்தார். அதன்படி முக்கிய விவகாரங்கள் தொடர்பாக “வி தி பீப்பிள்” என்ற பெயரில் வெள்ளை மாளிகை இணையதளத்தில் ஆன்லைனில் மனுக்கள் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக யார் வேண்டுமானாலும் இணைய தளத்தில் மனுவை தாக்கல் செய்யலாம். அந்தப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்கள் தங்களது கையெழுத்தை மனுவில் பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட பிரச்சினை தொடர் பாக ஒரு மாதத்துக்குள் 10 ஆயிரம் பேர் மனுவில் கையெழுத்திட்டால் அந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை உரிய பதில் அளிக்கும். இந்நிலையில் அமெரிக்காவில் அண்மையில் கைது செய்யப் பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை கைவிடக் கோரி “வீ தி பீப்பிள்” திட்டத்தில் ஆன் லைனில் புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் இணைந்து கடந்த டிசம்பர் 18-ம் தேதி மனுவை ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு ஒரு மாதத் துக்குள் அதாவது வரும் ஜனவரி 17-ம் தேதிக்குள் 10 ஆயிரம் பேர் ஆதரவாக கையெழுத்திட வேண்டும். திங்கள்கிழமை நிலவரப்படி 390 பேர் கையெழுத் திட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டால் வெள்ளை மாளிகை உரிய விளக்கம் அளிக்கும்.
சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
இந்திய துணைத் தூதர் தேவயானியை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது, போதை அடிமைகளுடன் ஒரே சிறையில் அடைத்தது ஆகிய விவகாரங்களுக்கு அமெரிக்காவில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அமெரிக்க சட்டப் பல்கலைக் கழக பேராசிரியரும், முன்னாள் அமெரிக்கத் தூதருமான ஸ்டீபன் விளாடெக் என்பிசி தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தூதரக உறவு இல்லாத எதிரி நாடுகளில்கூட வெளிநாட்டுத் தூதர்களுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படாது என்று இந்தியா வருத்தத்துடன் கூறியுள்ளது. அந்தக் கூற்று உண்மைதான். தேவயானியை கைது செய்ததை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டினரிடம் அத்துமீறி நடந்து வருகின்றனர். இதனால் உலக அரங்கில் அமெரிக்காவின் கவுரவம் குலைந்துவிடும் என்றார்.
இதேபோல் பல்வேறு சட்ட நிபுணர்களும் தேவயானி கைது நடவடிக்கையை அமெரிக்க அரசு தவிர்த்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் நிருபமா ராவ் கூறியபோது, தேவயானி மீதான புகார் குறித்து இந்திய அரசுக்கு அமெரிக்கா முன்னரே தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT