Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை

திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை பொருள்கள்.

திருச்சியின் மூலை முடுக்குகளிலிருந்து நாட்டு வைத்தியர்கள், இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பொதுமக்கள் ஆகியோர் படையெடுத்து வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மதியம் வரை மூலிகை விற்பனை இங்கு களைக்கட்டுகிறது.

இருபது ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்துவரும் சித்ரா(55) ஓர் கைதேர்ந்த மருத்துவர்போல் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைக்குத் தகுந்தவாறு மூலிகையின் மருத்துவ பயன்பாடு பற்றி விளக்கிக் கூறி அதை என்ன மாதிரி சாப்பிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.

“எனக்கு என்னோட மாமனாரின் அக்கா இந்த தொழிலையும் வைத்திய முறைகளையும் கத்துக் கொடுத்தாங்க. அவங்களுக்குப் பிறகு நான் இதை செய்து வருகிறேன். எனக்குப் பின்னாடி இதை எடுத்துச் செய்ய ஆள் இல்லை. குறைஞ்சது நூறு மூலிகைகளோட மருத்துவ குணம் எனக்கு அத்துப்படி. சில பேர் அவங்களுக்கு தெரிஞ்ச மூலிகை பேரைச் சொல்லி வாங்கிட்டுப் போவாங்க. அதுல சிலருக்கு அதை எப்படி மருந்தா பயன்படுத்தணும்னு தெரியாது. அவங்ககிட்டே என்ன பிரச்சினைக்காக இந்த மூலிகையை வாங்கிட்டுப் போறீங்கங்கிறதைக் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மருந்து செய்யுற வழிமுறைய சொல்லிக் கொடுப்பேன்.

சிலபேர் வியாதி உடல் பிரச்சினையை மட்டும் சொல்வாங்க அவங்களுக்கு நானே மூலிகையைக் கொடுத்து சாப்பிடுற வழிமுறையையும் சொல்லித் தருவேன்” என்கிறார் சித்ரா.

இதுமாதிரியான மருத்துவ ஆலோசனைகளுக்காக கட்டணம் வாங்குவதில்லை. மேலும் தேவையற்ற மூலிகையை வந்தவரின் தலையில் கட்டுகிற மோசடி எண்ணமும் இவர்களிடம் கிடையாது. அதனால் நாளுக்கு நாள் இவர்களைத் தேடிவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

நொச்சியம் அருகேயுள்ள கூடப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா இந்த மூலிகைகளைச் சேகரிப்பதற்காக 2 நாள் காடு, கழனி என்று அலைந்து, திரிந்து எடுத்துக்கொண்டு வருகிறார். இவரைப்போல் 10-க்கும் மேற்பட்டோர் மூலிகைகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிக்கு விற்பனை செய்ய வந்துவிடுகின்றனர்.

உடையான்பட்டியைச் சேர்ந்த சண்முகம், சாத்தனூரைச் சேர்ந்த தனம், வயலூரைச் சேர்ந்த ருக்மணி என பல கைதேர்ந்த மூலிகை வியாபாரிகளை மொய்க்கிறது வாடிக்கையாளர்கள் கூட்டம். ரூ.5க்கு மருந்துடன் பக்கவிளைவுகளில்லாத இயற்கை மருத்துவ ஆலோசனையும் கிடைக்கிறதென்றால் சும்மாவா?

சிறுகுறிஞ்சான், ஓரிதழ் தாமரை, பிரண்டை, கீழாநெல்லி, வல்லாரை, கண்டங்கத்தரி, ஆமணக்கு, ஆடாதொடை, திப்பிலி, அதிமதுரம், தூதுவளை, கரிசலாங்கண்ணி, நித்தியக் கல்யாணி, கற்பூரவள்ளி என ஏராளமான மூலிகை வகைகளை அடுக்கி வைத்துள்ளனர். “கடவுள் படைத்த ஒவ்வொன்னும் ஒரு அற்புதம். பயனில்லாததுன்னு உலகத்துல ஒரு விஷயம் கூட இல்லை. எல்லாப் பொருளுலயும் ஒரு பயன் நிச்சயம் இருக்கு” என தத்துவமும் சொல்கிறார் சித்ரா.

“முன்னாடி ரெண்டு ரூபாய்க்கி ஒரு கட்டு மூலிகை வித்தோம், இப்போ கட்டு ஐஞ்சு ரூபா ஆயிடுச்சு. பஸ்ஸுல இந்த மூட்டய ஏத்த முடியாதுன்னு சொல்றாங்க. அதனால இதுங்கள கொண்டு வற்றதுக்கு ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கு. அவங்க சார்ஜ் அதிகம் கேக்குறாங்க வேற வழியில்லாம விலையை ஏத்தவேண்டியதாயிடுச்சு” என வருத்ததோடு விலையேற்றத்திற்கான காரணத்தைச் சொல்கிறார் சண்முகம்.

“வியாழக்கிழமையும் கொஞ்ச மூலிகைகளைக் கொண்டுவந்து கடை போடுவோம். வியாழக்கிழமை 700 ரூபாய்க்கு விற்பனையாகும். ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடக்கும். முன்னைக்காட்டிலும் இப்போ மூலிகை வாங்குற சனங்க கூட்டம் அதிகரிச்சிருக்கு. நாட்டு வைத்தியருங்க ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுபோறாங்க. ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு இப்படி மூலிகைகள வந்து வாங்குற வாய்ப்பு கிடைப்பது கஷ்டந்தான்” என கவலைப்படுகிறார் மற்றொரு மூலிகை வியாபாரியான தனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x