Published : 11 May 2017 11:43 AM
Last Updated : 11 May 2017 11:43 AM

அறம் பழகு எதிரொலி: தி இந்து வாசகர்களின் உதவியுடன் கராத்தே போட்டிக்காக மலேசியா செல்லும் ஹேமாவர்ஷினி

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் புதிய தொடர் 'அறம் பழகு'.

இதில் மதுரை மாணவி ஹேமாவர்ஷினி சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள ரூ.45,000 இல்லாததால், மலேசியாசெல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பது குறித்து செய்தி வெளியானது.

வாசிக்க: >அறம் பழகு 2: ஹேமாவர்ஷினி- சர்வதேச கராத்தே மேடைக்கு செல்ல உதவி கோரும் பள்ளி மாணவி!

இதைப் படித்த 'தி இந்து' வாசகர்கள், போட்டிக்குச் செல்லத் தேவையான பணத்தை விட அதிகமாகவே கொடுத்து உதவியுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் ரூ. 25,000 தொகையும், துபாயைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் 35,000 ரூபாயும், சென்னையில் இருந்து பாலாஜி என்னும் வாசகர் 1000 ரூபாயும் அனுப்பியுள்ளனர்.

ஹேமாவர்ஷினியின் அம்மாவுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. ''ரொம்ப நன்றி மேடம்'' என்பவரின் குரல் கலங்கி நிற்கிறது.

'தி இந்து' வாசகர்களின் உதவியுடன் பணம் கிடைத்தது குறித்துப் பேசிய மாணவி ஹேமாவர்ஷினி, ''நானும் வளர்ந்து பெரியவளாகி, என்னைய மாதிரி கஷ்டப்படறவங்களுக்கு உதவுவேன்'' என்கிறார் மாறாத மழலைக் குரலில்.

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x