Last Updated : 09 Feb, 2017 09:32 AM

 

Published : 09 Feb 2017 09:32 AM
Last Updated : 09 Feb 2017 09:32 AM

மோடிக்கு ஜெயலலிதாவுடன் இருந்த அதே புரிந்துணர்வு பன்னீருடனும் இருக்கிறது!

அதிமுக எம்பி மைத்ரேயன் நேர்காணல்

அரசியலில் எந்நேரத்திலும் எதுவும் நடக்கும் என்பார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ஒரு பேட்டி அதை மீண்டும் நிரூபிக்கிறது. பன்னீர்செல்வம் பிரிந்தவுடன் அவர் பக்கத்தில் முதலில் போய் அமர்ந்தவர் மைத்ரேயன் எம்பி. ‘அதிமுகவுக்குள் உள்ள பாஜககாரர்’ என்று வர்ணிக்கப்படும் மைத்ரேயனுடன் ஒரு பேட்டி.

அதிமுக பிளவுபடுகிறதா?

அது ஒரு மாயை. தொண்டர்களும் மக்களும் பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் சசிகலா பக்கம் இருப்பதுபோல் நடித்தாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் வரும்போது, அவர்களும் இந்தப் பக்கம் வந்துவிடுவார்கள்.

தேவையான அளவுக்கு ஆதரவு இருக்கிறதா? திமுக உதவியைக் கேட்பீர்களா?

நேற்றைய நிலவரம் வேறு, இன்றைய நிலவரம் வேறு. அரசியல் பாராமீட்டர் மாறிக்கொண்டே இருப்பது. பொறுத்திருந்து பாருங்கள். ஆனால், திமுகவின் உதவியைக் கேட்க மாட்டோம் என்று பன்னீர்செல்வமே சொல்லிவிட்டாரே!

மோடியின் ஆதரவு யாருக்கு? ஆளுநர் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசு தமிழக அரசை ஆதரிக்கும். ஆனால், ஒரு கட்சியையோ, அதில் உள்ள தனி நபர்களில் ஒருவரையோ ஆதரிக்குமா என்ற கேள்வியே சரியல்ல. மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல உறவும், புரிந்துணர்வும் இருந்தது. அதேபோன்ற உறவுதான் மோடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையிலும் இருக்கிறது. இதைத் தனிப்பட்ட உறவாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்துக்கென்று நிரந்தர ஆளுநர் இல்லை. அதனால்தான், ஆளுநரால் உடனடியாக இங்கே வர முடியாமல் போய்விட்டது. ‘நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்தான் ராஜிநாமா கடிதத்தில் கையெழுத்துப் போட்டேன்’ என்று பன்னீர்செல்வம் சொல்லியிருக்கும் நிலையில், அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டிய நிலையில் ஆளுநர் இருக்கிறார். எதையும் ஆராயாமல், இவர்கள் அழைத்தவுடன் ஓடி வந்து பதவிப்பிரமாணம் செய்துவைக்க முடியுமா?

தம்பிதுரைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான், நீங்கள் ஓபிஎஸ் பக்கம் சாயக் காரணம் என்கிறார்களே?

தமிழக அரசியலில் தம்பிதுரை ஒரு கோமாளி. அவரை எல்லாம் நான் என்னுடைய எதிரியாகக் கருதியதே இல்லை. என்னுடைய எதிரியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். என்னைச் சிலர் அதிமுகவில் இருக்கும் பாஜக ஆதரவாளர் என்கிறார்கள். பாஜகவில் இருந்தபோது, அதிமுக ஆதரவாளர் என்றார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தப்போவதில்லை.

துரோகமும் விரோதமும் கை கோத்துவருகின்றன என்று சசிகலா சொல்கிறாரே?

யார் துரோகி, யார் விரோதி என்பது பெரிய கேள்வி. அம்மாவால் ஒரு முறை அல்ல; இரு முறை அடையாளம் காணப்பட்ட பன்னீர்செல்வம் துரோகியா; கட்சியைவிட்டே நீக்கப்பட்ட சசிகலா துரோகியா? அதிமுக வரலாற்றிலேயே ஜெயலலிதாவால் ஒரே நபர் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்க்கப்பட்ட வரலாறு என்னுடையது. குறுகிய மனப்பான்மை உள்ளவர்களின் குறுக்குப் புத்திதான் இப்படியான குற்றச்சாட்டுகள் எல்லாம். திமுக எதிர்ப்பு என்பது அதிமுக தொண்டன் ஒவ்வொருவனின் ரத்தத்திலும் ஊறியது. எக்காரணம் கொண்டும் திமுகவோடு கை கோக்க மாட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x