Last Updated : 17 Mar, 2014 08:57 PM

 

Published : 17 Mar 2014 08:57 PM
Last Updated : 17 Mar 2014 08:57 PM

கோவை: நிர்வாக குளறுபடியால் மத்திய அரசு பணம் விரயம்: தபால்தலைகள் கடும் தட்டுப்பாடு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தபால் தலைகள் தட்டுப்பாடு காரணமாக, 5 ரூபாய் மதிப்பு தபால்தலைகளுக்கு பதிலாக, இருபது 25 பைசா தபால்தலைகளை வாடிக்கையாளர்கள் ஒட்டி அனுப்பி வருகின்றனர். தபால்துறையின் நிர்வாகக் குளறுபடி காரணமாக, அரசு பணம் வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

தபால் சேவைக்கு முன், கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்றாக, தபால் தலை வழங்கப்படுகிறது. அனுப்பும் தபால்களின் எடைக்கு ஏற்ப, தபால்தலைகளை ஒட்டி அனுப்ப வேண்டும். இதற்காக, ரூ.0.25 பைசாவில் ஆரம்பித்து ரூ.1, 5, 10, 20 என பல்வேறு மதிப்புகளில் தபால் தலைகள் விற்கப்படுகின்றன.

தனியார் கூரியர் சேவைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தாலும், தபால் சேவை இன்றுவரை பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தபால் சேவை நம்பகத் தன்மையுடையது என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் தபால் சேவையையே அதிகமாக பயன்படுத்துகின்றன.

கடைக்கோடி கிராமம் வரை பயணித்து சம்பந்தப்பட்டவருக்கு பாதுகாப்புடன் சென்று சேர உதவுவது இச்சேவைதான் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. தனியார் துறையில் தபால்கள் திருடப்பட்டாலோ, தகவல்கள் திருடப்பட்டாலோ தவறுகளுக்கு பொறுப்பேற்பதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஆனால், இந்த நிலை தபால் சேவையில் இல்லை என்பதால், அதிமுக்கிய ரகசியங்களைக் கூட, தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என்ற நம்பகத்தன்மை உள்ளது.

முடக்கம்

ஆனால், அண்மைக் காலமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தபால் தலைகள் தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைகள் முடங்கியுள்ளன. ஐதராபாத், நாசிக் ஆகிய இடங்களில் செக்கியூரிட்டி பிரஸ் மூலமாக நாடு முழுவதும் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களுக்கு, தபால் தலைகள் அச்சடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது, அனைத்து தபால் நிலையங்களிலும் தேவையைக் காட்டிலும் குறைந்த அளவிலான தபால் தலைகள் மட்டுமே வழங்கப்படுவதால், தேவையை சமாளிக்க முடியாமல் தபால் நிலையங்கள் திணறி வருகின்றன. தற்போதைய நிலையில் ரூ. 1, 5, 10, 20 தபால் தலைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் கடந்த சில மாதங்களாக, தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தபால் மூலம் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள் வேறுவழியின்றி 5 ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டுவதற்கு பதிலாக, 25 பைசா தபால் தலைகளை 5 ரூபாய் மதிப்புக்கு ஒட்டி அனுப்பி வைத்து வருகின்றனர்.

இவ்வாறு, குறைந்த விலை தபால் தலைகளை, அதிக எண்ணிக்கையில் ஒட்டுவதால் தபால் தலைகளின் உற்பத்திச் செலவும் கூடுதலாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. ‘பொதுவாக, 10 ரூபாய் தபால் தலைகளை அச்சடிப்பதற்கும், 25 பைசா தபால் தலைகளை அச்சடிப்பதற்கும் உற்பத்தி செலவில் பெரிய அளவு வேறுபாடு இல்லை. 25 பைசா தபால் தலை ஒன்று பாதுகாப்பான நவீன முறையில் அச்சடிப்பதற்கு சுமார் ரூ. 5 வரை செலவு செய்யப்படுகிறது.

ஆனால், 5 ரூபாய் தபால்தலைகள் கிடைக்காததால் 25, 50 பைசா தலைகளை ஒட்டி வாடிக்கையாளர்கள் சமன் செய்து வருகின்றனர். ஒரு தபால்தலை ஒட்ட வேண்டிய இடத்தில், பல தபால்தலைகள் ஒட்டுவதால், அதற்காகும் செலவு அதிகரிக்கிறது. இது, தபால்துறைக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும்.

தபால்துறையில் நிலவும் நிர்வாகக் குளறுபடியால், அரசின் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையைக் களைய விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்கிறார் தேசிய விருது பெற்ற கோவையைச் சேர்ந்த தபால் அலுவலர் என்.ஹரிகரன். தபால் தலைகள் தட்டுப்பாட்டிற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல; தபால்துறையும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x