Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM
இது ஜல்லிக்கட்டு சீசன். நம்ம ஊர் பிரபலங்கள் சிலர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்? ஒரு கற்பனை.
மன்மோகன் சிங்
வழக்கமாக காங்கிரஸ் சார்பில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வருகிற முரட்டுக்காளையிடம் எல்லாம் மொத்து வாங்கும் இவர், “இந்த முறையும் நானா?” என்ற பரிதாபப் பார்வையுடன் களத்துக்கு வருவார். காளையை அவிழ்த்து விடும் நேரமாகப் பார்த்து,
“இதெல்லாம் இனி இளைய தலைமுறை செய்யவேண்டிய காரியம். இதோடு நான் ஆட்டத்தில் இருந்து விலகுகிறேன். அன்புத் தம்பி ராகுல் காந்தி காளையை அடக்கினால் அதைப் பார்த்து கைதட்ட நான் தயார்” என்று கூறிவிட்டு விலகிவிடுவார்.
கருணாநிதி
வழக்கமாக காங்கிரஸ் நண்பர்களுடன் வந்து ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் இவர், இம்முறை தனியாகவே காளை யை அடக்கப் போவதாக கூறி வருவார். ஆனால் காளை நெருங்க நெருங்க, யாராவது தனக்கு கைகொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் இவர் கண்ணில் தெரியும். ஓரமாக நிற்கும் விஜயகாந்தைப் பார்த்து, “நீங்களும் ஒரு கை கொடுத்தால் மகிழ்ச்சி” என்பார். ஆனால் அவரோ காளை முட்டிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியிலேயே நிற்க, நொந்துபோய் மோடியைப் பார்ப்பார், அவரும் ஒதுங்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் தனது ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்காக என்னவெல்லாம் செய்தேன் என்ற பட்டியலை மாட்டிடம் சொல்லி அதன் மனதைக் கரைக்கப் பார்ப்பார்.
ஜெயலலிதா
பட்டியில் மாட்டை திறந்துவிட்ட அடுத்த நொடியே அதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். அப்படியும் மாடு படியாவிட்டால் முதலமைச் சரை நோக்கி சட்ட விரோதமாக கொம்புகளை அசைத்த குற்றத்துக்காக அவதூறு வழக்குகள் பாயும். இதென்னடா வம்பாகப் போய்விட்டதே என்று தமிழக அமைச்சர்களைப்போல் மாடு தானாக சரண்டரான ஆனால், அகமகிழ்ந்து போய் அதற்கு ஒரு இன்னோவா கார் பரிசளிக்கப்படும்.
விஜயகாந்த்
உள்ளூர் ஜல்லிக் கட்டு போட் டியில் பங்கேற்க அழைப்பு வந்தால் கண்டிப்பாக போக மாட் டார். அதை விட்டு விட்டு ஸ்பெயினில் நடக்கும் ஜல்லிக்கட்டில் போய் கலந்துகொள்வார். மாடு வெளியில் வந்ததும் நாக்கை மடித்துக் காட்டி அதை பயமுறுத்துவார். பக்கத்தில் இருப்பவரின் மண்டையில் தட்டி, “காளைக்கு குறுக்கே வராம தள்ளிப் போடா” என்று மிரட்டுவார். காளை அருகில் வரும்போதுதான் தவறான போட்டிக்கு வந்துவிட்டோமோ என்ற ஞானோதயம் தோன்றும். இறுதியில் காளையிடம் குத்துகள் வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டாதவர் போல் திரும்பி வருவார்.
கேஜ்ரிவால்
ஜல்லிக் கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த நிகழ்ச்சி எளிமையாக இருக்க வேண்டும், அதிக கும்பல் கூடக்கூடாது, காருக்கு மேலே எப்படி சுழல் விளக்கு இருக்கக் கூடாதோ அதுபோல் மாட்டின் தலையில் கொம்புகள் இருக்கக்கூடாது என்றெல்லாம் பல நிபந்தனைகளை விதிப்பார். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு போட்டிக்கு அழைத்தாலும், மாடு போன்ற மிருகங்களையெல்லாம் அடக்க மாட்டேன். எளிமையாக பூனை மாதிரி ஏதாவது இருந்தால் அடக்கிக் காட்டுகிறேன் என்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT