Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM
கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அந்நோய் தாக்கியதால் கால்நடைகளை இழந்து தவிக்கும் மக்களிடையே எழுந்துள்ளது.
திருச்சி மத்திய மண்டலத்தில் நாகை மாவட்டத்தில் முதலில் தொடங்கிய கோமாரி நோய் மெல்ல திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கால்நடைகளைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழந்தன.
கோமாரி நோய் தொற்று நோய் என்பதாலும், நோய் பாதித்து இறந்த கால் நடைகளை முறையாக பள்ளம் தோண்டி புதைக்காததாலும், தண்ணீர் வழியாகவும் பல இடங்களுக்கு இந்த நோய் பரவியது. மாடுகள் இறந்துவிட்டதால், அதை இழந்த மக்கள் பெரும் கஷ்டத்துக்கும், நஷ்டத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது:
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10,000-த் துக்கும் மேற்பட்ட மாடுகள் இந்த நோயால் இறந்துள்ளன. மாடுகள் இறந்தால், பிரேத பரிசோதனை செய்து, அதிலிருந்து மாட்டின் இறப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அது கோமாரி நோயால் இறந்ததாக எடுத்துக் கொள்ளப்படு மென கால் நடை பராமரிப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கால்நடை இறப்புப் பதிவேட்டில் கால்நடை இறப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை மாடுகள் இறந்துள்ளன என்பதை கண்டறிந்து, மாடுகளை இழந்து தவிக்கும் அதன் உரிமையாளர்களுக்கு மாடு களுக்கு ரூ.30,000, கன்றுகளுக்கு ரூ.10,000, ஆடுகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
திருச்சி மண்டல கால் நடைத்துறை இணை இயக்குநர் ஐ. சின்னதுரை தி இந்துவிடம் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் அறிகுறி இருந்து, காப் பாற்றப்பட்ட மாடுகளின் உடல் நலத்தை பேணும் வகையில், அரசிடமிருந்து 5 டன் தாது உப்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன. விரைவில் கால்நடை வளர்ப்போருக்கு அவை வழங்கப்படவுள்ளன.
கோமாரி நோயால் இறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றார்.
மாடுகள் இறந்ததால் பெரிதும் பாதித்துள்ள ஏழை குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையில்லா கறவை மாடுகளை அரசு வழங்கிவரும் நிலையில், தற்போது மாடுகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது அவசியமானது என்கின்றனர் மாடு வளர்ப்போர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT