Published : 10 May 2017 08:04 AM
Last Updated : 10 May 2017 08:04 AM
எந்த நாட்டிலும் ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்றால் அதற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்பார்கள். ஏனென்றால் மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பவை பத்திரிகைகள்தான். சுதந்திரமான பத்திரிகைகளால் மட்டுமே அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியும். ஜனநாயகம் சரியான பாதையில் சென்று நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகாண முடியும். கடந்த சில தினங்களுக்கு முன் உலக பத்திரிகை சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகைகள் எந்த அளவுக்கு சுதந்திரமாக உள்ளன என்பது பட்டியலிட்டு வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 136-வது இடம்!
180 நாடுகளில் ஆய்வு செய்து இந்த தர வரிசையை வெளியிட்டுள்ள ‘எல்லைகள் இல்லாத நிருபர்கள் அமைப்பு’ எந்த அடிப்படையில் இந்த தர வரிசை தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது. ‘பன்முகத்தன்மையை அனுமதித்தல், சுதந்திரமான ஊடகங்கள், அவை சுதந்திரமாக செயல்படத் தேவையான சூழ்நிலை, ஊடகங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை, சட்டரீதியான இடையூறுகள், வெளிப்படைத்தன்மை’ ஆகிய விஷயங் களை அடிப்படையாக வைத்து இந்த தர வரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 115 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 193 பத்திரிகையாளர்கள் அரசை விமர்சித்து எழுதியதற்காக சிறை யில் அடைக்கப்பட்டு துன்புறுகின்றனர்.
‘போர் சூழ்நிலைகளில் செய்திகள் சேகரிப்பது, தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் பணியாற்றுவது, ஆட்சி, அதிகாரவர்க்கத்துக்கு எதிராக செய்திகளை வெளியிடுவது, பன்னாட்டு நிறுவனங்களின் மிரட்டல்களை சந்திப் பது’ என பத்திரிகையாளர்களின் செய்தி சேகரிப்புப் பணி நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகிலேயே பத்திரிகை சுதந்திரத் தைப் பொறுத்த அளவில், நார்வே முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டில் பத்திரிகைகளை சுதந்திரமாக உலவ விட்டிருப்பது இப்பட்டியல் மூலம் தெளி வாகிறது. பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் கடைசி இடத்தில் இருப்பது வடகொரியா. இந்நாடு பட்டியலில் 180-வது இடத்தில் உள்ளது. லாவோஸ் - 170, கியூபா - 173, வியட்னாம் - 175, சீனா - 176 என பத்திரிகை சுதந் திரத்தை நசுக்குவதில் கம்யூனிஸ்ட் நாடுகள் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. சுதந்திரத்தின் அளவைப் பொறுத்து வெள்ளை முதல் கறுப்பு வரை வரைபடம் ஒன்றையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பத்திரிகைகள் சுதந்திர மாக இருப்பதாக மேலோட்டமாக தெரிந்தாலும், பட்டியலில் 136-வது இடம் பிடித்திருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்தியா கம்யூனிஸ்ட் கட்டுப் பாட்டிலும் இல்லை, பத்திரிகைகள் அனைத்தையும் அரசே நடத்துகின்றன என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால், புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உள்ள மொத்த பத்திரிகைகளில் 86 சதவீதம் பத்திரிகைகள் தனிநபர்களின் சொத்தாகவே உள்ளன.
அப்படி இருந்தும் ஏன் பத்திரிகை சுதந்திரம் இந்த அளவுக்கு தாழ்ந்து போயுள்ளது என்ற கேள்விக்கு, ‘பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் கடமையை மறந்து தங்கள் லாபத்தை உச்சநிலைக்கு கொண்டு செல்வதிலேயே கவனம் செலுத்துகின்றன. அதற்கு பத்திரிகை யாளர்கள் துணைபோகின்றனர்’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வினீத் நாராயண். ஜெயின் ஹவாலா ஊழலை வெளிக் கொண்டு வந்ததோடு, ஊழலுக்கு எதிராக பல்வேறு வழக்கு களை தொடர்ந்து சிபிஐ இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையர் உள்ளிட்ட நியமனங்களை தன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுவிடம் ஒப்படைக்க காரணமாக இருந்தவர் வினீத் நாராயண்.
அவர், ‘தி இந்து’விடம் தொடர்ந்து பேசியபோது, ‘பத்திரிகையாளர்கள் யாரும் தங்கள் கடமையை செய்ய வில்லை. ‘பிஆர்ஓ’ எனப்படும் மக்கள் தொடர்பு பணிகளைத் தான் செய்கிறார்கள். பத்திரிகை சுதந்திரம் என்று எதுவுமே இங்கு இல்லை. அரசு விளம்பரங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் சுதந்திரம் பறிபோவதற்கான அடிப்படை’ என்றார். இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விக்கு, ‘மாற்றம் ஏற்கெனவே வந்துவிட்டது. சமூக வலைதளங்கள் மூலம் அந்த மாற்றம் வந்துவிட்டது. ஊடகங்கள் செய்யத் தவறுவதை சமூக ஊடகங்கள் செய்யத் தொடங்கிவிட்டன. உண்மையான விவாதங்கள் அனைத் தும் சமூக ஊடகங்களில்தான் நடக் கின்றன. அவை வருங்காலத்தில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்’ என்கிறார்.
அரசியல்வாதிகள் தங்களுக்கென பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல் களை நடத்துவதால் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, ‘அதில் எந்த தவறும் இல்லை. காந்தி கூட பத்திரிகை நடத்தினார். கட்சிப் பத்திரிகைகளின் அரசியல் சார்பு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால் போதும்’ என்கிறார்.
திராவிட கட்சிகள் மோசம்
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பத்திரிகை சுதந்திரம் மோசமான சூழ் நிலையை அடைந்ததற்கு திராவிட கட்சி களின் ஆட்சியே காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரைக்கருணா. அலைஓசை, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங் களில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் துரைக்கருணா.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் குறித்து அவர் கூறியபோது, ‘தொடக் கத்தில் மக்களிடம் விடுதலை உணர்ச்சியை ஊட்டுவதற்காகவே பத்திரிகைகள் செயல்பட்டன. அப்போது பிரிட்டிஷ் அடக்குமுறையை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் வளர்ச்சியடைந்த பத்திரிகைகள் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்பட்டன. 60-களுக்குப் பின்னர் திராவிட ஆட்சிக் காலத்தில்தான் ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. செய்தியாளர்கள் மீதான தாக்குதல், செய்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற கலாச்சாரங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் அரங்கேறின. ஆனந்தவிகடன் பாலசுப்ரமணியன் ஒரு கருத்துச் சித்திரம் வெளியிட்டதற்காக சட்டசபைக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முரசொலி, தினகரன் போன்ற பத்திரிகைகள் அச்சுறுத் தப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள்குரல், நமது எம்ஜிஆர் போன்ற பத்திரிகைகள் அச்சுறுத்தல்களை சந்தித் தன. சகிப்புத்தன்மை குறைந்ததே இதற்கு காரணம். நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் தங்களுக்கு எதிரான விமர்சனங்களை ரசித்து பெருந் தன்மையாக எடுத்துக் கொள்வார்கள்.
இதையடுத்து புலனாய்வு என்று பெயரில் வெளிவந்த இதழ்கள் தனிநபர், அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பின்னர் மிரட்டும் நிலை ஏற்பட்டது. துதிபாடும் பத்திரிகைகள் வெளிவந்ததால், பத்திரிகைகளின் பணி நீர்த்துப் போகும் நிலை ஏற்பட்டது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நிலை மாறி, சுயநல போக்கு வளர்ந்துவிட்டது. சமூக ஊடகங்களில் பெரும்பாலும் தவ றான செய்திகளே வெளிவருகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை குறைவு’ என்றார்.
துரைக்கருணா தொடர்ந்து கூறும்போது, ‘இன்றைய நிலையில் அரசு மற்றும் போலீஸாரின் கைகளில்தான் பத்திரிகை சுதந்திரம் உள்ளது. ஒரு அரசியல்வாதியை ஊழல் புகாரில் கைது செய்து அழைத்துச் சென்றால், சட்டப்பூர்வமாக அந்த செய்தியை சேகரிக்க முடியவில்லை. அரசு மற்றும் போலீஸ் நினைத்தால்தான் ஒரு செய்தியையே சேகரிக்க முடியும். மீறி போனால் கேமராவை உடைக்கிறார்கள். எந்த பத்திரிகையாளரும் சுதந்திரமாக செய்தியை சேகரிக்க முடியாத நிலையே தற்போது உள்ளது.
மணல் திருட்டை படம் எடுப்பவர்களை கொலை செய்யும் நிலை உள்ளது. அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள். சில தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிளில் ஒளிபரப்புவது இல்லை. இத்தகைய அச்சுறுத்தல்களால், அரசுக்கு எதிரான விமர்சனங்களை தவிர்க்கும் நிலை உள்ளது. பத்திரிகை சுதந்திரமே இல்லை என்று சொல்லலாம். இந்த நிலை மாற வேண்டும்’ என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT