Published : 03 Mar 2017 01:02 PM
Last Updated : 03 Mar 2017 01:02 PM
காந்தியின் நடை பற்றிய அத்தியாயங்களில் மோட்டார், ரயில் பற்றி காந்தி கூறிய கருத்துகள் ஒருசிலவற்றைப் பார்த்தோம். காந்தியின் அரசியல் கருத்துருவாக்கத்தின் தொடக்க காலத்திலிருந்தே நவீனத் தொழில்நுட்பத்தின் மீதான ஒவ்வாமை அவருக்கு வெளிப்பட்டுக்கொண்டே வந்தது. நவீனத் தொழில்நுட்பத்தின் சில சாதகமான அம்சங்களை அவரும் அவ்வப்போது பயன்படுத்தினாலும் அவற்றின் மீதான விமர்சனத்துடனும், விமர்சித்துக்கொண்டே அவற்றைப் பயன்படுத்துகிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடனுமே பயன்படுத்திவந்தார்.
அன்றும் இன்றும்
இங்கிலாந்து நாட்களில் அங்கு அவர் கண்ட பெரிய பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், பெருந்திரள் உற்பத்தி, டிராம்கள், ரயில்கள், கார்கள் முதலானவை அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தின. தென்னாப்பிரிக்கக் காலத்தில் அவர் எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’ (1909) நூல், இயந்திரங்களைப் பற்றியும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பற்றியும் காந்திக்கு இருந்த கருத்துகள் ஏறக்குறைய ஒரு திட்டவட்டமான நிலையை எட்டியிருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
ஒரு பத்திரிகையின் வாசகருக்கும் அதன் ஆசிரியருக்கும் இடையிலான கேள்வி-பதில் உரையாடல் போல காந்தி எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தில் வாசகர், தற்போதைய நாகரிகத்தைப் பற்றி கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஆசிரியர் (காந்தி) இப்படிச் சொல்கிறார்: “ஐரோப்பாவின் மக்கள் நூறு வருடங்களுக்கு இருந்ததைவிட நன்றாகக் கட்டப்பட்ட வீடுகளில் இன்று வாழ்கிறார்கள். மனித நாகரிகத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது. உடல்சார்ந்த இன்பத்தை மேம்படுத்தும் விஷயமாகவும் இது கருதப்படுகிறது. முற்காலத்தில் தோலாலான ஆடைகளை உடுத்திக்கொண்டு, ஈட்டிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்கள். தற்போது, தங்கள் உடலை அலங்கரிக்கும் வண்ணம் நீண்ட முழுக்கால் சட்டைகளை அணிகிறார்கள். ஈட்டிகளுக்குப் பதிலாகத் தற்போது துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள்.
நிறைய ஆடைகள், பூட்ஸ் போன்றவற்றை அணியும் பழக்கம் இல்லாத மற்றொரு தேசத்தினர் காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டு, அந்த நிலையிலிருந்து அவர்கள் வெளிவந்து ஐரோப்பியர்களைப் போல ஆடை அணிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். முன்பெல்லாம், ஐரோப்பாவில் மக்களே தங்கள் உடலுழைப்பின் மூலம் தங்கள் நிலங்களை உழுதார்கள். இப்போதோ, நீராவி இயந்திரங்கள் போன்றவற்றின் மூலம் பெருமளவிலான வயல்வெளிகளை உழ முடிவதுடன், அதன் மூலம் பெரும் செல்வம் ஈட்ட முடியும். இதுதான் மனித நாகரிகத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது…
முன்பெல்லாம் மக்கள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். இப்போது ஒரு நாளுக்கு நானூறுக்கும் மேற்பட்ட மைல் தூரத்தை ரயில்கள் மூலம் காற்றைக் கிழித்துக்கொண்டு கடக்க முடியும். இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டால் ஆகாய விமானங்கள் மூலமாக உலகின் எந்தப் பகுதியையும் ஒருசில மணி நேரங்களில் அடைந்துவிட முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
மனிதர்களுக்குத் தங்கள் கைகால்களின் பயன்பாடு இனி தேவைப்படாது. ஒரு பொத்தானை அழுத்தினால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே அவர்களின் ஆடை வந்துவிடும். இன்னொரு பொத்தானை அழுத்தினால் அவர்கள் படிக்கும் செய்தித்தாள் அவர்களிடம் வரும். மூன்றாவது பொத்தானை அழுத்தினால் அவர்களுக்காக மோட்டார் கார் காத்திருக்கும்… எல்லாமே இயந்திரங்களால் நிறைவேற்றப்படும்.
முன்பெல்லாம், மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட விரும்பினால் அவர்களின் உடல் பலத்தைக் கொண்டு அவர்கள் மதிப்பிடப்படுவார்கள். தற்போது ஒரு குன்றுக்குப் பின்னால் ஒரே ஒரு மனிதன் இருந்துகொண்டு இயந்திரத் துப்பாக்கியை அழுத்தினால் ஆயிரக் கணக்கானவர்களின் உயிரைப் பறிக்க முடியும். இதுதான் மனித நாகரிகம்.
முன்பெல்லாம், மனிதர்கள் திறந்த வெளிகளில் காற்றோட்டமான இடங்களில் தங்களுக்குப் பிடித்த அளவுக்கு வேலை பார்த்தார்கள். தற்போதோ, பராமரிப்புப் பணிகளுக்காகக் கூட ஆயிரக் கணக்கான மனிதர்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் ஒன்றுசேர்ந்து வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. விலங்குகளை விட மோசமானது அவர்களின் நிலைமை. ஒருசில கோடீஸ்வரர்களின் நலனுக்காக அந்தத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து மிகவும் அபாயகரமான வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.
முன்பெல்லாம், மனிதர்கள், உடல்ரீதியிலான பலவந்தத்தின் மூலமாக அடிமைகளாக ஆக்கப்பட்டனர். தற்போதோ, பணத்தாசை மூலமாகவும் பணத்தைக் கொண்டு அடையக் கூடிய வசதிகளைக் காட்டியும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்…
இந்த மனித நாகரிகம் அறத்தையும் மதத்தையும் பொருட்படுத்துவதில்லை. உடல் சார்ந்த வசதிகளை அதிகரிக்கும் நோக்கத்தை இந்த நாகரிகம் கொண்டிருந்தாலும், அதைக் கூட செய்ய முடியாமல் மிக மோசமாகத் தோல்வியைத் தழுவுகிறது.”
காந்தியின் முன்னோடி…
காந்தியின் ஆசான்களில் ஒருவரான டால்ஸ்டாயும் இதைப் போன்ற கருத்துகளைக் கொண்டிருந்தார். அவருடைய கதை ஒன்றில் ஐரோப்பியர் ஒருவர் சீனரிடம் இயந்திரங்களின் நன்மைகளைப் பற்றிப் புகழ்ந்துபேசுவார். உடல் உழைப்பிலிருந்து மனிதர்களை இயந்திரங்கள் விடுவிக்கின்றன என்று ஐரோப்பியர் அந்த சீனரிடம் வாதிடுவார். அதுபோன்ற விடுதலை என்பது பேரழிவாகவே போய் முடியும் என்றும், உடல் உழைப்பு இல்லாமல் மகிழ்ச்சி சாத்தியம் இல்லை என்றும் சீனர் ஐரோப்பியருக்குப் பதில் கூறுகிறார்.
காந்தி, டால்ஸ்டாய் இருவரின் விமர்சனக் கணைகளுக்கு ஐரோப்பியர்கள் இலக்காவதையும் கீழைத் தேசங்களின் மேல் அவர்களுக்கு கரிசனம் இருந்ததையும் முந்தைய பத்திகளில் நாம் காண முடியும். நாகரிகம் என்ற பெயரில் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதன் மூலம் கிடைத்ததாகத் தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உயர்ந்த அந்தஸ்து கொடுத்த அதிகாரத்தில் ஏனைய தேசங்களின் மக்களை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தியதாகவே காந்தி கருதினார்.
இதனாலெல்லாம் தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய யுகத்தில் மனிதர்கள் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருந்தார்கள் என்றும் தற்போது மனிதர்கள் அப்படியில்லை என்றும் காந்தி கருதியதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. தொழில்நுட்பம் மனிதர்களைக் கடுமையான உழைப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமே தவிர அவர்களை அடிமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றுதான் காந்தி நினைத்தார். நவீன யுகத்தையும் தாண்டி அதிநவீன யுகத்தில் நுழைந்திருக்கும் நாம் காந்தி காலத்துடன் நம் காலத்து நிலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மூன்று கேள்விகள்
முன்பு நினைத்தே பார்த்திருக்க முடியாத கருவிகள், இயந்திரங்கள், கண்டுபிடிப்புகள்! எல்லாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் சொகுசாக வைத்திருப்பதற்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உரியவை என்று நம்மிடம் விளம்பரப்படுத்தப்பட்டு நம்மை ஈர்ப்பவை. எந்த ஒரு புது சாதனம் வந்தாலும் அதை ஒரு மீட்பராகக் கருதி பழைய சாதனத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதியதை நாடி ஓடுகிறோம். இந்தச் சூழலில் இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
1. மாட்டு வண்டிக் காலத்தைவிட தற்போது நாம் நேரத்தை அதிகம் மிச்சப்படுத்துகிறோமா?
2. தொழில்நுட்ப யுகத்துக்கு முந்தைய யுகத்திலும் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கவில்லைதான். ஆனால், தற்போது அந்த நிலையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
3. ஏராளமான சாதனங்கள், இயந்திரங்கள் வந்த பிறகு உண்மையில் நாம் கடின உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் உண்மையில் ‘ஆம்’ என்று பதில் சொல்வது கடினமே. அப்படி, ‘ஆம்’ என்று சொல்பவர்களுக்கும் ‘இல்லை’ என்று சொல்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை நாம் ஆழ்ந்து பரிசீலித்தால் நவீனத் தொழில்நுட்பம் எவ்வகையான அத்துமீறலை நம் வாழ்வில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பது நமக்குப் புரியும்.
நேரத்தை நாம் மிச்சப்படுத்தியிருக்கிறோம், ஆனால் மிச்சப்படுத்திய நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளவும் ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துவிட நமக்கு நேரமே இல்லாமல் போகிறது. மிச்சம்பிடித்தல் என்பதே அதிநவீனத் தொழில்நுட்ப யுகத்துக்கு எதிரானது. எங்கேயெல்லாம் மிச்சம் இருக்கிறதோ அதை மிச்சமில்லாமல் உண்டு கொழுப்பது நவீன யுகம்.
முன்பை விட நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை, அதாவது ‘உண்மையான மகிழ்ச்சி’ என்பதை யார்தான் ஒப்புக்கொள்வார்கள்? நடைபாதையில் வசிக்கும் மனிதரிலிருந்து அவர் அப்படி நடைபாதையில் வசிப்பதற்கு மூலகாரணமாக இருக்கும் செல்வந்தர் வரை யாருமே மகிழ்ச்சியாக இல்லை. இவ்வளவு பிரம்மாண்டமான மகிழ்ச்சி வியாபாரம் உலக அளவில் நடந்தும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.
நம்மிடம் விற்கப்படும் மகிழ்ச்சி யாவும் கண நேரத்துக்கு நாக்குக்கு அடியில் இனிக்கும் சாக்லேட் போல இருந்துவிட்டுக் கரைந்துபோய்விடுகிறது; அல்லது மெய்நிகர் மகிழ்ச்சியாக (Virtual happiness) இருக்கிறது. ஏன் உண்மையான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கை, மதரீதியான பதில்களை நோக்கியெல்லாம் போக வேண்டாம். மிக எளிதான பதில் இருக்கிறது. நமது மகிழ்ச்சி அறம் சார்ந்த மகிழ்ச்சியாக இல்லை; பொறுப்புணர்வு கொண்ட மகிழ்ச்சியாக இல்லை.
காந்தி தனது தென்னாப்பிரிக்கப் பண்ணையில் காப்பி, டீ போன்ற பானங்களைத் தடைசெய்திருந்தார். தேயிலை, காப்பி போன்றவற்றை உற்பத்தி செய்வதற்காக லட்சக் கணக்கான மக்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுவது அதற்கான காரணங்களுள் ஒன்று.
இன்று நமக்கு விற்கப்படும் மகிழ்ச்சி, அதாவது மெய்நிகர் மகிழ்ச்சி, யாவும் யாரோ கோடிக் கணக்கான மனிதர்களின் உண்மையான மகிழ்ச்சி பறிக்கப்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை. ஆக, நம் மகிழ்ச்சி, நாகரிகம், முன்னேற்றம் எல்லாமே மெய்நிகர் மேம்பாடுகள்தானே தவிர உண்மையான மேம்பாடுகள் அல்ல.
மூன்றாவதாக, நவீனத் தொழில்நுட்பம் நம்மைக் கடின உழைப்பிலிருந்து விடுவித்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் காண வேண்டும். முன்பெல்லாம் நாள்கணக்கில், மாதக் கணக்கில் கடின உழைப்பைச் செலுத்திச் செய்த வேலைகளை இன்று கணிப்பொறி சில மணி நேரங்களில் முடித்துவிடுகிறதுதான். அப்படி இருந்தால் ஏன் இரவு பகலாக கணிப்பொறியின் முன்பு உட்கார்ந்து கடின வேலை பார்க்க வேண்டும் நாம்?
உலக மக்கள் தொகையில் கணிசமானோரை உடல்சார்ந்த கடின உழைப்பிலிருந்து விடுவித்து, மூளை சார்ந்த கடின உழைப்பில் வகையாகச் சிக்க வைத்துவிட்டது நவீனத் தொழில்நுட்பம். மூளை சார்ந்த வேலை என்றாலும் மணிக்கணக்கில் கணிப்பொறி முதலான கருவிகள் முன்பு உட்கார்ந்திருப்பதும் கடின உழைப்புதானே. ஆகவே, காந்தி முன்கூட்டியே சொன்னதுபோல் நவீனத் தொழில்நுட்பம் உண்மையில் நம்மைக் கடின உழைப்பிலிருந்து விடுவிக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், நம்மைக் கடின உழைப்பிலிருந்து விடுவிக்கும் சாதனங்கள் என்று சொல்லப்படுபவற்றை உற்பத்தி செய்வதற்காகக் கொத்தடிமை நிலையில் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் கடின உழைப்பில் ஈடுபடவைக்கப்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியுமா?
காதல் கலந்த தொழில்நுட்பம்…
காந்தி முழுமுற்றாக நவீனத் தொழில் நுட்பத்தை ஒதுக்கிவிடவில்லை. மனிதர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகச் சிறந்த சாதனங்களுள் ஒன்றாக சிங்கர் தையல் இயந்திரத்தை அவர் கருதினார். அந்தக் கண்டுபிடிப்பு காதல் கலந்து செய்யப்பட்டது என்று காந்தி கூறினார்.
சிங்கர் என்ற கண்டுபிடிப்பாளர், தன் மனைவி மணிக்கணக்கில் கையால் துணி தைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வருந்தி, அவருக்கான பரிசாகக் கண்டுபிடித்ததுதான் சிங்கர் தையல் இயந்திரம். லட்சக் கணக்கான பெண்களுக்கு உண்மையில் கடின உழைப்பிலிருந்து விடுதலை தந்ததால் அதை அவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதினார் காந்தி. தையல் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கும் தொழிற்சாலைகள் தேவைப்படுமே என்று அவர் முன் கேள்வி எழுப்பப்படுகிறது.
அதற்கு காந்தி, “ஆமாம். ஆனால், அதுபோன்ற தொழிற்சாலைகளெல்லாம் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நானும் ஒரு சோஷலிஸ்ட்டுதான். அந்தத் தொழிற்சாலைகளெல்லாம் மிகவும் ஈர்க்கக்கூடியதும் ஆதர்சமானதுமான நிலையில்தான் இயங்க வேண்டும்; லாப நலனுக்காக இயங்கக் கூடாது; ஆனால் மனித குலத்தின் நலனுக்காக இயங்க வேண்டும், பேராசையின் இடத்தை அன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.
தேசம், மதம், தொழில்நுட்பம் எல்லாவற்றையும் விட உயரத்தில் மனித குலத்தையே காந்தி வைத்தார். மனித குலத்தின் மேம்பாட்டுக்காகத்தான் மற்ற எல்லாம் இருக்க வேண்டும் என்று கருதினார். அந்த நோக்கத்தில்தான் இயந்திரங்கள் உருவாக்கப்பட வேண்டுமேயொழிய மனிதர்களின் உறுப்புகளையும் மனிதர்களையுமே தேவையற்றதாக ஆக்கிவிடும் நோக்கத்தில் இயந்திரங்கள் உருவாக்கப்படக்கூடாது என்று காந்தி கருதினார்.
இன்றைய அதிநவீனத் தொழில்நுட்ப யுகத்தில் எதையும் யோசிக்க முடியாத வேகத்தில் நாம் போய்க்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டத்தில் சட்டென்றும், முற்றிலும் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட முடியாதுதான். ஆனால், அது குறித்த பிரக்ஞையும் குற்றவுணர்வும் நமக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நமது தொழில்நுட்பம் நமக்குத் தரும் மகிழ்ச்சி அறம் சார்ந்த மகிழ்ச்சியா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த சுயவிசாரணையில் காந்தி நமக்குப் பெரிதும் உதவக் கூடும்.
ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
(திங்கள்கிழமை சந்திப்போம்…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT