Last Updated : 15 Feb, 2017 11:08 AM

 

Published : 15 Feb 2017 11:08 AM
Last Updated : 15 Feb 2017 11:08 AM

என்றும் காந்தி!- 10: காந்தியின் நேர்மை

‘மகாத்மா காந்தியின் நூல் தொகுப்புகள்’ (Collected Works of Mahatma Gandhi’) காலவரிசைப்படி மொத்தம் நூறு தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. முதல் தொகுதியில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது இது: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்கு தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்துக்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனி திருடுவது இல்லை என்றும் நான் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.”. காந்திக்கு 15 வயது நடந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. தான் செய்த திருட்டுக்கு மன்னிப்புக் கேட்டு அவர் எழுதிய கடிதத்தை அவரது தந்தை கண்ணீர் மல்கப் படித்துப்பார்த்துவிட்டுக் கிழித்துப்போட்டுவிடுகிறார். அந்தக் கடிதத்தைப் பின்னாளில் ‘சத்தியசோதனை’யில் காந்தி நினைவுகூருகிறார்.

நேர்மை என்ற விஷயம் அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அவரது பெரும்பாலான நற்பண்புகள் அவரது தாய் புத்தலிபாயால் ஊட்டப்பட்டவை. சிறு வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொய் பேசக்கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அந்த நாடகம் அவருக்குள் மிக மிக ஆழமாக ஊன்றியது.

‘காப்பி’ அடிக்கத் தெரியாத முட்டாள்தனம்!

காந்தியின் பள்ளிக்கு ஒருமுறை கல்வி ஆய்வாளர் வருகிறார். மாணவர்களிடம் ஆங்கிலச் சொற்களை எழுதச்சொல்கிறார். நான்கு சொற்களைச் சரியாக எழுதிவிட்ட காந்தி ‘Kettle’ என்ற சொல்லை மட்டும் பிழையாக எழுதிவிடுகிறார். காவல் ஆய்வாளருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஆசிரியர் காந்தியை அவரது பக்கத்துப் பையனைப் பார்த்து எழுதுமாறு சைகை காட்டுகிறார். காந்தியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘’நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்து ‘காப்பி’அடிக்காமல் பார்த்துக்கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்துவிட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும்படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. ‘காப்பி’அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறுகிறார் காந்தி (சத்தியசோதனை, நவஜீவன் வெளியீடு).

நேர்மையாக இருப்பதில் இழப்புகளோ அவமானமோ ஏற்பட்டாலும் நாம் நேர்மையாக நடந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சி அவருக்குச் சிறு வயதிலேயே இருந்திருக்கிறது. பெரியவரானதும் தனது நேர்மையைக் குறித்து அவர் மகிழ்ச்சி கொண்டதில்லை. இயல்பான கடமையைச் செய்வதில் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற உணர்வுதான் அது.

எதிராளியிடமும் நேர்மை

காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

இதற்கு அவரது வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை உதாரணம் காட்ட முடியும். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு காந்தி கலந்துகொண்ட முதல் போராட்டம் ‘சம்பாரண் போராட்டம்’. பிஹாரில் உள்ள அவுரி விவசாயிகளுக்கான போராட்டம் அது. காந்திக்கு ஆதரவான உணர்வு கொண்ட அரசு ஊழியர் ஒருவர் அரசாங்கத்துக்குத் தான் எழுதிய அறிக்கையின் நகலொன்றை அப்போது காந்தியின் போராட்டக் களத்தில் இருந்த சகாவான ராஜேந்திர பிரசாதிடம் ரகசியமாகக் கொடுக்கிறார். அந்த அறிக்கை காந்தியிடம் கொண்டுவந்து காட்டப்படுகிறது. திருட்டுத்தனமாகப் பெறப்பட்டது என்று கூறி அந்த அறிக்கையை காந்தி ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. அதேபோல், சம்பாரண் கலெக்டர் காந்தியைக் கடுமையாகக் கண்டித்து ஒரு கடிதம் அனுப்புகிறார். அனுப்பிய பிறகு, ‘அவசரப்பட்டுவிட்டோமே’ என்ற உணர்வு ஏற்பட அந்தக் கடிதத்தைத் தான் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கிறார். அதற்குள் காந்தியை அந்தக் கடிதம் வந்துசேர்கிறது. காந்தியின் இளம் தொண்டர்கள் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலாம் என்றும் நகலெடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பிவிடலாம் என்றும் வலியுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால் அந்தக் கடிதம் திரும்பப் பெற்றதாக ஆகாது என்று சொல்லி காந்தி அந்தக் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்.

இப்படி எதிராளிக்கும் நேர்மையாக காந்தி இருந்ததால்தான் எதிராளி இறங்கிவருகிறார். காந்தியின் நோக்கத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்கிறார். அல்லது காந்தியின் நேர்மை முன்பு தனது நேர்மையின்மை எல்லோருக்கும் தெரியும்படி அம்பலப்பட்டு நிற்பது கண்டு அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காகவேனும் எதிராளி இறங்கிவருகிறார்.

கட்சிக்காரரா, உண்மையா?

அதையெல்லாம் விடப் பெரிய கூத்துக்களையும் காந்தி நடத்தியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தியும் அவரது பெரிய வழக்கறிஞரும் ஒரு வழக்கை நடத்துகிறார்கள். கணக்குவழக்கு தொடர்புடைய வழக்கு அது. காந்தியின் கட்சிக்காரர் கொடுத்த கணக்குவழக்கை எதிர்த் தரப்பு மத்தியஸ்தர்களின் தணிக்கைக்கு விடுகிறது. மத்தியஸ்தர்கள் கணக்கைக் கூட்டிப் போட்டதில் ஒரு பிழை செய்துவிடுகிறார்கள். இந்தப் பிழையால் காந்தியின் கட்சிக்காரருக்குச் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ஆனால், காந்தி இந்தப் பிழையை நாமாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘நம் கட்சிக்காரருக்கு விரோதமாகத் தன்னால் நடந்துகொள்ள முடியாது’ என்று பெரிய வக்கீல் மறுத்துவிடுகிறார். அவரிடம் பேசி காந்தி தன் முடிவின் நியாயத்தை உணர்த்துகிறார். எனினும், தன்னால் வாதிட முடியாது என்று சொல்லிவிட்டு காந்தியையே வாதிடச் சொல்கிறார் பெரிய வக்கீல். காந்தியின் மீது நன்மதிப்பு கொண்ட கட்சிக்காரரிடமும் பேசி காந்தி அதற்குச் சம்மதிக்க வைக்கிறார். கணக்கில் ஏற்பட்ட பிழையைப் பற்றி நீதிபதியிடம் காந்தி சொல்ல காந்தியின் மீது நீதிபதிக்கு நன்மதிப்பு ஏற்படுகிறது.

காந்தியின் நேர்மை என்பது அவரளவிலேயே முடிந்துவிடுவதில்லை. தன் குடும்பத்தை அதில் ஈடுபடுத்துகிறார். அப்புறம் தொண்டர்கள் அளவுக்கு விரிகிறது. இன்றும் காந்தியவாதி என்றால் ஒருவர் மீது மற்றவர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அவர் நேர்மையானவர் என்பதே. காந்தியவாதியாக இல்லாமலும் ஒரு அதிகாரியோ அரசியல்வாதியோ நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை காந்தியவாதி என்று அழைப்பது நம் வழக்கம். இந்த நேர்மை இல்லையென்றால் இரண்டு நாடுகளிலும் பெருந்திரள் மக்களைத் திரட்டி இவ்வளவு போராட்டங்கள் நடத்த முடிந்திருக்குமா என்ன?

ஒருவரது நேர்மை, தியாகம், கடின உழைப்பு போன்றவற்றின் அடைப்படையிலேயே மக்கள் அவருக்குத் தலைமைப் பொறுப்பை அளிக்கின்றனர். அவர் மீது சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் உதறித்தள்ளிவிடவும் மக்கள் தயாராக இருப்பார்கள். ஆகவே, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மக்களுக்கு முன்னால் ‘தான் நேர்மையாக நடந்துகொள்பவர்’ என்ற பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்குக் கத்திமேல் நடப்பதுபோல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நேர்மையாக இருப்பதற்கு காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாக காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. சிறு வயதில் அவர் செய்த தவறுகள், கஸ்தூரிபாய் காந்தியிடம் மோசமாக நடந்துகொண்டது, இறுதிக் காலத்தில் அவர் செய்த பிரம்மச்சரிய சோதனைகள் என்று எல்லாவற்றையும் காந்தியே நம் முன்னால் திறந்துகாட்டிவிடுகிறார்.

எனினும் காந்தியின் நேர்மை குறித்துத் திரும்பத் திரும்ப அவதூறுகள் செய்யப்படுக்கின்றன. காந்தி சார்பான ஆதாரங்களை முன்வைத்தும்கூட அவற்றைப் பார்க்க மறுத்து, சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அவதூறுகளுக்கு எதிரான ஆதாரபூர்வமான மறுப்புகள் இந்தத் தொடரின் இறுதியில் வழங்கப்படும்.

நாளை..

ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x