Published : 09 Nov 2014 01:00 PM
Last Updated : 09 Nov 2014 01:00 PM

இவரைத் தெரியுமா? - பிரபல வீணைக் கலைஞர் வீணை காயத்ரி

‘பேபி காயத்ரி’ என்று குழந்தைப் பருவத்திலேயே புகழ் பெற்ற ‘வீணை’ காயத்ரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 பிறந்தது ஆந்திரம். முழுப் பெயர் காயத்ரி வசந்த ஷோபா. தந்தை ஜி.அஸ்வத்தாமா, தெலுங்கு சினிமா இசையமைப்பாளர். அம்மா கமலா, வீணைக் கலைஞர்.

 ஆரம்பகாலப் பயிற்சிக்கு பிறகு இவரது ஆஸ்தான இசைப் பயிற்சியாளராக விளங்கியவர் பிரபல இசைக் கலைஞர் டி.எம்.தியாகராஜன்.

 புகழ்பெற்ற இசைக் கலைஞர் பி. சாம்பமூர்த்தி இவரை ‘குழந்தை மேதை’ என்று பாராட்டியுள்ளார். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், ‘பேபி காயத்ரி’ என்ற பெயரில் சிறு வயதில் இருந்தே வீணைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார்.

 ‘சிறுவயதில் என் விளையாட்டுப் பொருளே வீணைதான்’ என்பார் காயத்ரி பெருமிதத்துடன். தனது 9 வயதில் முதல் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 1968-ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபாவில் நடைபெற்ற ‘தியாகராஜா’ விழாவில் கச்சேரி நடத்த இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 6 வயதில் தொடங்கிய இசைப் பயணம் விரைவில் பொன்விழா காணவிருக்கிறது. தனது 12 வயதிலேயே அகில இந்திய வானொலி நிலைய இசைக் கலைஞராக நியமிக்கப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. அப்போதே பிரபல ஆந்திரப் பத்திரிக்கை ஒன்று இவரது வீணை வாசிப்பை ‘கடவுளின் மொழி’ என்று புகழாரம் சூட்டியது.

 தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக 2013-ல் நியமிக்கப்பட்டார். தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும், அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழக இசைக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசகராகவும் பணியாற்றிவருகிறார்.

 கர்நாடக இசையில் மட்டுமின்றி திரையிசை, கஜல், ஜாஸ், வெஸ்டர்ன், ஃப்யூஷன், கிராமிய இசை என்று இவர் கையாளாத இசை பாணியே இல்லை எனலாம். பெரும்பாலான நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

 இந்தியத் திரையுலகில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.

 தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துபவர். வீணையின் மகத்துவம், வீணை இசை ஜாம்பவான்கள் பற்றிய அரிய தகவல்கள், இசையின் மூலம் நோய் தீர்வு ஆகிய தகவல்களை இணையதளம் மூலம் வழங்கிவருகிறார்.

 இசைப் பேரொளி விருது, கலைமாமணி விருது, மத்திய பிரதேசத்தின் குமார் காந்தர்வ் விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர், தொடர்ந்து இசைச் சேவை ஆற்றிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x