Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM
தமிழகத்தில் கலப்பட மணல் விற்பனை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் மணல் வாங்கும் போது, அதன் மாதிரியை மணல் பரிசோதனை மையத்தில் சோதித்துப் பார்ப்பது அவசியம் என்று கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
மணல் தட்டுப்பாடு
கட்டுமானப் பணிக்கு மணல் மிகவும் அவசியம். தமிழகத்தில் செயற்கை தட்டுப்பாட்டால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மணல் தட்டுப்பாட்டைப் போக்கு
வதற்காக திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 12 புதிய மணல் குவாரிகளை அரசு விரைவில் திறக்கவுள்ளது.
கலப்பட மணல் விற்பனை அதிகரிப்பு
இதற்கிடையே மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கில் தமிழகத்தில் பரவலாக ஆற்று மணலுடன் கடல் மணல் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் அதுபோன்ற கலப்பட மணல் சமீபத்தில் பிடிபட்டது. இதையடுத்து கலப்பட மணல் விற்பனையைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருந்தாலும், கலப்பட மணல் விற்பனை அதிகரித்துள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறிய தாவது: கட்டுமானப் பணிக்கு ஆற்று மணல் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கருங்கல் தூளை (எம் சாண்ட்) பயன்படுத்தலாம். சுத்திகரிக்கப்படாத கருங்கல் தூளை (குவாரி டஸ்ட்) கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சமீபத்தில் ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக கலப்பட மணல் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னையில் அண்மையில் 60 லோடு கலப்பட மணலை அதிகாரிகள் பிடித்தனர்.
தரத்தை அறிவது அவசியம்
கலப்பட மணல், அதிக மாசுடனும், தாங்கும் திறன் இல்லாமலும் இருக்கும். இந்த மணலைப் பயன்படுத்தினால் கட்டிடம் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. சில ஆண்டுகளிலே கட்டித்தில் விரிசல் ஏற்படும். மணல் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிக்கப்படாத கருங்கல்தூளை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
எனவே தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் சொந்தமாக வீடு அல்லது வேறு ஏதாவது கட்டிடம் கட்டும்போது அதற்கு தரமான மணல் பயன்படுத்தப்படுகிறதா என்பதை பரிசோதித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மணல் பரிசோதனை மையம்
மணலில் மாசு இருக்கிறதா, உப்பு அல்லது துவர்ப்புத் தன்மை அதிகம் உள்ளதா, வேதிப் பொருள் கலந்திருக்கிறதா போன்றவற்றை இயற்பியல் மற்றும் வேதியியல் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
சென்னையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மணல் பரிசோதனை மையங்களில் மணலின் தன்மையைப் பரிசோதித்துத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ரூ.20 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்தேகம் ஏற்பட்டால்…
பொதுமக்கள் மணல் வாங்கும்போது, அதைப் பார்த்தும் சுவைத்தும் அதன் தரத்தை ஓரளவுக்கு அறியலாம். ஆற்றுமணலாக இல்லாவிட்டல் அது பவுடர்போல இருக்கும். நாக்கில் மணலை வைத்து சுவைத்தால் அதில் உப்பு, உவர்ப்பு அதிகம் இருக்கிறதா என்பதை கண்டறியலாம். அப்போது சந்தேகம் ஏற்பட்டால், பரிசோதனை மையத்தில் மணலைப் பரிசோதித்து அதன் தன்மையை அறியலாம். இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT