Published : 09 Jan 2017 05:10 PM
Last Updated : 09 Jan 2017 05:10 PM
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
>அன்பாசிரியர் 17 - ஆனந்த்: உளவியல் ஊக்கம் தரும் ஆசான்! தொடரில் திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி அரசுப் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும், இருக்கும் சுவரின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், மாணவர்கள் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுவதாகவும் அன்பாசிரியர் ஆனந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 'தி இந்து'வின் இஸ்லாமிய வாசகர், தன் நண்பர்களோடு இணைந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க 2 லட்சத்து 65,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். மூன்று மாதங்களில் ரூ.1 லட்சம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.65,000 என மூன்று தவணைகளாக முழுத்தொகையையும் பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
இத்தொகை மற்றும் மாணவர்களின் பரிசுத்தொகை, ஊர்மக்கள் மற்றும் ஆசிரியர் ஆனந்தின் பங்களிப்போடு சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவர் திறந்துவைத்த போது.
இதுகுறித்த தகவலை பகிர்ந்துகொண்ட அன்பாசிரியர் ஆனந்த், ''யாராலுமே கண்டுகொள்ளப்படாத எங்கள் கிராமம் மற்றும் பள்ளியை உலகறியச் செய்த 'தி இந்து'வுக்கும், உதவுவதற்காக கை விரல்கூட நீட்டப்படாத எங்கள் பள்ளிக்கு நாங்கள் இருக்கிறோம் என்று அரவணைத்து சுற்றுச்சுவர் அமைக்க உதவிய நண்பர்களுக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கதவு அமைக்க 3 லட்சத்துக்கு 77 ஆயிரத்து 773 ரூபாய் செலவானது. இதில் பெயர் குறிப்பிட விரும்பாத 'தி இந்து' அமீரக வாசகர்கள் ரூ.2.65 லட்சமும், மாணவர்கள் பரிசுத்தொகையில் 35 ஆயிரமும் ஊர் பொதுமக்கள் 18 ஆயிரம் ரூபாயும் அளித்தனர். மீதம் தேவைப்பட்ட 59 ஆயிரத்தை நான் பகிர்ந்துகொண்டேன்.
கடந்த இரண்டு வருடமாக சிறப்பான கல்வி, சமூக பணி போன்றவற்றை எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து செய்துவந்தாலும் அடிப்படை உள்கட்டமைப்பு (சுற்றுச்சுவர்) இல்லை என்பதால் எங்கள் பள்ளி ஒதுக்கப்பட்டது. உங்கள் வழியாக சிறந்த பள்ளி என்ற விருதைப் பெற்றுள்ளோம். இன்று உங்களால் எங்கள் கிராமத்தின் முதல் தலைமுறை மாணவர்கள் பயிலும் சாதனைப் பள்ளியாக உருவாகியுள்ளது.
எங்கள் கிராம மக்களுக்கு தங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பட்டுள்ளது. இதை என்னால் கண்கூடாக காணமுடிகிறது. எங்கள் கிராமத்தின் சார்பாக உங்களுக்கு கோடானகோடி நன்றியை காணிக்கையாக்குகிறேன்'' என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் ஆனந்த்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT