Published : 03 Apr 2017 09:26 AM
Last Updated : 03 Apr 2017 09:26 AM
தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எந்த இடம், எத்தனை கி.மீ என்பதை ஆங்கிலத்தை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருகிறது தேசிய நெடுஞ்சாலைத் துறை. இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் வடமாநிலங்களில் இருந்து பொருட்கள் ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் வசதிக்காக என்று விளக்கம் சொல்கிறார்கள்.
‘மைல் கற்களில் உள்ள தமிழ் எழுத்தை அவர்கள் அழிக்கவில்லை. ஆங்கில எழுத்தைதான் அழித்து இந்தியில் எழுதுகிறார்கள்’ என்று பாஜக சப்பை கட்டு கட்டுகிறது. இதை தமிழக அரசியல் கட்சிகள் நம்ப தயாரில்லை. இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
ஆங்கிலத்தை அழிக்காமல் இந்தியை கூடுதலாக எழுதி இருந்தால் இந்த சர்ச்சை வந்திருக்காது. இது வேண்டுமென்றே செய்யப்படும் சீண்டல். பிற தமிழ் ஆர்வ கட்சிகளும் இதைக் கண்டிக்கின்றன.
கடந்த 1967 தி.மு.க. தேர்தல் அறிக்கையில், அனைத்திந்திய அரசு தேர்வுகளில் இந்திக்கு இடமளிப்பதைப் போன்று தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று அண்ணா குறிப்பிட்டிருந்தார்.
இருபெரும் திராவிட கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றன. அப்போது அவர்கள் அண்ணாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அரசு தேர்வில் தமிழ் என்ற அதிமுக்கிய கோரிக்கைக்கு செய்த முயற்சி என்ன?
தமிழகத்தில் உள்ள எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்வது இன்றுவரை தொடர்கிறது. இந்தி தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு கூடுதலாக ஒரு இன்கிரிமென்ட் கிடைக்கும். மத்திய அரசில் பணிபுரியும் தமிழர்கள் இந்த இன்கிரிமென்ட்டை இழக்க விரும்பவில்லை.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் ஆங்கிலத்தில் இருக்கும். அந்த பள்ளிகளில் முதல் மொழி (First Language) ஆங்கிலம்தான். இரண்டாவது மொழி (Second Language) அதாவது தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மனி எந்த மொழி படிக்க விருப்பம் என்று விருப்பம் கேட்டிருப்பார்கள்.
தமிழகத்தில் தனியார் பள்ளியில் தமிழ் இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறது. அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் தமிழர்கள் இரண்டாம் மொழியாக தமிழைப் படிக்க சொல்வதில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மனிதான். பெரும்பாலும் இந்திதான் அவர்கள் தேர்வு
தமிழர்களின் இந்தி பட மோகம் அலாதியானது. பாபி, ஷோலோ என்று பல படங்கள் சக்கை போடு போட்டது தமிழ் பேசும் நல்லுலகத்தில்தான். சில இந்தி படங்களின் திரைக்கதையை வார இதழ்கள் தமிழ்ப்படுத்திகூட வெளியிட்டன.
மத்திய சென்னையில் கணிசமான அளவு இந்தி பேசும் மக்கள் இருக்கிறார்கள். இந்தியை எதிர்க்கும் திராவிட கட்சிகள் அங்கு இந்தியில் தான் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் தந்து ஓட்டு கேட்கிறார்கள். இதுவும் தவறு என்றும் சொல்ல முடியாது.
இந்தியை எதிர்க்கும் திராவிட கட்சிகள் தேர்தல் நேரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸையும், பாஜகவையும் கூட்டணியில் சேர்க்காமல் விட்டால்தான் என்ன? இல்லையெனில் இந்தி பிரச்சினை மார்க்கண்டேயன் மாதிரிதான் இருக்கும். சாவே கிடையாது. பரவாயில்லையா?
மத்தியில் ஆளும் இந்தி மீது அதிக வெறி கொண்ட ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. தமிழர்கள் இந்தி படிப்பார்கள். இந்தி சினிமா பார்ப்பார்கள். அதை திணிக்க முயற்சிக்கும்போதுதான் எரிச்சல் அடைகிறார்கள்.
தமிழில் மணியார்டர் விண்ணப்பம் வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் போராடி வெற்றி பெற்றார். அதன் பிறகுதான் ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் வந்தது.
இந்தி திணிப்பு பற்றி மத்திய அமைச்சரவையில் பங்கு பெறும் தமிழக காவி, கதர்சட்டை எம்.பி.க்கள், எந்த கருத்தும் சொல்வதில்லை. காரணம் பதவி பயம்தான். மொழியா, பதவியா என்றால் அங்கு அதிகாரம் வெற்றி பெறுகிறது.
இந்தி எதிர்ப்பு அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமாக தனியார் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி தனிநிகர் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு எல்லாம் வட இந்திய மாணவர்கள் நிறைய பேர் படிக்கிறார்கள். இது தமிழ்நாடு, நீங்கள் திருக்குறள் ஒப்பித்தால்தான் கல்லூரியில் சேர அனுமதி என்றா சொல்கிறார்கள். பணம்தானே அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில், கட்சி, மொழி என்று அவர்கள் பார்வை தனித்தனியாக இருக்கிறது. எனவே காவி, கதர் கட்சிகளே மைல்கல்லில் இந்தி எழுத்து தேவையற்ற வேலை. எப்படி எங்கள் தமிழ் மக்கள் இந்தி படிக்கிறார்களோ அப்படி உங்கள் இந்தி மக்கள் தமிழ் படிக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT