Published : 20 Jan 2014 07:53 PM
Last Updated : 20 Jan 2014 07:53 PM
கரூர் சுக்காலியூரில் இருந்து காந்திகிராமம் வரையிலான 4 வழிச்சாலை அமைக்கவும், காந்திகிராமம் – வீரராக்கியம் வரையிலான மேம்படுத்தப்பட்ட இரு வழிச்சாலை அமைக்கவும் தடையாகவும் இருக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றவும், மாற்றி அமைக்கவும் குறியிடப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும், அவை இன்னும் மாற்றி அமைக்கப்படாததால் இந்த சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
இந்தப்பணிகளை விரைவில் தொடங்கி கரூர் நகர போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்..
கரூர் - திருச்சி வழியாக செல்லும் நாகப்பட்டினம் - கூடலூர் மாநில நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதிக கனரக வாகன போக்குவரத்தின் காரணமாக இச்சாலை நான்கு வழிச்சாலை, பலப்படுத்தப்பட்ட இரு வழிச்சாலையாக உயர்த்தும் பணி 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் கரூர் - திருச்சி சாலையில் வீரராக்கியத்தில் இருந்து சுக்காலியூர் வரை 4 வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வந்ததால், வீரராக்கியத்தில்
இருந்து புலியூர், காந்திகிராமம், சுங்கச்சாவடி வழியிலான சுக்காலியூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 67 மாநில நெடுஞ்சாலைதுறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சாலையை திருச்சி, குளித்தலை உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், வேன்கள், சிற்றுந்துகள், வேன், கார், இரு சக்கர வாகனங்கள் சென்று, வர பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், நகர்ப்புற மயமாதலின் விளைவாக குடியிருப்புகள் அதிகரிப்பு, மக்கள் தொகை உயர்வு இவற்றின் காரணமாக காந்திகிராமம் முதல் சுக்காலியூர் வரையில் அதிகளவு போக்குவரத்து இந்த சாலை வழியாகவே நடைபெற்று வருகிறது.
சுக்காலியூரில் இருந்து செல்லாண்டிபாளையம், தாந்தோணிமலை வழியாக புறவழிச் சாலைக்கு செல்பவர்கள், புறவழிச்சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் அதிகரித்துவிட்டதன் காரணமாக இந்த சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் சுக்காலியூரில் இருந்து காந்திகிராமம் வரையுள்ள 6.8 கி.மீட்டர் நீளம் உள்ள பழைய தேசிய நெடுஞ்சாலை 67-ஐ ரூ.16.37 கோடியில் பல வழித்தடமாகவும், நான்கு வழிச்சாலையாகவும் உயர்த்துவதற்கான பூமி பூஜை 2013 நவம்பர் 9-ல் நடந்தது.
இதில் 2-ம் கட்டமாக ரூ.6 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில் காந்திகிராமத்தில் இருந்து வீரராக்கியம் வரை இரு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை அடுத்த சில வாரங்களில் நடைபெற்றது.
இதையடுத்து சாலை விரிவாக்கத்திற்காக இந்தப்பகுதியில் இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து கணக்கீடு மேற்கொள்ளப்பட்டன. இதில் சுக்காலியூரில் இருந்து காந்திகிராமம் வரை உள்ள சுமார் 140 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட குறியிடப்பட்டன. மேலும் இவற்றை மாற்றி அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டன.
இவற்றில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கிய திட்ட மதிப்பீட்டின் படி, பல மின் கம்பங்களை மாற்றி அமைப்பதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில இடங்களில் மட்டும் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுக்காலியூரில் இருந்து காந்திகிராமம் வரை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே குறியீடப்பட்டுவிட்டன. சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் மையப்பகுதியிலும் கோடிடப்பட்டன. எனினும் 2 மாதங்களுக்கு மேலாகியும் மரங்களை அகற்றும் பணியோ, மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியோ இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால் சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிகார்த்திகேயனிடம் கேட்டப்போது, “சுக்காலியூர் - காந்திகிராமம் சாலை பல வழித்தடமாகவும் மையத்தடுப்புடன் கூடிய நான்கு வழிச் சாலையாகவும் 15 மீட்டர் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையை விரிவாக்கும் முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சாலை விரிவாக்கத்தையொட்டி அகற்றப்பட வேண்டிய மரங்கள், மின் கம்பங்கள், சாலையின் மையப்பகுதி குறியீடப்பட்டுள்ளன.
இவற்றில் மின் கம்பங்களை மாற்றி அமைப்பதற்கான கணக்கீட்டின் அடிப்படையில், பல மின் கம்பங்களை மாற்றி அமைப்பதற்கான தொகை செலுத்தப்பட்டுள்ளது. சில மின் கம்பங்களை மாற்றுவதற்கான செலவுதொகை குறித்து கணக்கீடு நடந்து வருகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கம்பங்களை மாற்றி அமைத்த பிறகு சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும்” என்றார்.
இதுகுறித்து கரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ப.சிவசாமி கூறியது:
“மாற்றி அமைக்கப்பட வேண்டிய மின் கம்பங்கள், அதற்கான தொகை கணக்கிடப்பட்டு அதன்படி, நெடுஞ்சாலைத்துறையினர் எங்களுக்கு பணம் செலுத்தியுள்ளனர். அதற்கான தளவாடங்கள் தயாராக உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, தற்போதுள்ள மின் கம்பங்கள் மாற்றி நடவேண்டிய இடங்களை நெடுஞ்சாலைத்துறை அடையாளம் கண்டு தெரிவித்தால், அதன்படி மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கும்” என்றார்.
இருவேறு அரசு துறையினர் சாலை விரிவாக்க பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தங்களுக்குள் மாற்றி, மாற்றி குறைகூறுவதை தவிர்த்து, இருவரும் ஒருங்கிணைந்து விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் சுக்காலியூர் – காந்திகிராமம்- வீரராக்கியம் வரையிலான சாலையை விரைந்து அமைத்து இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியும் என்கின்றனர் கரூர் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT