Published : 30 Dec 2013 08:30 PM
Last Updated : 30 Dec 2013 08:30 PM
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமி, சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவிப்பதால், அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான புன்னக்காயலைச் சேர்ந்தவர் லிட்டன். இவரது மகன் டனிஸ்டன்(27). இவர், மும்பை பொவாயில் இயங்கி வரும் ஓ.எம்.சி.ஐ. ஷிப்பிங் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.ஆஸ்பால்ட் வெஞ்சர் என்ற ஆயில் டேங்கர் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றினார்.
சோமாலியா கொள்ளையர்கள்
இந்த கப்பல் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி சோமாலியா கடல் பகுதியில் சென்ற போது, கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டது. கப்பலில் தமிழக மாலுமியான டனிஸ்டன் உள்ளிட்ட 15 பேர் இருந்தனர். கடற்கொள்ளையர்களுடன் கப்பல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கப்பலையும், 8 மாலுமிகளையும் மட்டும் கடற்கொள்ளையர்கள் சில நாள்களில் விடுவித்தனர்.
ரூ.10 கோடி வேண்டும்
தமிழக மாலுமி டனிஸ்டன் உள்பட 7 பேரை சோமாலியா கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த தலா இருவர், பஞ்சாப், ஆந்திராவைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர். இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் 63 பேரை விடுதலை செய்தால் தான், மாலுமிகளை விடுவிப்போம் எனக் கடற்கொள்ளையர்கள் முதலில் நிபந்தனை விதித்தனர்.
பின்னர் அதைத் தளர்த்தி பணம் கேட்டு வருகின்றனர். முதலில் ரூ.25 கோடி கேட்டனர். பின்னர் ரூ.15 கோடியாக குறைத்து, தற்போது இறுதியாக ரூ.10 கோடி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மாலுமிகள் சிறை பிடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
குடும்பத்தினர் வேதனை
மாலுமி டனிஸ்டனுக்கு திருமணமாகவில்லை. அவரது தந்தை லிட்டன்(57) பெயின்டராக வேலை செய்கிறார். தாய் சுகுணா(56). ஜூலிட்டா என்ற அக்காவும், ராஜேஷ் என்ற தம்பியும், ஜோதி(21), கிரேட்டா (18) ஆகிய தங்கைகளும் உள்ளனர். டனிஸ்டனின் வருமானத்தை நம்பித் தான் அவரது குடும்பம் உள்ளது. அவர் கடற்கொள்ளையர்கள் பிடியில் சிக்கியிருப்பதால், குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டனிஸ்டனின் தந்தை லிட்டன் கூறுகையில், டனிஸ்டன் நான்கு ஆண்டுகளாக வேறு நிறுவன கப்பல்களில் மாலுமியாகப் பணியாற்றியுள்ளார். ஓ.எம்.சி.ஐ. நிறுவன கப்பலில் வேலைக்கு சேர்ந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், கடற்கொள்ளையர்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.
தாயின் உடல்நலம் பாதிப்பு
அவன் சிறைபட்ட நாளில் இருந்து எங்கள் குடும்பம் மிகவும் வேதனையில் உள்ளது. அவனது தாய் சுகுணா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் திடீர் திடீரென எழுந்து என் பிள்ளை எங்கே... என்று கத்துகிறார். திருமண வயதில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். டனிஸ்டனை மீட்கக் கோரி மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனிடம் மூன்று முறை மனு கொடுத்துள்ளோம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மூன்று முறை சந்தித்து மனு அளித்தோம். மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்ற தலைவர்களிடமும் மனு அளித்துள்ளோம். தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம். பிரதமர், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். கப்பல் துறை, சர்வதேச கப்பல் மாலுமிகள் சங்கம் என நாங்கள் மனு கொடுக்காத இடமே இல்லை. இருப்பினும் என் மகன் இதுவரை மீட்கப்படவில்லை.
சம்பளம் நிறுத்தம்
முதலில் 9 மாதங்கள் கப்பல் நிறுவனம் மாதம்தோறும் டனிஸ்டன் சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அதன்பிறகு திடீரென நிறுத்திவிட்டது. பின்னர் மாலுமிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் வரை சம்பளம் வந்தது.
இந்நிலையில், இந்த மாதம் முதல் சம்பளம் கிடையாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த மாதம் இந்த பிரச்சினை தொடர்பாக மும்பையில் கப்பல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மாலுமிகளை மீட்டுவிடுவோம். எனவே, சம்பளம் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
இதுபோல தான் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலும் 3 மாதங்களில் மீட்டுவிடுவோம் எனக் கூறினர். ஆனால் ஓராண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்துவிட்டதால் கப்பல் நிறுவனம் மெத்தனமாக செயல்படுகிறது. அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.
2 நிமிடம் பேச அனுமதி
மாதம்தோறும் ஒரு நாள் 2 நிமிடங்கள் மட்டும் போனில் பேச கடற்கொள்ளையர்கள் அனுமதிப்பார்கள். அப்போது அரசிடம் பேசி தன்னை விடுவிக்குமாறு டனிஸ்டன் கூறுவான். கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும், சில நேரம் துன்புறுத்துவதாகவும் கூறுவான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போனில் பேசினான். அதற்கு பிறகு இன்னும் பேசவில்லை. என் மகன் எப்போது திரும்பி வருவான் என வேதனையோடு காத்திருக்கிறோம், என்றார்.
டெல்லியில் போராட்டம்
புன்னக்காயலைச் சேர்ந்த அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க உறுப்பினர் தென்னவன் கூறியதாவது: மாலுமி டனிஸ்டனை மீட்க மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 6.1.2012-ல் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் மற்றும் குடும்பத்தினர் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம்.
அடுத்த கட்டமாக பிப்ரவரி மாதம், கப்பல் மாலுமிகள் குடும்பத்தினரை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுப்பது, பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். தமிழக முதல்வரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT