Published : 04 Feb 2014 09:03 PM
Last Updated : 04 Feb 2014 09:03 PM

திண்டுக்கல்: விதிமுறை மீறிய திருமண மண்டபங்கள், கட்டிடங்கள்: நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க தயக்கம்

திண்டுக்கல் நகராட்சியில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரே நேரடியாக உத்தரவிட்டும் உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நெருக்கடியால் “சீல்' வைக்க முடியாமல் அதிகாரிகள், திணறி வருகின்றனர். அதனால், நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்த திருமண மண்டபங்களில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் பகிரங்கமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகராட்சியில் 4,000 சதுர அடிக்கு உள்பட்ட வீடுகள், 2,000 சதுர அடி வணிகவளாகங்களுக்கு மட்டுமே நகரமைப்புப் பிரிவு அனுமதி வழங்க முடியும். இதைவிட கூடுதல் அளவில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதிபெற வேண்டும்.

அனுமதி பெற கட்டிடங்கள்

திண்டுக்கல் நகராட்சியில் சமீபத்தில் நகரமைப்பு அதிகாரிகள் நேரடி ஆய்வு, பொதுமக்கள் புகார் அடிப்படையில் அனுமதி பெறாத கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், தற்போது வரை நகராட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத கட்டிடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் வீடுகள் அதிகளவு இடம் பெற்றுள்ளன. அடுத்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.

அதனால், உள்ளூர் திட்டக்குழுமம், நகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிய திருமண மண்டபம், வணிக வளாகங்களுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவின்படி, தாசில்தார், நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் தடை விதித்து சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நெருக்கடியால் நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் “சீல்' வைக்க முடியவில்லை. தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்கவும் முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: அனுமதியில்லாத கட்டிடங்களில் தணிக்கை செய்யப்பட்டதில் அனுமதியில்லா கட்டிடங்களுக்கான நகராட்சி ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழு துணை இயக்குநர் அங்கீகாரம் செய்து வழங்கிய உத்தரவுகள் மற்றும் வரைபடங்கள் கேட்கப்பட்டன. பலர் ஒரு தளத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு மூன்று தளம் கட்டியுள்ளனர். சில கட்டிட உரிமையாளர்களிடம் அதற்கான ஆவணங்களே இல்லை. சுமார் 25 ஆண்டு முதல் தற்போதுவரை அனுமதி பெறாமலே வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் செயல்படுகின்றன.

சில வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் குடியிருப்பு இல்லங்களுக்கான வீட்டு வரி செலுத்தி நகராட்சியை ஏமாற்றி வருகின்றனர். திருமண மண்டபங்களில், ஆட்கள் வெளியேறுவதற்கு அவசர கால வெளியேறும் வழி இருக்க வேண்டும். ஆனால், ஆள்களே வெளியேற முடியாத மிகக்குறுகலான ஆபத்து விளைவிக்கும் நிலையில் வழி உள்ளன.

வாகன நிறுத்தும் இடம்

திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வாகனங்கள் நிறுத்தும் இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால், வீடுகள் முன் வாகனங்களை குறுக்கும், நெருக்குமாக திருமண மண்டபத்திற்கு வருவோர் நிறுத்துகின்றனர். அதனால், நிகழ்ச்சி நாளில் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். அனுமதி பெற இந்த கட்டிடங்கள் மீது தமிழ்நாடு பொது கட்டிடங்கள் (உரிமம் வழங்கல்) சட்டம் 1965 பிரிவின்படி சிறைத் தண்டனை, அபராதம் விதித்து “சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நெருக்கடியால், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x