Published : 13 Jun 2017 09:09 AM
Last Updated : 13 Jun 2017 09:09 AM
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொன்மையான இடங்களில் விரிவான தொல்லியல் ஆய்வுகளை நடத்தவும் ஏற்கெனவே பராமரிப்பில் உள்ள தொல்லியல் சின்னங்களை இன்னும் மேம்படுத்திக் கவனிப் பதற்கும் தமிழக தொல்லியல் துறை வட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.
1200 தொல்லியல் சின்னங்கள்
நமது பாரம்பரியம் மற்றும் புராதன சின்னங்கள் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையால் (ஏ.எஸ்.ஐ) பாது காக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநி லத்திலும் பாரம்பரிய மற்றும் புராதன சின்னங் களை அடையாளப்படுத்தி வைத்திருக்கும் ஏ.எஸ்.ஐ., நிர்வாக வசதிக்காக அவை களை பல வட்டங்களாக பிரித்து வைத்திருக் கிறது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் 747, தமிழகத்தில் 403, கேரளத் தில் 13, ஆந்திரத்தில் 37 என மொத்தம் 1200 தொல்லியல் மற்றும் புராதன சின்னங்கள் உள்ளன.
இதில், கர்நாடகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மூன்று வட்டங்களாக பிரிக்கப்பட்டுள் ளன. அதன்படி, பெங்களூரு வட்டத்தில் 207 சின்னங் களும், தார்வாட் வட்டத்தில் 299 சின்னங்களும்,
‘யுனெஸ்கோ’வின் பொறுப் பிலுள்ள பாரம்பரியச் சின்னங்களை உள்ள டக்கிய ஹெம்பி வட்டத்தில் 241 தொல்லியல் சின்னங்களும் உள்ளன. ஒன்றுபட்ட ஆந்திரா வில் ஐதராபாத் வட்டத்தில் இருந்த தொல்லியல் சின்னங்கள் தற்போது தெலங்கானாவுக்குள்ளும் வருவதால் தெலங்கானாவுக்கென தனி வட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது.
முந்திக்கொண்ட கர்நாடகா
இதற்கு முன்பு, ஐதராபாத் வட்டத்துக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது மத்திய அரசு. இப் போது தெலங்கானா வுக்கும் தனியாக 2 கோடி ரூபாயை தன் முயற்சியால் பெற்றி ருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திர சேகரராவ். இதேபோல் பெங்களூரு வட்டத்துக்கு 8 கோடி, தார்வாட் வட்டத்துக்கு 6 கோடி, ஹெம்பி வட்டத்துக்கு 5 கோடி என ஆண்டுக்கு மொத்தம் 19 கோடி ரூபாயை கர்நாடக தொல்லியல் சின்னங்களை பாது காக்கவும் புதிய ஆய்வுகளை மேற் கொள்ளவும் வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், ஒரே வட்ட மாக இருக்கும் சென்னைக்கு ஆண் டுக்கு 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதில் 13 தொல் லியல் சின்னங்களை கொண்ட கேரளத்தின் திருச்சூர் வட்டத்துக்கும் சென்னைக்கு ஒதுக் கப்படும் நிதியிலிருந்து தான் செலவு செய்ய வேண்டும்.
இந்த நிலையில் தான், தமிழக தொல்லியல் வட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுகுறித்து
‘தி இந்து’விடம் பேசிய தொல்லியல் ஆய்வாளரும் பொறியாளருமான ஆர்.கோ மகன், “தொல்லியல் துறை கேந்திரமாக விளங்கும் கர்நாடகா, அத்துறைக்காக மத்திய அரசிடம் முட்டிமோதி நிதியைப் பெற்று தொல்லியல் சின்னங்களை பாது காப்பதுடன் சுற்றுலாவையும் மேம்படுத்தி வருகிறது. போதிய நிதி கிடைப்பதால் அங்கே புதிய தொல்லியல் ஆய்வுகளும் சாத்தியமாகின்றன. ஆனால் தமிழக அரசியல்வாதிகளுக்கு, வரலாற்றைத் தாங்கி நிற்கும் தொல்லியல் அடையாளங்கள் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை; அக்கறையும் இல்லை. அதனால், அவர்கள் இதுபற்றி பேசுவதே இல்லை.
2003-ல் தருமபுரி எம்.பி. பு.த.இளங்கோவன் தொல்லியல் துறை ஆலோசனை குழு வில் உறுப்பின ராக இருந் தார். அவர் மூலமாக இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் பேச வைத்தோம். அதைத் தொடர்ந்து, திருச்சியை தலைமையிடமாக கொண்டு இன்னொரு தொல்லியல் வட்டத்தை உருவாக்குவதற்கான திட்ட முன்மொழிவு சென்னை தொல்லியல் வட்டத்திலிருந்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அது செயல்பாட்டுக்கே வரவில்லை.
இரண்டாக பிரித்தால் சாதிக்கலாம்
தஞ்சை பெரியகோயில், தராசுரம் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் கோயில் இவை நான்கும் ‘யுனெஸ்கோ’ கட்டுப்பாட்டில் உள்ளது. இவை தவிர, தமிழகத்தில் தொல்லியல் முக்கி யத்துவம் வாய்ந்த இடங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக கீழடியில் மண்ணுக்கு அடியி லிருந்த தொழில்நகரம் அகழ்வு செய்யப்பட் டுள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், மாளிகைமேடு உள்ளிட்ட இடங்களில் இன்னும் விரிவான அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு நிதி ஆதாரம் வேண்டும். சென்னை தொல்லியல் வட்டத்தை இரண்டாக பிரிப்பதன் மூலமே அதை ஓரளவுக்கு நாம் சாதிக்க முடியும்’’ என்று சொன்னார்.
இதுகுறித்து சென்னை தொல்லியல் வட்ட அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,
“வட்டம் பிரிப்பது குறித்து ஏற்கெனவே பேச்சு இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக தகவல் இல்லை. தமிழகம் போதிய அழுத்தம் தந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்’’ என்று சொன்னார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT