Published : 10 Jan 2014 07:56 PM
Last Updated : 10 Jan 2014 07:56 PM
தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து, குறைந்த நிலத்தில், அதிக லாபம் பெறும் பசுமைக்குடில் சாகுபடி, விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. அரசு மானியத்தில் 10 பசுமைக்குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்தது மழை
தூத்துக்குடி மாவட்டத்தில், பருவ மழை பொய்த்துப் போனதால் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் எந்தக் குளமும் நிரம்பவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்நிலை நீடிப்பதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மழையளவு குறைவதால், சாகுபடி பரப்பும் குறைகிறது. குறைவான தண்ணீரை வைத்து, நிறைவாக லாபம் பெறும் புதிய தொழில் நுட்பமான பசுமைக்குடில் சாகுபடி, தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது.
பசுமைக்குடில்
பசுமைக்குடில் சாகுபடி ஒரு முன்னோடி அறிவியல் பூர்வமான சாகுபடி முறையாகும். குறைந்த நிலத்தில், இருக்கிற நீரை பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் இதர நுண்ணீர்ப் பாசன உபகரணங்கள் உதவியுடன், பாலித்தீன் போர்வையில் குடில் அமைத்து, பயிர்களை சாகுபடி செய்யும் முறையே பசுமைக்குடில் சாகுபடி. இம்முறையில், அப்பயிருக்கு தகுந்த சீதோஷ்ணநிலையை செயற்கையாக உருவாக்கி, விளைச்சலை அதிகரிக்க முடியும். குறிப்பிட்ட பருவம் என்றில்லாமல், ஆண்டு முழுவதும் காய்கறி மற்றும் மலர் சாகுபடி செய்ய முடியும்.
இச்சாகுபடி முறைக்கு முதலில் செலவிடப்படும் நிரந்தர முதலீடு அதிகமாக இருந்தாலும், தொடர்ச்சியாக பல பருவங்களுக்கு குடில்களை பயன்படுத்த முடியும்.
குறைந்த இடம்
பசுமைக்குடில் அமைக்க நீர்வசதி உள்ள கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு மற்றும் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் போதுமானது. 3 எச்.பி. முதல் 5 எச்.பி. குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார் தேவை.
பாலித்தீன் போர்வை மற்றும் குடில் அமைக்க தேவையான இரும்பு அல்லது மரத்திலான சட்டங்கள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், நுண்ணீர் தெளிப்பான், ஈரத்தை மட்டுப்படுத்தும் அல்லது உலர்த்த தேவையான மின் விசிறி, ஈரத்தை கட்டுப்படுத்தும் கருவிகளை அமைத்துத் தர, பல முன்னோடி தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், வறட்சியான விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பகுதி விவசாயிகளுக்கு பசுமைக்குடில் பயனுள்ளதாக இருக்கும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டதாரியின் முயற்சி
விளாத்திகுளம் வட்டம், அயன்பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் வி. அகிலன். வேளாண் முதுகலை பட்டதாரியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், 1,000 சதுர அடியில் பாலித்தீன் போர்வை மூலம் பசுமைக்குடில் அமைத்துள்ளார்.
பசுமைக்குடிலில் 2 முறை சாகுபடி முடித்து, மூன்றாம் பருவமாக சீரிய ஒட்டு வெள்ளரி பயிரிட்டுள்ளார். முதல் முறை ஹாலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ஐரோப்பியன் டிலைட்’ வெள்ளரி விதையை சாகுபடி செய்தார். மொத்தம், 3,600 செடிகள் பயிரிட்டார். அதற்கு ரூ. 1 லட்சம் செலவானது. 9.5 டன் வெள்ளரிக்காய் கிடைத்தது. கிலோ ரூ. 25-க்கு விற்பனை செய்து,120 நாள்களில் ரூ. 2.30 லட்சம் கிடைத்தது. ரூ.1.30 லட்சம் லாபம். இரண்டாம் பருவத்தில் அதே ரக வெள்ளரியை பயிரிட்டார். இந்த முறை 13 டன் விளைச்சல் கிடைத்தது. கிலோ ரூ. 27-க்கு விற்பனையானது. லாபம் ரூ. 2.11 லட்சமாக அதிகரித்தது.
மூன்றாம் முறையாக வெள்ளரியை பயிட்டுள்ளார். ஆனால், ‘பி.எஸ்.4800’ என்ற வெளிநாட்டு ரகத்தை பயிரிட்டுள்ளார். இம்முறை 14 டன் விளைச்சல் இருக்கும். “ஓராண்டில் இந்த பசுமைக்குடில் அமைக்க முதலீடு செய்த மொத்த தொகையையும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் அகிலன்.
10 குடில்கள்
“புதூர் வட்டாரத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில், 10 பசுமைக்குடில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்தார். ஒரு குடிலின் மதிப்பு ரூ. 11.35 லட்சம். அரசு மானியமாக ரூ.7.57 லட்சம் வழங்குகிறது. மீதமுள்ள ரூ. 3.78 லட்சத்தை விவசாயிகள் வழங்க வேண்டும்.
பசுமைக்குடில் அமைக்க புதூர் வட்டாரத்தில், அரை ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதியுடன் இருக்க வேண்டும். 25 ஆண்டுகள் இறவை காய்கறி சாகுபடியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். அல்லது வேளாண், தோட்டக்கலைத்துறை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 1,000 சதுர அடி பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து கொடுக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் புதூர் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநரை அல்லது மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT