Published : 03 Nov 2014 03:58 PM
Last Updated : 03 Nov 2014 03:58 PM

உண்மையான 4-வது தூண்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல்லை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

'தூத்துக்குடி முத்துநகரம், துறைமுக நகரம் என்பதை தாண்டி, விடுதலைப் போராட்ட பாரம்பரியம் மிக்க நகரம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பாரம்பரியம் மிக்க 'இந்து' குழுமத்தில் இருந்து வெளிவரும் 'தி இந்து' தனக்கென சொந்த முகத்தோடு மாபெரும் வெற்றியைப் பெற்று ஓராண்டை இன்று கடந்து நிற்கிறது. தனக்கென ஒரு கருத்தை வைத்து 'தி இந்து' பேசுகிறது. ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகைக்கு சொந்த முகம் இருக்க வேண்டும். அந்த வகையில் உண்மையான நான்காவது தூணாக 'தி இந்து' நிற்கிறது.

தேச அக்கறை

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, எழுத்தறிவு வெறும் 12 சதவீதமே. இவர்களே பத்திரிகை படிப்பவர்களாக இருந்தனர். இவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் தான் பத்திரிகைகளை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதித்தது. அதேநேரத்தில் பெருவாரியான மக்களை கவரும் காட்சி ஊடகங்களை அரசு தன்வசமே வைத்துக் கொண்டது.

ஆனால், உலக மயமாக்கல் கொள்கை வந்த பிறகு எல்லாம் தனியார் மயமாகிவிட்டது. இதில் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற பத்திரிகைகளில் 'தி இந்து' முதலிடத்தில் இருக்கிறது. தேசத்தின் மீது உண்மையான பற்று கொண்ட பத்திரிகையாக திகழ்கிறது.

மங்கள்யான் அனுப்பியதன் மூலம் விண்வெளித் துறையில் உலகில் நான்காவது இடத்துக்கு இந்தியா வந்துவிட்டது. அதேநேரத்தில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகள் வரிசையிலும் இந்தியா 4-ம் இடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள், வன்முறைகள் அதிகம் உள்ள நாடாக மாறியுள்ளது நம் நாடு.

எந்த பத்திரிகைகளும் நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு இடம் தருவதில்லை. ஆனால், 'தி இந்து' நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. இந்த வாசகர் திருவிழா தலைமுறைகளின் சந்திப்பாக நடைபெறுகிறது. இது சாதாரண மேடை என்று நான் நினைக்கவில்லை, வரலாற்றால் கட்டமைக்கப்பட்ட மேடை.

பத்திரிகை தர்மம்

பத்திரிகை என்பது வாசகர்களின் மனசாட்சியை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சமூகம் என்ன பேச நினைக்கிறது என்பதை அறிந்து, அதனை பேசவும், பேசவைக்கவும் வேண்டும் என்பது தான் பத்திரிக்கைகளின் அடிப்படை தர்மம். இதனை 'தி இந்து' சிறப்பாக செயல்படுத்துகிறது.

இலவசம் என்பது 'தி இந்து'வில் இல்லை. இது தொடர வேண்டும். ஊழல், மக்கள் பிரச்சினைகளை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை, அவலங்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். பரந்துபட்ட தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்ப வேண்டும். அதற்கு என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எப்போதும் துணை நிற்போம்' என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x