Published : 20 Jan 2014 07:30 PM
Last Updated : 20 Jan 2014 07:30 PM
சாக்கடைக் கழிவுகள் கலப்பதால் பவானி நதி மாசடைந்துள்ளதோடு, இந்த நீரைப் பருகும் மக்களும் பலவித இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ரூ.11 கோடியை அரசு ஒதுக்கினால் நதியை தூய்மைப்படுத்திவிட முடியும். அதைச் செய்யாமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர் என புலம்புகின்றனர் பலவித இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் மேட்டுப்பாளையம் மக்கள்.
மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகி, கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையை அடைந்து, பின்னர் சமதளப் பகுதியை வந்தடைகிறது பவானி. மலைக்காடுகள் வழியே பல கி.மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த நதி, மக்கள் நெருக்கம் மிகுந்த மேட்டுப்பாளையம் நகரை வந்தடையும் வரை மட்டுமே அதன் இயற்கையான தூய்மை நீடிக்கிறது. அதன் பின்னர் சுமார் 1.75 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகரின் ஒட்டுமொத்தக் கழிவு நீரும் எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல், நேரிடையாக பவானியாற்றில் விடப்படுகிறது. நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து சாக்கடைக் கழிவுகளும் பவானியில் கலக்கிறது. இப்படி, பவானியின் முகப்புகளில் 24 இடங்களில் கிளை வாய்க்கால் களாக சாக்கடைகள் கலக்கின்றன.
2 லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்கள்
நகராட்சியின் 33 வார்டுகளில் 31 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் தலா கடைக்கு தினசரி 5,000 பிளாஸ்டிக் டம்ளர்கள் குப்பையில் போடப்படுகின்றன. இப்படி, ஒரு நாளைக்கு சேரும் சுமார் 2 லட்சம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பவானியில் சங்கமிக்கின்றன.
வெளிநாட்டு, உள்நாட்டு மக்கும், மக்காத கழிவுகளை கப்பல்கள், கன்டெய்னர்கள் மூலம் தருவித்து காகித அட்டை தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட கம்பெனி வெளியேற்றும் கழிவுகளும் பவானியில்தான் கலக்கின்றன. டெர்ரி துணிகள், டர்க்கி டவல்கள், ஜீன்ஸ் துணிகள் தயாரிக்கும் இரண்டு பெரிய கம்பெனிகளும் சாய, சலவைப்பட்டறை கழிவுகளை பவானியில்தான் விடுகின்றன.
நோய் பாதிப்பில்..
இவையெல்லாம் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து கரூர், கொடுமுடி, கூடுதுறை சென்று காவிரி ஆற்றில் பவானி கலக்கிறது. மேட்டுப்பாளையத்தை தாண்டி சிறுமுகை பேரூராட்சி, சிக்கதாம்பாளையம், ஜடையம்பாளையம் ஊராட்சிகள் மற்றும் பவானி சாகர் அணையை சுற்றியுள்ள நூற்றுக்கணுக்கான கிராம மக்கள் இந்த மாசடைந்த பவானி நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சுகாதாரக் கேட்டால் பாதிக்கின்றனர். இங்குள்ள நீரேற்று நிலையங்களில் குளோரின் கலந்து ஆற்றுநீரை குடிநீராக விநியோகித்த போதிலும் தூய்மையடைவதில்லை.
இப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீரை 2 நாட்கள் சேமித்து வைத்தால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் இதை பயன்படுத்தும் மக்களுக்கு பலவித நோய்கள் வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள். ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், ஆற்று நீரில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூட முடிவதில்லை. ஆற்றில் இறங்கினால் தோல் அரிப்பு வந்துவிடுகிறது என்கின்றனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
மேட்டுப்பாளையம் நகரின் அத்தனை கழிவுநீரையும் சுத்திகரிக்க, இங்கு ஓடும் பல்வேறு கழிவு நீர் வாய்க்கால்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இப்போது நதியின் முகத்துவாரங்களில் 24 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. அதை அப்படியே 5 இடங்களாக சுருக்கி அந்த 5 மையங்களிலும் தலா ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இதற்கு ரூ.11 கோடி செலவாகும். அவ்வளவு பெரிய நிதியை செலவிடும் சக்தி இந்த சின்ன நகராட்சிக்கு இல்லை. இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மன்றத்திலும் தீர்மானங்கள் போட்டு அனுப்பப்பட்டது, அனுமதி வரவில்லை.
இப்படி தொடர்ந்து வலியுறுத்தியதால் மத்திய நீர்வள ஆதார பாதுகாப்பு மையத்தில் மனு கொடுத்து நிதி கோரும்படி அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதுபற்றி அடுத்த மன்றக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT