Published : 24 Nov 2014 10:25 AM
Last Updated : 24 Nov 2014 10:25 AM
சியரா லியோனில், எபோலா நோய்ப் பரவலின் தாக்கத்தால், பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் மாணவர்களின் கல்வி தடைபடுவதைத் தடுக்கும் வகையில், தலைநகர் ஃப்ரீடவுனில் இயங்கிவரும் சர்வதேசப் பள்ளி, புதிய கற்பித்தல் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஃப்ரீடவுனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை சர்வதேசப் பள்ளியின் நிர்வாகிகள் அறிவித்தனர்.
எபோலா நோயின் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பள்ளிகளைக் காலவரையின்றி மூட கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. எபோலா பாதிப்பு இல்லை என்றால், செப்டம்பர் மாதம் முதலே பள்ளிகள் இயங்கத் தொடங்கியிருக்கும். இந்நிலையில், சர்வதேசப் பள்ளி அறிமுகப்படுத்தியிருக்கும் முறை இதுதான்: ‘கிரவுன் மீடியா சொலுஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் டிவிடி-க்கள், பள்ளிக்கு வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மாணவர் களுக்கு அனுப்பப்பட உள்ளன. அந்த டிவிடி-க்களில் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் அடங்கியிருக்கின்றன. இவை தவிர பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேசப் பள்ளிக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஃபாத்தமா டாக்கி, ‘வீட்டிலிருந்தபடியே கல்வி’ என்ற இந்தப் புதிய முறை, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, மிகவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். பாடங்களை டிவிடி வடிவில் மாணவர்களுக்கு வழங்குவது என்று பள்ளியின் ஆசிரியர்களும், பள்ளிக் கழகத்தின் உறுப்பினர்களும் சேர்ந்து முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தடைபட்ட தங்கள் கல்வியைத் தொடர்வார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பள்ளிகளில் வழக்கமாக நடத்தப்படும் அனைத்துப் பாடங்களும் இந்த டிவிடி-க்களில் இடம்பெற்றிருக்கின்றன. ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை இந்த டிவிடி-க்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் என்று டாக்டர் ஃபாத்தமா டாக்கி குறிப்பிடுகிறார். “பள்ளி நேரத்தின் பொன்னான தருணங்களை மாணவர்கள் இழப்பதை இந்தப் புதிய முறை ஈடுகட்டும்” என்று, இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்தும் கிரவுன் மீடியா சொலுஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அல்ஹாஜி மன்சராய் குறிப்பிட்டார்.
“டிவிடி-க்களும் புத்தகங்களும் கல்விக் குழுவினரால் ஆய்வுசெய்யப் பட்டுவருகின்றன. விரைவில் மாணவர்களுக்கு இவை வழங்கப்படும்” என்று அல்ஹாஜி கூறியுள்ளார்.
இதற்கிடையே, “எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்தில், சியரா லியோன் வெற்றி பெறும்” என்று அதிபர் எர்னெஸ்ட் பாய் கொரோமா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்நோய் பரவுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் தேவையான உதவி களை, சீனா செய்துவருவதாக அவர் கூறியுள்ளார்.
“மே மாதம் சியரா லியோனில் எபோலா பரவத் தொடங்கியதும், மருத்துவ உதவிகளை சீனா வழங்கிவருகிறது. கடந்த வாரம் 11 பேர் கொண்ட மருத்துவக் குழு சியரா லியோனுக்கு வந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எபோலா குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கான பயிற்சிகளை இக்குழு வழங்கிவருகிறது” என்று சியரா லியோனுக்கான சீனத் தூதர் ஜாவோ யான்போ கூறியுள்ளார்.
- சியரா லியோன் நாளிதழ் தலையங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT