Published : 19 May 2017 01:14 PM
Last Updated : 19 May 2017 01:14 PM

அறம் பழகு எதிரொலி: தி இந்து வாசகர்களால் மலேசியா சென்ற ஹேமாவர்ஷினி கராத்தே போட்டியில் தங்கம் வென்றார்

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

இதில் மதுரை மாணவி ஹேமாவர்ஷினி சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள ரூ.45,000 இல்லாததால், மலேசியா செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பது குறித்த செய்தி மே 6-ம் தேதி வெளியானது. இதைப் படித்த 'தி இந்து' வாசகர்கள், போட்டிக்குச் செல்லத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியதால், ஹேமாவர்ஷினி மலேசியா சென்றார்.

அங்கு நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் ஹேமா தங்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய மாணவி ஹேமாவர்ஷினி, ''ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு மேம். என்னை விட அம்மாதான் அதிகம் சந்தோசப்பட்டாங்க. அடுத்த போட்டிக்காக வர்ற வாரம் கோயம்புத்தூர் போறோம். அங்கயும் நல்லா விளையாடுவேன்'' என்கிறார்.

ஹேமாவர்ஷினியின் தாய் பொற்கொடி பேசும்போது, ''நான் படற சந்தோஷத்தை விட, எங்க தெருதான் அதிகமாக சந்தோஷப்படுது. பக்கத்து வீட்டுக்காரங்க என் மவளுக்கு பழங்க, பரிசுகள கொடுத்தாங்க.

ஒரு பட்டிக்காட்டுல பொறந்து, அங்கனயே வளர்ந்து, மதுரைல வாக்கப்பட்டேன். மதுரையைத் தாண்டி வேறு எங்கனயும் நான் போனதில்லை. ஆனா என் மக இந்த வயசுலயே வெளிநாடு போற வாய்ப்பு கிடைச்சு, அதுல ஜெயிச்சும் வந்துட்டா. இது எல்லாத்துக்கும் நீங்க ('தி இந்து' வாசகர்கள்) தான் காரணம் என்கிறார்.

ஹேமாவர்ஷினியின் சான்றிதழ் மற்றும் பதக்கம்.

கடுமையாக இருந்த இறுதிப் போட்டி

ஹேமாவின் பயிற்சியாளர் நாகச்சந்திரன் பேசும்போது, ''மொத்தம் 7 நாடுகள் போட்டியில் கலந்துகொண்டன. இறுதிப் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. என்னுடைய 25 வருட கராத்தே வாழ்வில் அது மாதிரியான போட்டியை நான் பார்த்ததே இல்லை.

ஆனாலும் மனம் தளராமல், கடுமையாகப் போராடி ஹேமாவர்ஷினி தங்கம் வென்றார்.

எங்களுக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த வெற்றியை தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறேன். என் மேல் நம்பிக்கை கொண்டு ஹேமாவைப் போட்டிக்கு அனுப்பிய அவரின் பெற்றோரின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.

நடுங்கிய கைகள்

போட்டிக்கு அனுப்பப் பணம் இல்லாமல் இருந்தபோது ஹேமாவர்ஷினியின் அம்மா பொற்கொடி, தன்னிடம் இருந்த ஒரேயொரு தங்கச் சங்கிலியை 15 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கும்போது அவரின் கைகள் நடுங்கின. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே அந்தப் பணத்தை வாங்கினேன்.

ஆனால் 'அறம் பழகு' கட்டுரையின் வாயிலாக 'தி இந்து', சிரமமில்லாமல் ஹேமாவர்ஷினி மலேசியா சென்று, வென்று வர ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தது. இதை என்றுமே மறக்க மாட்டோம்'' என்கிறார் நெகிழ்வுடன்.

இதைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.

படங்கள்: அரவிந்தன்.சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x