Published : 03 Jan 2017 11:04 AM
Last Updated : 03 Jan 2017 11:04 AM
கரூர் தாந்தோணிமலை பகுதியில் 2 வாரங்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் மோகன் தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சி தாந்தோணிமலை பகுதியில் குறைந்தபட்சம் 11 நாட்களில் இருந்து அதிகபட்சம் 3 வாரங்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிக கால இடைவெளியில் குடிநீர் விநியோகிப் பதால் பழைய குடிநீரை அதிக நாட்கள் வைத்துப் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. மேலும், குடிநீர் தீர்ந்துவிட்டால் தனியாரிடம் பணம் கொடுத்து லாரி தண்ணீர் வாங்கவேண்டி உள்ளது.
இதனால் ஏழை மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாமல் பெரும் சிரமத்துக் குள்ளாகின்றனர். எனவே, வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாந்தோணிமலை புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் பணிகள் முடிக் கப்படவில்லை.
எனவே, புதிய காவிரி குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடித்து காவிரி குடிநீர் வழங்கும் கால இடைவெளியை ஒரு வாரமாகக் குறைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முரளிதரனிடம் கேட்டபோது, “மின் இணைப்பு பணிகள் வழங்கப்பட்டவுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் தாந்தோணிமலை பகுதியில் புதிய காவிரி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதனால் குடிநீர் விநியோகிப்பதில் ஏற்படும் கால இடைவெளி கணிசமாகக் குறையும்” என்றார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தின் சுகாதார சீர்கேடு சரிசெய்யப்படுமா?
திருவாரூர் பேருந்து நிலையம் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதாக ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் வீரபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: திருவாரூரில் உள்ள பேருந்து நிலையம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மந்த கதியில் நடந்துவரும் நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையம் உரிய பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் உள்ளது.
கழிப்பிட வசதிகள் உரியவகையில் செய்து கொடுக்கப்படாததால் பயணிகள் பலர் திறந்தவெளியில் இயற்கை உபாதையைக் கழிப்பதால் பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமித்து 24 மணிநேரமும் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, நகராட்சி பொறுப்பு ஆணையர் பாலகங்காதரனிடம் கேட்டபோது, “நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் காலை, மாலை என 2 முறை பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்துகின்றனர். எவ்வளவு எடுத்துக் கூறினாலும் பயணிகள் பேருந்து நிலையத்தின் கீழ்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதைத் தடுக்க, அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலையொட்டி சிறிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. மேலும், அங்குள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ரூ.5 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT