Published : 06 Feb 2014 08:52 PM
Last Updated : 06 Feb 2014 08:52 PM

குப்பைக் கிடங்கால் நிம்மதி இழந்த வேலூர் மக்கள்: ஆய்வு செய்வதற்காக விரைவில் வருகிறது வல்லுநர் குழு

வேலூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கால் சதுப்பேரி பகுதி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். குப்பை பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வல்லுநர் குழுவினர் வரவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் நகராட்சி கடந்த 2008-ம் ஆகஸ்ட் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 60 வார்டுகள் கொண்ட மாநகராட் சியின் மொத்த மக்கள் தொகை 5 லட்சத்து 28 ஆயிரம் பேர். சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, தொழில் நிமித்தமாக வேலூர் வந்து செல்கின்றனர். வேலூர் மாநக ராட்சியில் தினமும் 150 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பகுதி சதுப்பேரி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

வேலூர் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் குப்பைகள், கொட்டப்படுகிறது. மலைபோல தேங்கியுள்ளதால் குப்பைகளால் மேலும் குப்பை கொட்ட முடியாத நிலை காணப்படுகிறது. இடப் பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இதனால் குப்பையில் இருந்து கிளம்பும் துர்நாற்றம் சுற்றியுள்ள 5 கி.மீ தூரத்திற்கு பரவுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமையாக அமல்படுத்தினால் குப்பைகள் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று கூறப்படுகிறது.

காய்கறி கழிவில் மின்சாரம்:

வேலூர் மாவட்டத்தில் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆற்காடு நகராட்சியில் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் முறையாக இந்த திட்டம் வெற்றிகரமான மின்சார உற்பத்தி திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தை பின்பற்றி வேலூர் மாநகராட்சியிலும் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என யோசனை கூறப்பட்டது.

ஏனென்றால் மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் சுமார் 30 முதல் 50 டன் காய்கறி கழிவுகள் கிடைக்கிறது. இந்த காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரித் தாலே மாநகராட்சி தெரு விளக்குகள் எரியும் என கூறப்பட்டது. இது தொடர் பான திட்ட அறிக்கையும் நடை முறைக்குவரவில்லை.

நிலம் விற்கமுடியவில்லை:

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அம்சா கூறுகையில், “குப்பை கிடங்கின் அருகில் எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் வைத்தேன். குப்பைகள் கொளுத்துவதால் பயிர்கள் கருகிவிட்டன. குப்பை கிடங்கில் உள்ள பன்றிகள் பயிர்களை அழித்துவிட்டன. நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது. சதுப்பேரி பகுதியில் நிலத்தை விற்கமுடியவில்லை. குப்பைகள் நாற்றம் எடுப்பதால் யாரும் வீடு வாங்கக்கூட வரமாட்டேன் என்கிறார்கள். இங்கு குப்பை கொட்டக்கூடாது” என்றார் .

ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர் கணேசன் கூறுகையில், “மாநகராட்சி குப்பை வாகனங்கள் தினமும் அதிவேகமாக செல்கிறது. ரோட்டில் செல்லவே பயமாக இருக்கிறது. வாகனங்கள் மெதுவாக சென்றால் நன்றாக இருக்கும்” என்றார்.

குப்பை கொட்ட 50 ஏக்கர் நிலம்:

சதுப்பேரி குப்பைக்கிடங்கு 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த குப்பைக்கிடங்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் மாநகராட்சிக்காக சுமார் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. ஆனால், குப்பை கிடங்கு தங்கள் பகுதியில் அமைய எதிர்ப்பு தெரிவிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். மாற்று திட்டங்கள் குறித்து உடனடியாக ஆலோசனை நடத்தி னால் நன்றாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து வேலூர் மேயர் கார்த்தியாயினி கூறுகையில், “சதுப்பேரி குப்பை கிடங்கில் இருந்து நாங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளோம். அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தும் அடுத்து என்ன செய்ய லாம் என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் சென்னை சென்று ஆலோசனை நடத்தி வந்துள்ளார்” என்றார்.

மாநகராட்சி ஆணையார் ஜானகி ரவீந்திரன் கூறுகையில், “வேலூர் மாநகராட்சியில் சேரும் குப்பைகளை அகற்றுவது எதிர்கால பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து ஆய்வு நடத்தினோம். இந்த பிரச்சினை குறித்த ஆய்வு செய்வதற்காக ஒரு வல்லுநர் குழுவினர் விரைவில் வேலூர் வர உள்ளனர்.

மேலும், சுற்றுச்சூழல் தொடர்பான குழுவினர் வேலூர் மாநகராட்சியின் குப்பைகளை எப்படி கையாள்வது, மாற்றுத் திட்டங்கள் என்ன? அதற்கான நிதி ஆதாரங்கள் எங்கு பெறுவது என்பது குறித்த ஆய்வு அறிக்கை தயாரிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப் படையில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x