Published : 13 May 2017 11:37 AM
Last Updated : 13 May 2017 11:37 AM
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இத்தருணத்தில் வாழ்வில் உயர வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எளிய மாணவர்களுக்கு உதவ 'தி இந்து' (தமிழ்) முடிவெடுத்துள்ளது. அரசுப்பள்ளி, தனியார் பள்ளி என எங்கு படித்தாலும், திறமைகளோடு இருக்கும் மாணவர்களுக்கான நல்வாய்ப்பு இது.
நல்ல மதிப்பெண்கள் பெற்றும், நீங்கள் விரும்பும் மேற்படிப்புகளைத் தொடர்வதற்குப் பொருளாதாரத் தடைகள் காரணமாக இருக்கிறதா? 'தி இந்து' உங்களுக்கு கரம் கொடுக்கக் காத்திருக்கிறது. உதவ நினைக்கும் நல்லுள்ளங்களுக்கும், தேவை இருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட முன்னெடுத்துள்ளோம்.
உதவிகள் உயர் கல்விக்கான தொகையாக இருக்கலாம். என்ன படிக்கலாம் என்ற ஆலோசனையாக இருக்கலாம். தேவைப்படும் உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
மதிப்பெண்கள்தான் வாழ்க்கையா?
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. படிக்கும்போது சராசரியாக இருந்த மாணவர்கள்கூட இன்றைய வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக, சமுதாயத்தில் பெரும் பதவிகளில் இருப்பவர்களாக, மாற்றத்தைக் கொண்டுவருபவர்களாக உள்ளனர். எனவே மதிப்பெண்களை மட்டுமே அளவீடாகக் கொள்ளாமல், பிற துறைகளில்/ திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களையும் அடையாளப்படுத்த விரும்புகிறோம்.
உதவிகள் தேவைப்படுவோர் உங்களது மகன்/ மகளாக இருக்கலாம். உறவினர், அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களைப் பற்றிய தகவல்களை 'தி இந்து'விடம் அளிக்க வேண்டுகிறோம்.
தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியான மாணவர்களைப் பற்றிய செய்தியும், அவர்களின் தேவையும் 'தி இந்து' இணையதளத்தில் >'அறம் பழகு' தொடரில் கட்டுரையாக வெளிவரும்.
உதவ விருப்பம் கொண்ட உள்ளங்கள், பொருளாதார ரீதியாக மாணவர்களுக்கு உதவலாம். நீங்கள் அளிக்கும் தொகை சிறிதாக இருந்தால்கூட அதன் மதிப்பு மிகப் பெரியது.
பணமாக அளிக்க இயலாத வாசக நெஞ்சங்கள், மாணவர்களுக்குத் தங்களின் நேரத்தையும், ஆலோசனைகளையும் வழங்கி அவர்களின் வாழ்வை வளமாக்கலாம்.
வாருங்கள் வாசகர்களே, 'அறம் பழகு' வாயிலாக உதவ சிரம் தாழ்ந்து அழைக்கிறோம்!
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT