Last Updated : 17 Feb, 2014 07:57 PM

 

Published : 17 Feb 2014 07:57 PM
Last Updated : 17 Feb 2014 07:57 PM

ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கேள்விக்குறியாகும் வேலைவாய்ப்பு

சுதந்திரத்திற்குப்பின் மறுசீரமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவம் உலகின் சிறந்த படைகளில் ஒன்று. எண்ணிக்கையிலும், பலத்திலும், பெருமையான இடத்தை பெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் போர்களிலும், சைனா வுடனான போரிலும், சியாச்சின் மற்றும் கார்கில் போர்களிலும் முத்திரை பதித்தவர்கள் நமது இந்திய ராணுவ வீரர்கள்.

இளம்வயதில் ராணுவத்தில் சேரும் நமது இளைஞர்கள் தம் வாழ்க்கையின் முதல் பகுதியை, புதிய இடத்தில் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதில் முயல்கிறார்கள். புதிய இடம், புதிய உணவுப் பழக்கம், புதிய பணிச்சுமை, புதிய மொழிக்கார்கள் என எல்லமே புதிதாய் தொடங்கி பின்னர் பழகிக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் அடுத்த பகுதி யாக அவர்கள் திருமணம் அமை கிறது. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் பிள்ளை அத்தியாயம் தொடங்கிவிடுகிறது. பிள்ளைகள் சொந்த ஊரில் படிப்பதா? வடநாட்டில் படிப்பதா? என்ற அடுத்த குழப்பம் வரிசையில் நிற்கும். பிள்ளைகளை பணியிடத் திற்கு கூட்டிச்சென்றால் இப்போதுதான் முக்கியமான பிரச்சினை யை ராணுவ வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவுக்குள் இந்தி மொழி வடஇந்தியா முழுவதையும் மறைத்துக்கொண்டு பேருருவுடன் நிற்பது இப்போதுதான் தெரியவரும். வட இந்திய ராணுவ வீரர்களுக்கு இதில் பிரச்சினை ஏதும் இல்லை. அவர்கள் இரு மொழிக்குள் இணைந்து நெடுங்காலம் ஆயிற்றே.

திராவிட மொழிகளுடன் வளர்ந்து, வடக்கை விட குறைந்த போர்க்களங்களை மட்டுமே கண்டு, கலப்பில்லா கலாச்சார வழக்கங்களோடு காணும் ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து ராணுவத் திற்கு செல்வோருக்கு மட்டும் தெரியும் இந்த வடக்கு- தெற்கு வேறுபாடு.

குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ராணுவ வீரர்களுக்கு ரயில் புறப்படும்போது தமிழ் பின்னோக்கி போவது புரிந்து விடும். இத்தனை போராட்டங்களையும் எதிர்கொண்டு கூடவே குடும்பத்தை அழைத்துக் கொண்டு, பிள்ளைகளை இந்தி உடனான ஆங்கிலக் கல்விக்கூடத்தில் சேர்த்து, சிறுகசேர்த்த செல்வத்தையும் கரைத்து, பட்டமோ, பட்டயமோ படிக்கவைக்க அவரது முக்கால் பங்கு வாழ்க்கையும் மூச்சிரைக்க ஓடிவிடும்.

இறுதியாய் தமது குடும்பத்தை சொந்த ஊரிலேயே நிலை நிறுத்தவேண்டும் என்ற கட்டாயம் தொடங்கும். காரணம் பிள்ளைகளின் எதிர்காலம் கல்யாணம், தம்முடைய ஓய்வுப்பகுதி என்ற பன்முக போராட்டத்தின் தீர்வு அது.

நெடுங்கனவுடன், நீண்ட ஏக்கத்தின் நிறைவுகளோடு தமிழகம் வரும் இந்த பணி நிறைவு ராணுவ வீரருக்கு நாம் என்ன செய்தோம்? அவர்களது பிள்ளைகளுக்குத்தான் எந்த கதவை திறந்துவைத்தோம்? தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழை ஒரு பாடமாக படித்திருந்தால் மட்டுமே தமிழக அரசாங்க வேலை கிடைக்கும் என்பது தமிழக அரசின் விதி. பெருமையோடு தமிழ்நாடு திரும்பிய ராணுவ வீரர்களுக்கு பேரிடியாக காத்திக்கும் செய்தி இது.

தமிழக ராணுவ வீரர்களின் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியை முதன் மொழியாகவும், ஆங்கிலத்தை பயிற்று மொழியாகவும் படித்து விட்டு இங்கு வந்த பின்னர் தமது கல்வி சான்றிதழ்களை எல்லாம் ஏக்கத்துடனும், நீர்முட்டும் கண்களுடன் பார்த்து ஏங்குவதை யார் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வார்கள்.

ஏகப்பட்ட கனவுகளுடன் தம் சொந்த ஊருக்கு வந்த இவர்களது எதிர்காலம் என்னாவது? எனவே, ஆட்சியாளர்களும், உயர் அதிகாரிகளும் இனியாவது முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது ராணுவ வீரர்களின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x