Published : 20 Nov 2013 06:49 PM
Last Updated : 20 Nov 2013 06:49 PM
அரிய வகையான தேங்காய் நண்டுகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் அழியும் அபாயத்தில் உள்ளன.
கணுக்காலிகள் உயிரினத்தைச் சேர்ந்தவை நண்டுகள். இதில் பலவகைகள் உள்ளன. பலரும் பார்த்திராத வகையைச் சேர்ந்ததுதான் தேங்காய் நண்டு. பத்து கால்களுடன், ஓட்டினால் ஆன உடலமைப்புக் கொண்ட இவ்வகை நண்டுகள் கடலில் முட்டையிடும். சில நாள்களுக்குப் பின்னர் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக் கொண்டு வாழத் தொடங்கும். ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின்னர், நிலத்தில் குழிகளைத் தோண்டி, அதில் தேங்காய் நார்களைப் பரப்பி வாழும்.
தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து, அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால்தான் தேங்காய் நண்டு என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். மேலும் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் சிறு பூச்சிகளையும் இவை உட்கொள்ளும்.
நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்களிலேயே இந்த நண்டுதான் பெரியது. அதிகபட்சமாக, இரண்டு அடி வரை வளரும். மூன்று கிலோ எடை இருக்கும். மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் தனுஷ்கோடியில் இருந்து தூத்துக்குடி வரையிலும் குருசடைத் தீவு, முயல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுக்கூட்டங்களில் மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள் அதிகம் வாழ்கின்றன. அதுபோன்று, அந்தமான் நிக்கோபர் தீவுக்கூட்டங்களிலும், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் தேங்காய் நண்டுகள் காணப்படுகின்றன. இவை தற்போது அரிதாகி வருகிறது.
தேங்காய் பறிக்க மரம் ஏறுவோர், மரத்தில் நண்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவற்றைக் கொல்வதாலும், இந்த நண்டுகளின் இறைச்சியில் மருத்துவக் குணம் உண்டு என நம்பப்படுவதாலும் அதிகம் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
அரியவகை இத்தகைய நண்டுகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டும் அல்ல. நம் அனைவரின் கடமையும் கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT