Published : 24 Jan 2014 07:01 PM
Last Updated : 24 Jan 2014 07:01 PM
பல குடும்பங்களின் நிம்மதியை சீர்குலைத்துள்ளது திருப்பூர் பாறைக்குழி. சில தினங்களுக்கு முன் 14 வயது சிறுவன் விழுந்து இறந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாறைக்குழியை உடனடியாக மூடவேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன் அப்துல் ரஹ்மான் (14) , திருப்பூர் 44வது வார்டு செம்மேடு கேஜி கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்கச் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்தான்.
சில ஆண்டுகளுக்கு முன், தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை தூக்கி வீசி எறிந்துவிட்டு பல இடங்களில் தேடியலைந்து, கடைசியில் பாறைக்குழிக்குள் தேடியெடுத்தனர். இப்படி பல குடும்பங்களின் நிம்மதியை விழுங்கியுள்ளது இந்த பாறைக்குழி.
கடந்த 10 ஆண்டுகளில் சிறுவர்கள் பலர் பாறைக்குழி பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதும், பின் அக்கம்பக்கத்தில் இருக்கும் பொதுமக்கள் சிறுவர்களை விரட்டிவிடுவதும் தொடர்கதையாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்.
பறிபோகும் உயிர்
பாறைக்குழி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கே.ராமச்சந்திரன் கூறுகையில்,
10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட குழி இது. விறுவிறுவென தோட்டங்கள் அழிக்கப்பட்டு வீடுகள் வளர்ந்தன. பின்னர் அப்படியே தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த பாறைக்குழியானது வழுக்குப்பாறைகள் நிறைந்தது. இப் பகுதியில் பாறைக்குழி மட்டும் அப்படியே உள்ளது. சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு யாருக்கும் (நிலத்தின் உரிமையாளர் உள்பட) பயன்பாடற்ற இந்தக் குழியை மூடச் சொல்லி பல ஆண்டுகளாக அதிகாரிகளை பார்த்துப் பேசி வருகிறோம்.
40 அடி ஆழம்
சிறுவர்கள், மீன்பிடிக்க வருபவர்களை விரட்டிவிடுவோம். அதன் பின் வேலி மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. ஆனாலும், சிறுவர்கள் வேலிக்குள் நுழைந்து சென்று மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு அடி தவறினால் கூட தண்ணீருக்குள் காயங்களோடு உருண்டு விழமுடியும். சுமார் 35 முதல் 40 அடி ஆழம் வரை தண்ணீர் உள்ளது. தண்ணீருக்குள் முள்மரங்கள் மற்றும், குப்பைக்கூளங்கள் கொட்டிக்கிடப்பதால், எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.
அப்துல்ரஹ்மானை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கூட தண்ணீரை பார்த்து அச்சமடைந்தனர். பாறைக்குழிக்குள் ஒருவர் கூட இறங்கவில்லை. அந்த அளவுக்கு மிக மோசமாக அசுத்தமடைந்துள்ளது. பாதாள கரண்டிவிட்டு தேடித்தான் சடலத்தை எடுத்தனர் என்றார்.
அபாயப் பகுதி
இப் பிரச்சினை குறித்து போராடத் தொடங்கியுள்ள திருப்பூர் கோம்பை தோட்டம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், பாறைக்குழியை மூடச்சொல்லி திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் செம்மேடு கேஜி காலனி பகுதியில் உள்ள பாறைக்குழியை மூடச்சொல்லியுள்ளோம். குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் ஒரு இடமாக இந்த பாறைக்குழி உள்ளது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லாத அபாயப் பகுதியாக இருப்பதால், பாறைக்குழியை மூட வேண்டும். மாநகராட்சியின் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் கூட குழியை மூடிவிடலாம். திருப்பூர் ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள பாறைக்குழியை மூடவேண்டும். அடுத்த உயிரிழப்புக்கு முன் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுமீதான நடவடிக்கை குறித்து விசாரித்தபோது, திருப்பூர் ஆட்சியர் குறை தீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது துறை ரீதியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு அறிக்கை தயார் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுப்பார்கள். அதன் பின்னே, நடவடிக்கைக்கு முதல்வரின் தனிப்பிரிவிற்கு பரிசீலனைக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.
மக்களின் மனதில் அச்சத்தை ஆழமாக விதைத்துள்ள பாறைக்குழியை மூட, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் மக்கள். செம்மேடு கேஜி கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT